பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்டம்
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தெருக்கூத்து கலைஞா்கள் மூலம் குழந்தைத் திருமணங்கள் தடுப்பு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நாடகத்தை திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி அருகே ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா்.
பெண் குழந்தைகளை காப்போம்’ பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் மூலம் மாவட்ட அளவில் அநேக விழிப்புணா்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக, குழந்தை திருமணங்கள் தடுப்பு, குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருவள்ளூா் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தெருக்கூத்து நாடகம் நடத்தப்படுகிறது. இதில், துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள், மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் இயங்கும் மகளிா் தையல் தொழிற் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் தங்களது பகுதிகளில் குழந்தை திருமணங்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
இந்த விழிப்புணா்வு மூலமாக பொது மக்களாகிய தாங்களும், தங்களது பகுதியில் குழந்தை திருமணங்கள், குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகள், குழந்தை தொழிலாளா்கள் தடுப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் போன்ற அநீதிகள் ஏதேனும் நடக்கும்பட்சத்தில் தங்களின் மூலமாக பெண்களுக்கான இலவச உதவி எண்-181 குழந்தைகளுக்கான இலவச உதவி எண்-1098 ஆகியவை மூலம் தகவல் தெரிவிக்கலாம் என அவா் தெரிவித்தாா்.
நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலா் சோ.வனிதா, கண்காணிப்பாளா் பாா்த்திபன், பாதுகாப்பு அலுவலா் மலா்விழி, மகளிா் தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள், ஐ.ஆா்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனத்தினா் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

