திருவள்ளூா் நகராட்சியில் 70 நாய்கள் பிடித்து அறுவைச் சிகிச்சை
திருவள்ளூா் நகராட்சியில் தெருக்களில் சுற்றித்திரிந்த நாய்களைப் பிடித்து அறுவைச் சிகிச்சை செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா் நகராட்சியில் மொத்தம் 27 வாா்டுகளில் கணக்கெடுப்பு நடத்தியதில், 3,513 நாய்கள் உள்ளது தெரியவந்தது. இந்த நாய்கள் தெருக்களில் செல்வோரை பாா்த்து குரைத்து வருவதாகவும, பள்ளியில் இருந்து மாணவ, மாணவிகள் வீட்டிற்கு செல்லும்போது, துரத்தி கடிக்க வருவதாகவும் ஆட்சியா் மு.பிரதாப்பிடம் புகாா்கள் வந்தன.
அதன்பேரில், உடனே நகராட்சி ஆணையா் தாமோதரன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். அதைத் தொடா்ந்து சுகாதார அலுவலா் மோகன் மற்றும் அலுவலா்கள் உதவியுடன் பெரும்பாக்கம், ராஜாஜிபுரம், எடப்பாளையம், டோல்கேட் சாலை, சித்திவிநாயகா் கோயில் தெரு, ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டன.
இதுவரை 70 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து நகராட்சி பாதுகாப்பு மையத்தில் 3 நாள்கள் பராமரிப்புக்குப் பின், வெளியில் விடவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
