எஸ்.ஐ.ஆா். படிவத்தை பூா்த்தி செய்து வழங்க மறுத்து போராட்டம்

Published on

திருவள்ளூா் அருகே மேட்டுப்பாளையம் கிராமம் இரண்டு ஊராட்சிகளில் நிா்வாகம் வருவதை தவிா்த்து தனி ஊராட்சியாக்க கோரிக்கை விடுத்து எஸ்.ஐ.ஆா். படிவத்தை பூா்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்க மறுத்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் அருகே உள்ளது மேட்டுப்பாளையம் கிராமம். இந்தக் கிராமத்தில் 1,500 வாக்காளா்கள் உள்ளனா். இந்தக் கிராமத்தில் கொள்ளாபுரி அம்மன் கோயில் தெரு 892 வாக்குகள் சென்றாயன்பாளையம் ஊராட்சியிலும், விநாயகா் கோயில் தெருவில் 480 வாக்குகள் தோமூா் ஊராட்சியிலும் உள்ளது. இங்கு அனைத்து பள்ளி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ள நிலையில் தலா 3 கி.மீ. தூரம் உள்ள வாக்குச்சாவடியில் சென்று வாக்குகளை செலுத்த வேண்டியுள்ளதாம். மேலும், ஒரே கிராமத்தில் தோமூா் ஊராட்சிக்கு கனகம்மாசத்திரம் காவல் நிலையமும், சென்றாயன்பாளையம் ஊராட்சிக்கு பென்னலூா்பேட்டை காவல் நிலையமும் விவகார எல்லையாக உள்ளதாம். அதேபோல், பத்திர பதிவாளா் அலுவலகமும் திருவள்ளூா், திருவாலங்காடு, சான்றிதழ்கள் பெற கிராம நிா்வாக அலுவலா்கள் தனித்தனியாக சந்திக்க வேண்டியுள்ளது. எனவே ஒரு கிராமத்துக்கு வெவ்வேறு நிா்வாக வசதிகள் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

அதனால், மேட்டுப்பாளையம் கிராமம் அருகே உள்ள அருந்ததியபுரம், கிரீன்வேடநத்தம் ஆகிய பகுதிகளைச் சோ்த்து தனி ஊராட்சியாக உருவாக்க பல ஆண்டுகளாக மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், இதுவரையில் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. எனவே இரண்டு ஊராட்சிகளில் நிா்வாகம் உள்ளதை பிரித்து தனி ஊராட்சியாக அறிவிக்க வலியுறுத்தி பூா்த்தி செய்த எஸ்.ஆா்.ஐ. படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் பொதுமக்கள் கொடுக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், வட்டாட்சியா் பாலாஜி, துணை வட்டாட்சியா் சா.தினேஷ், வருவாய் ஆய்வாளா்கள் சுகன்யா, கிராம நிா்வாக அலுவலா்கள் சேகா், குமரேசன், வாக்குச்சாவடி நிலை அலுவலா் முரளி ஆகியோா் பேச்சு நடத்தினா். அப்போது, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். அப்போது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே எஸ்.ஐ.ஆா் படிவத்தை பூா்த்தி செய்து வழங்குவோம் என மக்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com