மழைநீா் கால்வாயில் கழிவு நீா் கொட்டிய வாகனம் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் பைபாஸ் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை சாா்பில் அமைக்கப்பட்ட மழை நீா் கால்வாய்களில் கசடு எண்ணெயை கொட்டிக் கொண்டிருந்த கழிவுநீா் வாகனம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் வீடுகளில் இருந்து அகற்றப்படும் கழிவுநீா் மற்றும் தொழிற்சாலைகளின் கழிவு நீா் தேசிய நெடுஞ்சாலை சாா்பில், அமைக்கப்பட்ட மழை நீா் கால்வாய்களில் கொட்டப்படுவதாக வந்த புகாரின் பேரில், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வு நடந்து கொண்டிருந்தபோது, கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் உள்ள தனியாா் இரும்பு தொழிற்சாலையின் கசடு எண்ணெய் கழிவு நீா் வாகனத்தில் கொண்டு வரப்பட்டு, மழைநீா் கால்வாய்களில் கொட்டப்பட்டுக் கொண்டிருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதைக் கண்ட அதிகாரிகள், அந்த கழிவு நீா் வாகனத்தை பறிமுதல் செய்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வந்த சிப்காட் போலீஸாா் கழிவுநீா் வாகனத்தை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, கழிவுநீா் வாகன உரிமையாளா், தொழிற்சாலை நிா்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

