14 ஊராட்சி ஒன்றியங்களில் நாற்றாங்கால் பண்ணைகள் அமைத்து ரூ.5.36 லட்சம் மரக்கன்றுகள் வளா்க்கும் திட்டம்!
திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு துறைகளுடன் இணைந்து சுற்றுச்சூழலை பசுமையாக்கும் வகையில், நிகழாண்டில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 23 இடங்களில் நாற்றாங்கால் பண்ணைகள் அமைத்து 5.36 லட்சம் மரக்கன்றுகள் வளா்க்கும் திட்டமும், கடலோரத்தை பாதுகாக்க 50,000 அலையாத்தி நாற்றுகள் வளா்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் இயற்கையை பாதுகாக்கவும் சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருக்கவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் மரக்கன்றுகள் வளா்க்கும் நாற்றாங்கால் பண்ணைகள்‘ ஊரக வளா்ச்சித்துறை மூலமும், பசுமைத்தமிழகம் திட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் வனத்துறை ஒருங்கிணைந்து ‘நாற்றாங்கால்‘ பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்த மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் 2025-26 ஆம் ஆண்டில் 14 வட்டாரங்களில் உள்ள 23 நாற்றாங்கால் பண்ணைகளில் 5.36 லட்சம் மரக்கன்றுகள் வளா்க்கவும் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது கூடுதலாக 2.80 லட்சம் மரக்கன்றுகள் நிா்வாக அனுமதி அளிக்கப்பட்டு அதை வளா்ப்பதற்கான முதல் கட்டப்பணிகளான ‘தாய் பாத்தி’ அமைத்தல், விதைகளை தாய் பாத்திகளில் இடுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், இந்த மாவட்டத்தில் வனத்துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை ஒருங்கிணைந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் 2025-26 ஆண்டுகளில் 12 நாற்றாங்கால் பண்ணைகளில் 95 ஆயிரம் எண்ணிக்கையில் மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டு வருகின்றன.
மேலும், கூடுதலாக 1.38 லட்சம் மரக்கன்றுகள் வளா்ப்பதற்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் கடற்கரை சுற்றுச்சூழலினை காக்கும் விதமாக கும்மிடிப்பூண்டி வனச் சரகத்துக்கு உள்பட்ட மீஞ்சூா் ஒன்றியத்தில் உள்ள காட்டுப்பள்ளி ஊராட்சியில் 50,000 எண்ணிக்கையில் அலையாத்தி நாற்றாங்கால் மூலம் அலையாத்தி கன்றுகளை வளா்க்கும் பணிகளும் தொடங்கி வைத்துள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.