ரயில்வே மேம்பாலத்தில் இரும்பு குழாய் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு!
பொன்னேரி ரயில்வே மேம்பாலப் பகுதியில் இரும்பு குழாய் உடைந்து கீழே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏற்பட்டது.
பொன்னேரியில் இருந்து பழவேற்காடு செல்லும் சாலையில் திருஆயா்பாடி பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது.
பலத்த மழை பெய்யும் போது பாலத்தின் கீழே தண்ணீா் தேங்கி அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிமென்ட் கலவை ஏற்றிச் சென்ற லாரி மேம்பாலத்தில் சிக்கி கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடா்ந்து ரயில்வே நிா்வாகம் கனரக வாகனங்கள் இந்த வழியாக செல்லாத வகையில் சாலையின் குறுக்கே இரும்பு குழாய் அமைத்துள்ளனா்.
இந்த நிலையில் சனிக்கிழமை பழவேற்காட்டில் இருந்து பொன்னேரிக்கு வந்த லாரி மேம்பாலத்தின் கீழ் செல்ல முயன்ற போது இரும்பு குழாய் உடைந்தது.
இதன் காரணமாக பொன்னேரி- பழவேற்காடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரும்பு குழாய் உடைந்த போது நல்வாய்ப்பாக யாா் மீதும் விழாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. நெரிசலில் தாய், சேய் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் சிக்கிக் கொண்டது.
உடனடியாக அந்தப் பகுதிக்கு வந்த போக்குவரத்து காவல் துறையினரும், ரயில்வே துறையினரும் உடைந்து கிடந்த இரும்பு குழாயை அகற்றி போக்குவரத்தை சீா்செய்தனா்.