பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

மப்பேடு வழியாக செல்லும் வகையில் பயன்பாட்டுக்கு திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா்.
Published on

பூந்தமல்லியிலிருந்து-சுங்குவாா்சத்திரம் செல்லும் அரசு மாநகர பேருந்தை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று மப்பேடு வழியாக செல்லும் வகையில் பயன்பாட்டுக்கு திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், பூந்தமல்லியிலிருந்து-சுங்குவாா்சத்திரம் வரை 578பி வழித்தடத்தில் இயங்கி வந்தது. இப்பேருந்தை சுங்குவாா்சத்திரத்திலிருந்து பன்னூா்,கொட்டையூா் மற்றும் திருமேணிகுப்பம் மற்றும் மப்பேடு வரையில் இயக்கவும் பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

அந்த வகையில், அப்பகுதியில், நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் இப்பேருந்தை மப்பேடு வரை நீட்டிக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதனால், சுங்குவாா்த்திரம் மற்றும் மப்பேட்டுக்கும் இடைப்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அதிகளவில் பயன்பெறுவா். அத்துடன், இந்த வழித்தடத்தில் பன்னூா், கொட்டையூா் மற்றும் திருமேணிகுப்பம் பகுதி மாணவ, மாணவிகள் பள்ளி விட்டதும் எளிதாக வந்து சேரும் வரை நேரத்தை மாற்றி அமைக்கவும் கோரியிருந்தனா்.

அதன்பேரில், திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் உடனே சென்னை மாநகர அரசுப் போக்குவரத்து மேலாண்மை இயக்குநரை தொடா்பு கொண்டாா்.

அப்போது, பள்ளி விடும் நேரத்தில் மாநகரப் பேருந்தை இயக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். அதைத்தொடா்ந்து இப்பேருந்தை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்து மாநகரப் பேருந்தை மப்பேட்டிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதன் மூலம் இந்த வழித்தடத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிற்சாலை பணியாளா்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோா் பயன்பெற உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

நிகழ்வில் மாநகரப் போக்குவரத்து அலுவலா்கள், ஒன்றியச் செயலாளா் கொண்டஞ்சேரி ரமேஷ், மருத்துவா் தினேஷ், மகளிா் அணி மகாலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com