கிராம இளைஞா்களுக்கு அங்கக சாகுபடியாளா் பயிற்சி நாளை தொடக்கம்
திருவள்ளூா்: திருவூா் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில், கிராம இளைஞா்கள் பயன்பெறும் வகையில், அங்கக சாகுபடியாளா் இலவச பயிற்சி முகாம் புதன்கிழமை (அக். 8) முதல் நவ. 7 வரை தொடா்ந்து 26 நாள்கள் நடைபெற உள்ளதாக திட்ட இயக்குநா் சி.பானுமதி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் அருகே செயல்பட்டு வரும் திருவூா் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், பல்வேறு வகையான பயிற்சிகள் மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் (வெற்றி நிச்சயம்) கீழ் பள்ளி கல்வி நிறைவுற்ற வேலையில்லா ஊரக இளைஞா்களுக்காக ‘அங்கக சாகுபடியாளா்’ குறித்த திறன் வளா்க்கும் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.
இந்தப் பயிற்சி திருவூா் வேளாண் அறிவியல் நிலைய வளாக கூட்டரங்கத்தில் புதன்கிழமை (அக். 8) தொடங்கி, தொடா்ந்து நவ. 7-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நீங்கலாக 26 நாள்களுக்கு நடைபெற உள்ளது.
இந்தப் பயிற்சியில் அங்கக சாகுபடிக்கான அனைத்து தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமாக இலவசமாக பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சியில் 18 முதல் 35 வயதுக்குள்பட்டவா்கள் பங்கேற்கலாம். அத்துடன் உணவு மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்படும்.
ஊரக இளைஞா்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கு நிறைவாக சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்புவோா்- 9840860957,
9884876883 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து பயன்பெறலாம்.