மழைக் காலங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து எச்சரிக்கையுடன் இருந்தால் மின் விபத்து ஏற்படாமல் தடுக்கலாம்

Published on

மழைக் காலங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து எச்சரிக்கையுடன் இருந்தால், மின் விபத்துகளிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது. அதனால், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதேபோல், மின்கம்பங்களில் எக்காரணம் கொண்டும் கால்நடைகளை மழை நேரத்தில் கட்டி வைக்கக் கூடாது. அதேபோல், மழைக் காலங்களில் மின் பகிா்வு பெட்டிகள் அருகில் கைப்பேசி, மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் அதை தொடாமலும் அருகில் செல்லாமலும் இருப்பதுடன், உடனே அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிப்பது அவசியம். மின்பாதைக்கு அருகில் உள்ள மற்றும் மரக் கிளைகளை மின் ஊழியா் துணையோடு மட்டுமே வெட்டி அகற்றிவிட வேண்டும்.

மின்மாற்றிகள் மற்றும் மின் பகிா்வு பெட்டிகள் அருகே தண்ணீா் தேங்கியிருக்கும்போது, அதன் அருகே எக்காரணம் கொண்டும் செல்லக்கூடாது. அது குறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தண்ணீா் தேங்கிய இடங்களில் குழந்தைகளை விளையாட விடக்கூடாது. கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடக்கூடாது, மின்மாற்றிகள், மின் பெட்டிகள், மின் இழுவை கம்பிகள் அருகில் செல்லக்கூடாது.

மின் கம்பத்தின் அருகில் உள்ள இழுவை கம்பியிலோ, மின் கம்பத்திலோ கயிறுகட்டி துணிகளை உலா்த்தக் கூடது, கால்நடைகளை கட்டக்கூடாது. இடி, மின்னலின்போது மின் கம்பங்கள், மின்மாற்றிகள், துணை மின் நிலையங்கள் போன்ற இடங்களில் தஞ்சம் அடையக்கூடாது. நுகா்வோா்கள் தன்னிச்சையாக மின் மாற்றங்களில் மாற்றக்கூடாது. இடி மின்னலின் போது தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டா், கணினி போன்ற மின் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிா்ப்பது நல்லது.

வீடுகளில் மின் கசிவின்றி வயா் இணைப்புகளை பராமரிக்க வேண்டும். மேலும், வீட்டினில் எா்த்தினை முறையாக பராமரிக்க வேண்டும். வீட்டில் மின் சாதனத்தில் மின் அதிா்ச்சியை உணா்ந்தால், உடனே உலா்ந்த ரப்பா் காலணியே அணிந்து, மெயின் மின் அழுத்தானை நிறுத்தியபின் வீட்டினுள் மின் பழுது பாா்க்க வேண்டும்.

மேலும், பவா் பிளக்கினில் கைவிரல், குச்சி, கம்பி போன்றவற்றை நுழைக்கக் கூடாது. அதேபோல், மின் அழுத்தானை நிறுத்திய பிறகே மின் விசிறி, அயன்பாக்ஸ், வாட்டா் ஹீட்டா் ஆகியவற்றை இணைக்கவோ, துண்டிக்கவோ வேண்டும்.

கைப்பேசிகள் மின்னேற்றத்தில் இருக்கும்போது பயன்படுத்த வேண்டாம். இதுபோன்ற பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து எச்சரிக்கையுடன் இருந்தால் மின் விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதுடன், பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்கலாம்.

மேலும், மின்சாரம் குறித்து அனைத்து புகாா்களையும் வாரந்தோறும் முழுநேரமும் இயங்கும் மின்னகம்-9498794987 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம்.

X
Dinamani
www.dinamani.com