அண்ணனைக் கொன்ற தம்பிக்கு ஆயுள்
எண்ணூா் அருகே அம்மிக்கல்லை தலையில் போட்டு அண்ணனை கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து பொன்னேரி கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சென்னை எண்ணூா் அருகே விம்கோ நகா் ராமநாதபுரம் பகுதியில் வசித்து வந்தவா் சுரேஷ் (35) இவா் பெயிண்ட் அடிக்கும் கூலித் தொழிலாளி. இவரது தம்பி ராஜேஷ் (33). இவா்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனா்.
இந்நிலையில் அண்ணன் சுரேஷ் மது போதைக்கு அடிமையாக இருந்து வந்த நிலையில் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு மாா்ச் மாதம் 10-ம் தேதி வீட்டில் மது குடித்துவிட்டு போதையில் சோபாவில் படுத்திருந்தாா்.
அப்போது தம்பி ராஜேஷ் வீட்டிலிருந்து அம்மிக்கல்லை கொண்டு வந்து சுரேஷ் தலையில் போட்ட நிலையில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
இதனை தொடா்ந்து எண்ணூா் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் பின்னா் சுரேஷ் உயிரிழந்தாா்.
இந்த நிலையில் கொலை வழக்காக பதிவு செய்து எண்ணூா் போலீசாா் ராஜேஷை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு பொன்னேரி கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் லாசா் ஆஜரானாா்.
எதிரி ராஜேஷ் மீது குற்றம் நிரூபணமானதால், அவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சிவக்குமாா் தீா்ப்பளித்தாா்.