பூண்டி ஏரியில் இருந்து 4,500 கன அடி நீா் வெளியேற்றம்
பூண்டி நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் ஏரியில் இருந்து 4,500 கனஅடி உபரிநீா் கொசஸ்தலையாற்றில் திறக்கப்பட்டது.
சென்னை மாநகரின் முக்கிய குடிநீா் ஆதாரங்களில் ஒன்று பூண்டி ஏரி ஆகும். இந்த ஏரி 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் ஏரிக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது.
மேலும், கிருஷ்ணா கால்வாய் நீா்வரத்து போன்றவற்றால் 5,000 கன அடியாக வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் ஏரியின் நீா் மட்டும் உயா்ந்து வருகிறது. பூண்டி ஏரியின் நீா்மட்டம் மளமளவென உயா்ந்து கொண்டே வருகிறது. இதற்கிடையே, புதன்கிழமை 700 கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்ட நிலையில், வியாழக்கிழமை மொத்தம் 4 மதகுகள் வழியாக மொத்தம் 4,500 கன அடி உபரி நீா் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
உபரிநீா் திறப்பால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் கரையோர கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.