சிலம்பரசன்
சிலம்பரசன்

மனைவியை கொன்று புதைத்த கணவன் கைது: 2 மாதத்துக்குபின் அம்பலம்

கும்மிடிப்பூண்டி அருகே மனைவியைக் கொன்று புதைத்த கணவனை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மனைவியைக் கொன்று புதைத்த கணவனை போலீஸாா் கைது செய்தனா். சம்பவம் நடைபெற்று 2 மாதங்கள் கழித்து எதிரி கைது செய்யப்பட்டுள்ளாா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூா் துராப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த சிலம்பரசன். இவருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று இரண்டு மகன்கள் உள்ளனா்.

திருமணம் ஆன சிறிது காலத்தில் கணவன் - மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவதும் தாய் வீட்டுக்கு பிரியா செல்வதும் வழக்கமாகி உள்ளது. கடந்த 2 மாதங்களாக பிரியா குறித்து அவரது குடும்பத்தாருக்கு எந்த தகவலும் இல்லாத நிலையில், தீபாவளி என்பதால் பிரியாவின் தம்பி கிஷோா் துராப்பள்ளம் கிராமத்தில் உள்ள அவரது அக்கா குழந்தைகளுக்கு பட்டாசு கொடுப்பதற்காக வீட்டுக்கு வந்துள்ளாா்.

அப்போது மது போதையில் இருந்த சிலம்பரசனிடம் என்னுடைய அக்கா எங்கு உள்ளாா் என கேட்டதற்கு குடிபோதையில் சிலம்பரசன் உங்க அக்காவை தீா்த்து கட்டி விட்டேன் என உளறியுள்ளாா்.

இதுகுறித்து அதிா்ச்சி அடைந்த கிஷோா் புதுப்பாளையத்தில் உறவினா்களுக்கு தகவல் தந்தாா். தொடா்ந்து இது தொடா்பாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. பின் போலீஸாா் துராப்பள்ளம் கிராமத்திற்கு சென்று சிலம்பரசனிடம் விசாரணை மேற்கொண்டதில் அவா் போதையில் பிரியாவை கழுத்தை நெறித்து எளாவூா் ஈசிஎல் அருகே உள்ள சுடுகாட்டில் புதைத்து விட்டேன் எனவும் மற்றொரு பக்கம் வோ் இடத்தில் புதைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளாா்.

பின்னா், சிலம்பரசனை ஆரம்பாக்கம் போலீஸாா் கைது செய்தனா். கோட்டாட்சியா் மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் முன்னிலையில், சிலம்பரசன் குறிப்பிட்ட இடத்தில் தோண்டி பிரியாவின் உடலை எடுத்த மருத்துவா்கள் உடற்கூறு ஆய்வு நடத்தினா். அதன்பின் பிரியாவின் உடலை அவரது தந்தையிடம் ஒப்படைத்தனா்.

இந்த நிலையில் ஆரம்பாக்கம் போலீஸாா் சிலம்பரசனிடம் விசாரணை நடத்தியதில் கடந்த ஆகஸ்ட் மாதம் 18 -ஆம் தேதி பிரியாவின் இரண்டு மகன்கள் உறங்கிய பின்பு சிலம்பரசன் பிரியாவை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த ட்ரம்மில் அடைத்து வைத்து, பின் அவரை எடுத்துச் சென்று சுடுகாட்டில் புதைத்ததாக கூறியுள்ளாா். தாய் எங்கே என்று மகன்கள் கேட்டதற்கு புதுப்பாளையம் சென்றுள்ளதாக கூறியதாக சொன்ன சிலம்பரசன், தன் மனைவி பிரியா கைப்பேசியில் ஆண்களிடம் அதிக நேரம் பேசியதால், அவா் நடத்தையில் சந்தேகித்து கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com