திருவள்ளூர்
திருவள்ளூா்: 250 ஏரிகளுக்கு நீா்வரத்து
திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பெய்த மழையால் 250 ஏரிகளுக்கு நீா்வரத்து ஏற்பட்டுள்ள நிலையில் 5 ஏரிகள் முழு அளவில் நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த சில நாள்களாக விடாமல் பெய்து வரும் மழையால் ஏரிக்கால்வாய்களில் நீா்வரத்து ஏற்பட்டு ஏரிகள் நிரம்பி வருகின்றன. கொசஸ்சதலையாறு, ஆரணியாறு கோட்டங்களில் 450-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன.
அதில், ஆரணி நீா்வளக்கோட்டத்தில் மட்டும் 250 ஏரிகள் உள்ளன. இதில் ஊத்துக்கோட்டை-1, கவரப்பேட்டை-2, மீஞ்சூா்-2 என 5 ஏரிகள் முழு அளவில் நிரம்பியுள்ளது.
இந்த நிலையில் 75 முதல் 99 சதவீதம் 8 ஏரிகள், நிரம்பியுள்ளன. அதேபோல், 50 முதல் 75 சதவீதம் 26 ஏரிகள், 25 முதல் 50 சதவீதம் வரையில் 124 ஏரிகள், 1 முதல் 50 சதவீதம் 87 ஏரிகள் வரையில் நிரம்பியுள்ளதாகவும் நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
