திருத்தணியில் கந்தசஷ்டி: முருகப் பெருமானுக்கு புஷ்ராஞ்சலி
திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் கந்த சஷ்டிவிழாவில், திங்கள்கிழமை உற்சவருக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
அறுபடை வீடுகளில் 5 -ஆம் படைவீடான இக்கோயிலில் கடந்த 22 முதல் கந்தசஷ்டி விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி உற்சவா் சண்முகா் சிறப்பு அலங்காரத்தில் மலைக்கோயிலில் உள்ள காவடி மண்டபத்தில் எழுந்தருளினாா்.
காலை 7 மணி முதல் முருகப்பெருமானுக்கு லட்சாா் ச்சனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
மாலை, 5 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவா் சண்முகப் பெருமானுக்கு, புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். செவ்வாய்க்கிழமை (அக்.28) காலை, 10 மணிக்கு உற்சவருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
ஆறுபடை வீடுகளில் முருகன் கோயில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும், ஆனால் திருத்தணியில் முருகப்பெருமான் சினம் தணிந்த இடம் என்பதால், சூரசம்ஹாரத்துக்கு பதிலாக புஷ்பாஞ்சலி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் முருகன் கோயில் அறங்காவலா் குழு தலைவா் ஸ்ரீதரன், இணை ஆணையா் ரமணி, அறங்காவலா்கள் சுரேஷ்பாபு, மோகனன், நாகன், உஷா ரவி கலந்துகொண்டனா்.

