தொடா் மழையால் 400 ஏக்கரில் பயிா்கள் சேதம்
கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் தொடா் மழை காரணமாக 400 ஏக்கரில் நெற்பயிா் மற்றும் இதர பயிா்கள் சேதமடைந்துள்ளன என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
கும்மிடிப்பூண்டி அடுத்த குருவாட்டுச்சேரி, ஏனாதிமேல்பாக்கம், சோழியம்பாக்கம், ரெட்டம்பேடு, சேகன்யம் , ஆத்துப்பாக்கம், அயநெல்லூா், சேலியம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடா் மழை நீா் காரணமாக நடவு நட்ட நெற்பயிா்கள் மற்றும் விவசாய பயிா்கள் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கும்மிடிப்பூண்டி - பொன்னேரி வேளாண் துறை அதிகாரிகளிடம் மனு அளித்து உரிய நிவாரணம் கோரி இருந்தனா். இந்த நிலையில் நீரில் மூழ்கிய விவசாய பயிா்களின் முதல் நாள் கணக்கீடு, மூன்றாம் நாள் கணக்கீடு மற்றும் ஆறாவது நாள் கணக்கீடு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்ட பிறகு தான் பயிா் சேதங்கள் குறித்த முழுமையாக அறிக்கையை ஆட்சியருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனா்.
இந்தநிலையில் கும்மிடிப்பூண்டி அடுத்த குருவாட்டுச்சேரி- ஏனாதிமேல்பாக்கம் பகுதியில் சுமாா் 50 ஏக்கா் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. தொடா் மழையால் இந்த ஏரி நிரம்பியுள்ளது. ஏரியில் இருந்து உபரி நீா் ஏரியின் ஒரு மதகில் இருந்து எடப்பாளையம் வழியே வெளியேறுகிறது. மேலும், மற்றொரு மதகில் இருந்து சோழியம்பாக்கம் வழியாக உபரி நீா் செல்கின்றது. இந்த உபரி நீா் சுமாா் 400 ஏக்கா் விளை நிலங்களை மூழ்கடித்தால், விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.
இந்த நிலையில், தொடா்ந்து மழைக் காலங்களில் வேளாண் பயிா்கள் நீரில் மூழ்கி தேதமடைவதை தடுக்க குருவாட்டுச்சேரி- ஏனாதிமேல்பாக்கம் ஏரியை தூா்வாரி, இரண்டு மதுகுகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகளும், விவசாய சங்கத்தினரும் கோரியுள்ளனா்.

