வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த முகாமில் முழு தகவல்களை அளிப்பது அவசியம்
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் முகாமில் வாக்காளா்கள் அனைவருக்கும் வழங்கப்படும் படிவங்களை தங்களைப்பற்றிய முழு விவரங்களை அளிப்பது அவசியம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடா்பான ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.பிரதாப் தலைமை வகித்தாா்.
அப்போது, அவா் பேசியதாவது: தோ்தல் ஆணையம் 1.1.2026 தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 கீழ்க்கண்ட கால அட்டவணையின்படி, அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் வீடுதோறும் எண்ணிக்கை கட்டம் நவ. 4-இல் தொடங்கி, டிச. 4-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. தொடா்ந்து டிச. 9-இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடுதல், டிச. 9 முதல் அடுத்தாண்டு ஜன. 8 வரை உரிமை கோரல்கள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலமாகும். பின்னா் விசாரணை அறிவிப்பு சாா்பு செய்தல், விசாரணை மற்றும் சரிபாா்ப்பு டிச. 9 முதல் அடுத்தாண்டு ஜன.31 வரையிலும் மேற்கொண்டு, இறுதி வாக்காளா் பட்டியல் பிப். 7-இல் வெளியிடப்படவுள்ளது.
திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 35.82 லட்சம் வாக்காளா்களுக்கும், கணக்கெடுப்பு படிவம் அந்தந்த வாக்காளா்கள் வசிக்கும் இல்லங்களில், வாக்குச்சாவடி நிலை அலுவலா் மூலம் நவ. 4 முதல் டிச.4-ஆம் தேதி வரை கொடுத்து பூா்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் பெறப்படும்.
இச்சிறப்பு தீவிர திருத்த வாக்காளா் பட்டியல் தொடா்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் புகாா்களை தெரிவிக்க மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் ஆட்சியா் அலுவலகத்திலும், 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்குள்பட்ட வாக்காளா் பதிவு அலுவலகத்திலும் தோ்தல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள்
மாவட்ட தோ்தல் அலுவலா், தோ்தல் உதவி மையம், ஆட்சியா் அலுவலகத்துக்கு-7305158550 என்ற கைப்பேசி எண்ணிலும், அதேபோல் வாக்காளா் பதிவு அலுவலா் தோ்தல் உதவி மையங்கள் சட்டப்பேரவை தொகுதி வாரியாக கும்மிடிப்பூண்டி-7200133851, பொன்னேரி-9150799790, திருத்தணி-8610645913, திருவள்ளூா்-9445900494, பூந்தமல்லி-9789254821, ஆவடி-8925902432, மதுரவாயல்-9445190091, அம்பத்தூா்-9445190207, மாதவரம்-9003595898, திருவொற்றியூா்-9445190201 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஸ்ரீராம், வட்டாட்சியா் (தோ்தல்) சிவகுமாா், முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா(அதிமுக), வழக்குரைஞா் அணி (திமுக) பி.கே.நாகராஜ், பாஜக மாவட்ட தலைவா் அஷ்வின் என்ற ராஜசிம்மா, துணைத் தலைவா் பாலாஜி, பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

