வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை, ரூ. 47,000 திருட்டு
திருவள்ளூா்: திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 47,000 ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருவள்ளூா் கே.கே.ஆா். மில்லினியம் சிட்டியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (45). இவரது தம்பி மனைவி உயிரிழந்த துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாள்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சிங்கபெருமாள் கோயிலுக்கு சென்றாா். பின்னா், ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பினா். அப்போது, வெளியே கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, படுக்கை அறையில் இருந்த 2 பீரோக்களை உடைத்து, அதிலிருந்த 3 சவரன் நகை, ரூ. 47,000 ரொக்கம் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து திருவள்ளூா் நகர காவல் நிலையத்தில் ஆனந்தன் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.