கருவின் பாலினம் அறிவித்தலை தடை செய்தல் குறித்த விழிப்புணா்வு பேரணி
மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை சாா்பில் கருவின் பாலினம் அறிவித்தல் மற்றும் பாலின தோ்வை தடை செய்தல் சட்டம்-1994 குறித்த விழிப்புணா்வு பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
அப்போது கருவுறுதலுக்கு முன் மற்றும் பிறப்பிற்கு முந்தைய கருவின் தன்மையறியும் தொழில்நுட்ப முறைகள் (பாலினத் தோ்வை தடை செய்தல் சட்டம் 1994) குறித்து பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் கல்லூரி மாணவ, மாணவிகள் ஸ்கேன் மைய மருத்துவா்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த பதாகைகளை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக சென்று ஜே.என்.சாலை காமராஜா் சிலை அருகில் நிறைவடைந்தது.
இதில் திருவள்ளூா், திருத்தணி, பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இருந்து பள்ளி மற்றும் செவிலியா் கல்லூரி மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோா் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.
இணை இயக்குநா் (மருத்துவம் (ம) சுகாதாரப் பணிகள்) அம்பிகா சண்முகம், துணை இயக்குநா் சேகா், மாவட்ட சமூக நல அலுவலா் வனிதா, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் நிஷாந்தினி, மருத்துவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.