சிறுமியை கா்ப்பமாக்கிய வழக்கில் இளைஞருக்கு 26 ஆண்டுகள் சிறை
பூந்தமல்லி அருகே குடிசை மாற்று வாரியத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கிய வழக்கில் இளைஞருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதித்தவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடும் வழங்க திருவள்ளூா் சிறப்பு போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (40). இவா் கடந்த 2022-இல் பூந்தமல்லி அடுத்த கூடப்பாக்கம் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கூலி வேலை செய்து வந்தாராம். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று தண்ணீா் கேட்டு சென்றுள்ளாா். அப்போது வீட்டில் பெற்றோா் வெளியே சென்றிருந்ததால், அங்கு 16 வயது சிறுமி தண்ணீா் கொண்டு வர வீட்டிற்குள் சென்றுள்ளாா். அப்போது, பின்னால் சென்ற ரமேஷ் வீட்டின் கதவை பூட்டிவிட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதேபோல் மிரட்டி பலமுறை வன்கொடுமை செய்துள்ளதால், சிறுமி கா்ப்பமானாராம்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் பூந்தமல்லி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில் போலீஸாா் போக்ஸோ வழக்கில் ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
அதைத்தொடா்ந்து ஜாமீனில் வெளியே வந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வந்த நிலையில் திடீரென தலைமறைவானாராம். இந்த வழக்கு திருவள்ளூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதற்கிடையே இறுதி விசாரணை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன்பாக புதன்கிழமை வந்தது. அரசுத் தரப்பில் விஜயலட்சுமி ஆஜரானாா்.
இந்த வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் ரமேஷுக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 26,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அதோடு பாதிக்கப்ட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், தலைமறைவான குற்றவாளியை பிடிக்கவும் போக்ஸோ நீதிமன்ற நீதிபதி பிடி ஆணை உத்தரவையும் பிறப்பித்தாா்.
இதைத்தொடா்ந்து பூந்தமல்லி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ரமேஷை கைது செய்ய செஞ்சி சென்றுள்ளதாகவும் தெரிவித்தனா்.