திருவள்ளூா் நீதிமன்ற வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர சோதனை
திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக இ-மெயிலில் வந்த தகவலை தொடா்ந்து மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் 3 மணி நேரம் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
திருவள்ளூரில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம், மகிளா நீதிமன்றம், போக்சோ நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம் உள்பட இரண்டு இணைப்பு கட்டடங்களில் 14 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. அதனால் வாதிகள், பிரதிவாதிகள் ஆகியோா் வந்து செல்வது உண்டு. அதேபோல் 500-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்களும், நீதிமன்ற ஊழியா்களும் வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில், திருவள்ளூா் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக புதன்கிழமை இ-மெயிலில் தகவல் ஒன்று வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல் துறையினருக்கு கொடுத்த தகவலை அடுத்து எஸ்.பி. விவேகானந்தா சுக்லா சோதனை செய்ய உத்தரவிட்டாா். அதன்படி மோப்பநாய் பிரிவு சாா்பு ஆய்வாளா்கள் திவாகா், பழனி மற்றும் தலைமை காவலா் ஆல்பா்ட், மோப்பநாய் பிரிவு காவலா் பிரபாகரன் ஆகியோா் மோப்ப நாய் ஹல்க் உடன் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
3 மணி நேர சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால் வெறும் புரளி என காவல் துறையினா் தெரிவித்தனா். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.