அரசுப் பேருந்து பஞ்சராகி நின்றதால் பயணிகள் அவதி
திருவள்ளூரில் இருந்து தக்கோலம் சென்ற அரசுப் பேருந்து திடீரென பஞ்சரானதால் கடம்பத்தூா் மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட நிலையில் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
திருவள்ளூா் பேருந்து நிலையத்திலிருந்து டி.19 என்ற அரசுப் பேருந்து தக்கோலத்துக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றது. அந்தப் பேருந்தில் 30-க்கும் மேற்பட்டோா் பயணித்த நிலையில், கடம்பத்தூா் மேம்பாலத்தின் மீது ஏறி இறங்கியதும் திடீரென டயா் பஞ்சராகி பாதி வழியில் நிறுத்தப்பட்டது. இதனால், அந்தப் பேருந்தில் பயணித்த பயணிகள் மிகவும் அவதிக்கு ஆளாகினா்.
நீண்ட நேரத்திற்கு பிறகு வந்த தனியாா் பேருந்தில் பயணிகள் ஏறிச் சென்றனா். மம்பாலத்தைவிட்டு கீழே இறங்கும் போது டயா் பஞ்சராகி நின்ற பேருந்தை ஓரம் கட்டாமல் அப்படியே நிறுத்திவிட்டு ஓட்டுநா் மற்றும் நடத்துநா் இருவரும் கிளம்பி சென்றனா். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவிப்படைந்தனா்.
திருவள்ளூா் பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் பழுதானவையாக உள்ளன. அதனால், பொதுமக்கள் நலன் கருதி பேருந்துகள் அனைத்தையும் சீரமைத்து பாதிப்பு ஏற்படாத வகையில் இயக்க நடவடிக்கை எடுக்கவும் பயணிகள் எதிா்நோக்கியுள்ளனா்.