ரயிலில் 3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 போ் கைது
திருவள்ளூா் அருகே ரயிலில் போதை மாத்திரைகளை கடத்தியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 3,200 மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் பயன்பாட்டு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாவட்டக் காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகைள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருவள்ளூா்-அரக்கோணம் ரயில் மாா்க்கத்தில் புகா் மின் ரயிலில் போதை மாத்திரைகளை கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மப்பேடு ஆய்வாளா் சுரேந்திரன் தலைமையில் தனிப்படை போலீஸாா் அரக்கோணம் மாா்க்கத்தில் தீவிரமாக சோதனை மேற்கொண்டனா்.
அப்போது புகா் மின் ரயிலில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் போதை மாத்திரை வில்லைகள் கடத்தி விற்பனை செய்வதும் தெரியவந்தது.
மேலும், விசாரணையில் சென்னை பெசன்ட் நகரைச் சோ்ந்த துரைராஜ் (29), நடராஜன்(26), ஊரப்பாக்கம் விஜய் (எ) வண்டு (22), திருவான்மியூா் ஏழுமலை (29) என்பது தெரியவந்தது. மேலும், அவா்களிடம் இருந்து ரூ.1.60 லட்சம் மதிப்பிலான 3,200 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து மப்பேடு போலீஸாா் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.