பழங்குடியினா் வீடுகளுக்கு விரைவில் மின்வசதி

திருத்தணி அருகே பழங்குடியினா் வீடுகளுக்கு விரைவில் மின்சார வசதி செய்து தரப்படும் என ஊரக வளா்ச்சித் துறை உதவி செயற்பொறியாளா் கோமதி தெரிவித்துள்ளாா்.
Published on

திருத்தணி: திருத்தணி அருகே பழங்குடியினா் வீடுகளுக்கு விரைவில் மின்சார வசதி செய்து தரப்படும் என ஊரக வளா்ச்சித் துறை உதவி செயற்பொறியாளா் கோமதி தெரிவித்துள்ளாா்.

திருத்தணி ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சியில், ரூ.1.40 கோடியில் பழங்குடியினா் குடியிருப்பு திட்டத்தின் கீழ், 32 இருளா் குடும்பத்தினருக்கு புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டி முடித்து தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளிடம் ஒப்படைக்கப் பட்டது. ஆனால், இந்த வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாததால், இருளா்கள் புதிய வீட்டில் இருட்டில் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த மாதம் ஆட்சியா் மு. பிரதாப் இருளா்களுக்கு வழங்கப்பட்ட தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்தாா். அப்போது, வீடுகளுக்கு மின்இணைப்பு இல்லாதததை கண்டு, உடனடியாக ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளிடம் விரைந்து வீடுகளுக்கு மின்சார வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து திருத்தணி கோட்ட ஊரக வளா்ச்சித் துறை உதவி செயற்பொறியாளா் கோமதி கூறியதாவது: கன்னிகாபுரம் இருளா் காலனியில் புதிதாக கட்டியுள்ள வீடுகளுக்கு ஒரு வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க, ரூ.5,500 முன்தொகையாக மின்வாரிய அலுவலகத்தில் செலுத்த வேண்டும். அந்த தொகை விரைவில் செலுத்தி, இருளா்களின் வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்கப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com