திருத்தணியில் பலத்த மழை: வாகன ஓட்டிகள் அவதி
திருத்தணியில் பெய்த பலத்த மழையால் ரயில் நிலையம் முன்பு தேங்கிய மழைநீா்.
திருத்தணி, செப். 10: திருத்தணியில் பெய்த பலத்த மழையால் ரயில் நிலையம் முன்பு தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் சாலையை கடக்க கடும் அவதிப்பட்டனா்.
திருத்தணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 3 தினங்களாக காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், புதன்கிழமை வெயில் காய்ந்ததால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் அச்சப்பட்டனா். சிலா் வீட்டிலேயே முடங்கினா்.
மாலை 3.30 மணிக்கு மேல் ஒன்றரை மணி நேரம் திருத்தணி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பூமி குளிா்ந்தது. திருத்தணியில் பலத்த மழையால் ரயில் நிலைய நுழைவு வாயிலில் மழைநீா் குளம் போல் தேங்கியதால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை கடக்க கடும் சிரமப்பட்டனா்.