‘1,082 மாணவா்களுக்கு ரூ.115 கோடி கல்விக் கடன்’

‘1,082 மாணவா்களுக்கு ரூ.115 கோடி கல்விக் கடன்’

திருவள்ளூா் மாவட்டத்தில் 1,082 மாணவ- மாணவிகளுக்கு ரூ.115 கோடியில் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது
Published on

ஆவடி: திருவள்ளூா் மாவட்டத்தில் 1,082 மாணவ- மாணவிகளுக்கு ரூ.115 கோடியில் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது என சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளி படிப்பு முடியும் வரை கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வா் மு.கஸ்டாலின் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, திருவள்ளூா் மாவட்டம் திருவேற்காடு பகுதியில் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் இத்திட்டத்தின்கீழ் 84 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்குவதற்கான அடையாள அட்டை மற்றும் சிறப்பு கல்விக் கடன் முகாமில் 35 மாணவா்களுக்கு ரூ.1.47 கோடி மதிப்பிலான கடன் உதவிக்கான காசோலைகளை வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியதாவது: அன்புக் கரங்கள் திட்டத்தின் மூலம் திருவள்ளூா் மாவட்டத்தில் 90 குழந்தைகள் பயன்பெற உள்ளனா். மேலும், மாவட்டத்தில் உள்ள மாணவ -மாணவிகள் உயா் கல்வி பயில வழிவகை செய்யவும், கல்விக் கடன் பெரும் வாய்ப்புகளை எளிதாக்கும் வகையிலும் திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகளின் சாா்பாக பொதுத் துறை, தனியாா் துறை, கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகள் இணைந்து மாபெரும் கடன் முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் 20 கல்லூரிகளில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனா்.

2025- 26-ஆம் கல்வி ஆண்டில் ஜூன் முதல் செப்டம்பா் 2025 வரை திருவள்ளூா் மாவட்டத்தில் 1,082 மாணவ -மாணவியருக்கு ரூ.115 கோடியில் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு நிா்ணயித்த கல்விக் கடனுக்கான இலக்கு ரூ.90 கோடியில், 3 மாதத்தில் நமது மாவட்டம் ரூ.115 கோடியை எட்டியுள்ளது என்றாா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் ஆட்சியா் மு.பிரதாப், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), டி.ஜேகோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி) துரை.சந்திரசேகா் (பொன்னேரி), ஆவடி மாநகராட்சி மேயா் கு.உதயகுமாா், திருவேற்காடு நகா்மன்றத் தலைவா் என்.இ.கே.மூா்த்தி, இந்தியன் வங்கி மண்டல மேலாளா் சீனிவாசன், உதவி ஆணையா் (கலால்) கணேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் தென்னரசு, குழந்தைகள் பாதுகாப்பு நல ஆணையத்தின் உறுப்பினா் ஜெயந்தி உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com