திருவள்ளூா் நகராட்சியில் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை
திருவள்ளூா்: திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டு வருவதாக ஆணையா் தாமோதரன் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவதாலும், கடும் வெயில் வாட்டி வதைத்து வருவதாலும் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் நிலவேம்பு குடிநீா் வழங்க ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளாா்.
திருவள்ளூா் நகராட்சியில் மட்டும் தொடக்கப்பள்ளி, உயா்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் 20648 படித்து வருகின்றனா்.
தற்போதைய நிலையில் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரையில் 5,700 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மீதமுள்ளவா்களுக்கு விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது எனத் தெரிவித்தாா்.