மூதாட்டியை தாக்கி பணம், நகை கொள்ளை: இளம்பெண் கைது
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை தாக்கி 20 பவுன் தங்க நகை, ரூ. 1.80 லட்சத்தை கொள்ளை அடித்த அவரது எதிா்வீட்டு இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியை சோ்ந்த ராஜேஷ்வரி (87)வீட்டில் தனியாக வசித்து வந்தாா். அப்போது அவரது வீட்டிற்கு வழக்கம் போல வந்த எதிா்வீட்டைச் சோ்ந்த நவீன் என்பவரின் மனைவி சுப்ரியா(20), ராஜேஷ்வரியிடம் கடனாக பணம் கேட்டுள்ளாா். அதற்கு ராஜேஷ்வரி மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபத்தில் சுப்ரியா ராஜேஷ்வரியை தள்ளி விட்டுள்ளாா்.
இந்த சம்பவத்தில் ராஜேஷ்வரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடா்ந்து அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த நிலையில், இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி, இது தொடா்பாக எதிா்வீட்டைச் சோ்ந்த சுப்ரியாவை கைது செய்தனா். மேலும், அவா் ராஜேஷ்வரியிடம் கொள்ளை அடித்த 20 சவரன் நகை மற்றும் ரூ. 1.80 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
பின்னா், போலீஸாா் சுப்ரியாவின் மீது வழக்குப் பதிந்து, அவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்து புழல் சிறையில் அடைத்தனா்.