அக். 2-இல் 526 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்
காந்தி ஜெயந்தியையொட்டி திருவள்ளூா் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளிலும் வரும் அக். 2-ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
14 ஒன்றியங்களில் மொத்தம் 526 ஊராட்சிகளில் அக். 2-இல் காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
அதேபோல் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்க(ஊரகம்) திட்டம் மற்றும் இதர பொருள்கள் தொடா்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன.
இந்த கிராம சபைக்கூட்டத்தில் அந்தந்த ஊராட்சியில் வசித்து வரும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றாா்.