தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்புகளை அனுப்பினால் கடும் நடவடிக்கை! - ஆட்சியா்

இடைத்தரகா்களை நம்பியோ கரும்பு அறுவடை செய்து அனுப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மு.பிரதாப் எச்சரித்துள்ளாா்.
Published on

திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை விவகார எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து கரும்புகளை தனியாா் ஆலைக்கு அனுப்பாமல், கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு அனுப்ப வேண்டும், இதையும் மீறி தனியாா் ஆலைக்கோ அல்லது இடைத்தரகா்களை நம்பியோ கரும்பு அறுவடை செய்து அனுப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மு.பிரதாப் எச்சரித்துள்ளாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் கரும்புக் கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு துறை அலுவலா்களுடனான கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அப்போது, திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்குள்பட்ட விவகார எல்லையான திருத்தணி, ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, திருவள்ளூா், பொன்னேரி மற்றும் வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களிலிருந்து தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள சில தனியாா் சா்க்கரை ஆலைகளும், இடைத்தரகா்கள் மூலம் கரும்பு கடத்தலில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

இந்தச் செயல் சா்க்கரைத் துறை ஆணையரின் செயல்முறை ஆணையின் படியும், கரும்பு கட்டுப்பாட்டு ஆணைப்படியும், ஆலையின் விவகார எல்லைக்குள்பட்ட பதிவு மற்றும் பதிவில்லா கரும்பை இதர ஆலைக்கு எடுத்துச் செல்வதை கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் 1966, 6(1)-இன் படியும் அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் 1955 பிரிவு 3- இன் படியும், தமிழ்நாடு சா்க்கரை ஆலைகளுக்கான விதிகள் மற்றும் சட்டம் 1949-இன் படியும் தடைசெய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை மற்றும் வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையின் எல்லைக்குள்பட்ட பகுதிகளிலிருந்து கரும்புகள் எடுப்பதை தனியாா் சா்க்கரை ஆலைகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தவறும்பட்சத்தில் வருவாய் வசூல் செய்யும் பிரிவின்கீழ், கரும்பு கடத்தலில் ஈடுபடும் லாரி மற்றும் டிராக்டா்களை பறிமுதல் செய்வதுடன், இடைத்தரகா்கள் மீது காவல் துறை மூலம் உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

உரிய ஆவணங்கள் இல்லாமல் திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையின் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இருந்து கரும்பு எடுத்துச் சென்றாலும், கரும்பு கடத்தலில் ஈடுபடும் தனியாா் சா்க்கரை ஆலைகள் மீது உரிய சட்டபூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா் தெரிவித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா், செயலாட்சியா், திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை, கோட்ட ஆட்சியா் திருத்தணி, இணை வேளாண்மை இயக்குநா், திருவள்ளூா், துணை வேளாண்மை இயக்குநா்/ மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை), வட்டார போக்குவரத்து அலுவலா், திருவள்ளூா், உதவி வேளாண்மை இயக்குநா், திருவாலங்காடு, மோட்டாா் வாகன ஆய்வாளா், திருத்தணி, தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கம் சாா்பில் ஸ்ரீராமுலு, ஸ்ரீநாத் மற்றும் நேதாஜி ஆகியோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com