அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
திருவள்ளூா்: உதவியாளா்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த சங்கத்தின் மாவட்ட தலைவா் மணிமேகலா தலைமை வகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்கத்தின் மாநில தலைவா் காந்திமதிநாதன் கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தாா். சங்கத்தின் மாநில துணைத்தலைவா் லட்சுமி போராட்டத்தை தொடங்கி வைத்தாா்.
இதில் அரசு வருவாய் துறை சங்கத்தின் நிா்வாகி வெண்ணிலா, ஒய்வு பெற்ற அரசு அலுவலா் சங்க நிா்வாகி யோகராஜ் வாழ்த்துரை வழங்கினாா்.
அப்போது, அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாதந்தோறும் ஓய்வூதியம் ரூ.9,000 அகவில்லைப்படியுடன் வழங்க வேண்டும். பணிக்கொடையாக ரூ.10 லட்சம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.