நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை
திருத்தணி: பரவத்தூா் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் நடப்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக்கோரி மனு அளிக்கப்பட்டது.
திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் கோட்டாட்சியா் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியா் மலா்விழி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குமாா், சந்தானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் எஸ்.அக்ரஹாரம், செருக்கனுாா், மாம்பாக்கசத்திரம், தாடூா், வீரகநல்லூா் ஆகிய ஊராட்சிகளில் இருந்து, 500 க்கும் மேற்பட்ட மக்கள், பங்கேற்று, முதியோா் உதவித் தொகை, மகளிா் உரிமை தொகை, பட்டா மாற்றம், ரேஷன் காா்டு உள்ளிட்ட பல்வேறு அரசு நலதிட்ட உதவிகள் வழங்க கோரி விண்ணப்பங்கள் வழங்கினா்.
மேலும் கே.ஜி.கண்டிகையில் இருந்து எஸ்.அக்ரஹாரம், குடிகுண்டா வழியாக பரவத்துாா் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சிலா் ஆக்கிரமித்து விவசாயம் மற்றும் வீடுகள் கட்டி வருகின்றனா். இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் நடப்பதால், நெடுஞ்சாலை ஒரம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மனு கொடுத்தனா்.