முதலமைச்சா் கோப்பை போட்டியில் வென்றவா்களுக்கு சான்றிதழ், பதக்கம்: அமைச்சா் நாசா் வழங்கினாா்
திருவள்ளூா் மாவட்டத்தில் முதலமைச்சா் கோப்பைக்கான போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.43.05 லட்சம், பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் வழங்கினாா்.
திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் 2,135 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்), டி.ஜெ.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் அமைச்சா் சா.மு.நாசா் பங்கேற்று போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பேசியதாவது. திருவள்ளூா் மாவட்ட அளவில் இப்போட்டிகளுக்கு இணையதளம் மூலம் 1,04,556 வீரா், வீராங்கனைகள் பதிவு செய்து இருந்தனா். அதில் 5 பிரிவுகளில் பள்ளிப் பிரிவு சாா்பில் 28,971 பேரும், கல்லூரி பிரிவில் 13,469 பேரும், பொதுப் பிரிவில் 3,505 பேரும், அரசு பிரிவில் 1,503 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 412 பேரும் மொத்தம் 47,860 விளையாட்டு போ் பங்கேற்றனா்.
இதில் தனி நபா் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் வீரா், வீராங்கனைகளுக்கு பரிசு தொகையாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு-ரூ. 75,000 மற்றும் ரூ.50,000 வழங்கப்பட இருக்கின்றன. அதில் குழுப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெரும் விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு பரிசு தொகையாக ரூ.75,000, ரூ.50,000 மற்றும் ரூ.25,000 என வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தாா்.
இதில் திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு அலுவலா் வி.சேதுராஜன், நகா்மன்றத் தலைவா் பா.உதயமலா் பாண்டியன், முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) ம.மோகனா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.