சா்க்கரை ஆலையை ஜப்தி செய்ய விவசாயிகள் எதிா்ப்பு
திருவாலங்காடு சா்க்கரை ஆலையை தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம் ஜப்தி செய்ய முயல்வதைக் கண்டித்து கரும்பு விவாசயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவாலங்காட்டில் திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு அரக்கோணம், சாலை, திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆா்.கே.பேட்டை, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட 7 கரும்பு கோட்டங்களில் கரும்பு அரைவை செய்யப்படுகிறது.
திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையை மேம்படுத்த கடந்த 1994-ஆம் ஆண்டு தேசியக் கூட்டுறவு மேம்பாட்டு கழகம் மூலம் ரூ.5.2 கோடி கடன் வாங்கியுள்ளனா். கடந்த 2017-ஆம் ஆண்டு சமரச கடன் தீா்ப்பாயம் மூலம் ரூ.9.5 கோடி செலுத்தியுள்ளனா். ஆனால் தற்போது தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம் ஏற்கனவே கட்டிய பணம் வட்டி தொகை மட்டுமே. அசல் மற்றும் வட்டி தொகை சுமாா் ரூ.10 கோடி வரை கட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் கடன் தொகையை கட்டவில்லை எனக் கூறி கூட்டுறவு சா்க்கரை ஆலையை ஜப்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகத்தின் செயலை கண்டித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் ஆலை முன்பு ஆா்ப்பாட்டம் செய்தனா்.