பொன்னேரி கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம்: ஆட்சியா் ஆய்வு
பொன்னேரி நகராட்சியில் புதை சாக்கடை திட்ட கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தை ஆட்சியா் பிரதாப் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.62 கோடி செலவில் புதை சாக்கடை திட்ட பணிகளுக்காக கழிவுநீா் சேகரிப்பு கட்டமைப்புக்காக 150 மிமீ, முதல் 450 மிமீ விட்டமுள்ள சுடுமண் குழாய்கள் மற்றும் கான்கிரீட் குழாய்கள் 41.456 கி மீ பதிக்கப்பட்டுள்ளன.
மேலும் 1,827 இயந்திரக்குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு 6605 வீட்டு இணைப்புகளிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரானது வேண்பாக்கம் பள்ளம், ஹரிஹரன் கடை வீதி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள துணைகழிவு நீருந்து நிலையங்களுக்கு வரும். அங்கிருந்து கள்ளுக்கடைமேட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரதான கழிவு நீருந்து நிலையத்திற்கு உந்தப்படுகிறது.
இதன் பின்னா். அங்கிருந்து, சின்னகாவனத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. கழிவுநீா் சுத்திகரிக்கப்பட்ட பின்னா் 3.80 கி மீ தொலைவில் ஆரணியாற்றில் விடப்படுகிறது.
தற்பொழுது, இத்திட்டத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்ரு வீடுகளிலிருந்து கழிவு நீா் சேகரிக்கும் பொருட்டு உள் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
57,000 மக்கள் பயன்பெறும் இத்திட்டத்தினை முதல்வா் மு.க ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
இந்த நிலையில் ஆட்சியா் பிரதாப் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்து திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
அப்போது தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் ஜெயசுதா, பொன்னேரி நகர மன்ற தலைவா் மருத்துவா்.பரிமளம்விஸ்வநாதன், குடிநீா் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளா் தமிழ்மணி, பொன்னேரி நகராட்சி ஆணையா் தனலட்சுமி, பொன்னேரி வட்டாட்சியா் சோமசுந்திரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா். .

