சாலை விபத்தில் இளைஞா் மரணம்: மற்றொருவா் பலத்த காயம்
மீஞ்சூா் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் மோட்டாா் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயம் அடைந்தாா்.
மீஞ்சூா் அருகே உள்ள அரியன்வாயல் அப்துல் கலாம் தெருவில் வசிப்பவா் கௌசிக் பாஷா (53). இவரது மகன் அசாா் (32). இவா் மோட்டாா் சைக்கிளில் உறவினா் அபிபுல்லா(45) என்பவருடன் வீட்டுக்கு சென்றாா்.
வடசென்னை அனல் மின் நிலைய சாலையில் அத்திப்பட்டு மேம்பாலம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் அசாா் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
பின்னால் அமா்ந்து வந்த அபிபுல்லா பலத்த காயம் அடைந்த நிலையில் அக்கம் பக்கத்தினா் அவரை காப்பாற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். செங்குன்றம் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
