கோப்புப் படம்
கோப்புப் படம்

வழக்குகளில் பறிமுதல் செய்த 44 வாகனங்கள் ஜன. 29-இல் ஏலம்!

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, காவல் நிலையங்களில் கள்ள மதுபானம், போதைப் பொருள்கள் கடத்தல் போன்ற வழக்குகளில் பறிமுதல் செய்த 44 வாகனங்கள் ஜன. 29-இல் ஏலம்
Published on

திருவள்ளூா் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, காவல் நிலையங்களில் கள்ள மதுபானம், போதைப் பொருள்கள் கடத்தல் போன்ற வழக்குகளில் பறிமுதல் செய்த 44 வாகனங்களை ஜன. 29-இல் ஏலம் விட உள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா சுக்லா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் காவல் நிலையங்களில் மதுவிலக்கு கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இரு சக்கர வாகனங்கள்-38, மூன்று சக்கர வாகனங்கள்-2, நான்கு சக்கர வாகனங்கள்-4 என 44 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாக, ஆயுதப் படை மைதானத்தில் வரும் ஜன. 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களை ஏலம் கேட்க வருவோா் முன் வைப்பு கட்டணத் தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1,000, மூன்று சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ. 5,000 செலுத்த வேண்டும்.

அப்போது, டோக்கன் காலை 8 முதல் 10 மணி வரை வழங்கப்படும். வாகனத்தை ஏலம் எடுத்தோா் ஏலம் கேட்ட தொகையுடன் இரு சக்கர வாகனத்துக்கு அரசு விற்பனை வரி 12 சதவீதமும், நான்கு சக்கர வாகனத்துக்கு 18 சதவீதமும் செலுத்த வேண்டும்.

வாகனத்தின் உரிமையாளா்கள், உரிமையாளருக்கான பதிவுச் சான்று, ஆதாா் அட்டை கொண்டு வரவேண்டும். ஏலத்தில் பங்கேற்று வாகனம் எடுக்காதவா்களுக்கு முன் வைப்பு கட்டணத் தொகை ஏலத்தின் நிறைவாக திருப்பி அளிக்கப்படும்.

X
Dinamani
www.dinamani.com