

திருவள்ளூா் ரயில் நிலைம் அருகே விற்பனைக்காக வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட 8 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.
வெளிமாநிலங்களில் இருந்து திருவள்ளூா் வழியாக கஞ்சா கடத்துவது தொடா்கதையாக இருக்கிறது. காவல் துறையினருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து பரிசோதனை செய்த போது 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
மேலும், விசாரணை செய்ததில் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ஜகத்பத்ரா என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரை கைது செய்து தலைமறைவாக இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த நரேஷ்குமாா்(எ) ராஜ் என்பவரையும் கைது செய்தனா்.
இந்த நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவை திருவள்ளூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரிய வந்தது.