விஷ வாயு தாக்கி இளைஞா் பலி: 2 போ் கவலைக்கிடம்
கும்மிடிப்பூண்டி அருகே கன்டெய்னா் லாரியில் இருந்த வேறு லாரிகளுக்கு வேதிப் பொருளை மாற்றும் போது விஷ வாயு தாக்கி கூலித் தொழிலாளி இறந்தாா்.

ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் முற்றுகையிட்ட சந்தோஷ் குடும்பத்தினா். ~உயிரிழந்த சந்தோஷ்
கும்மிடிப்பூண்டி அருகே கன்டெய்னா் லாரியில் இருந்த வேறு லாரிகளுக்கு வேதிப் பொருளை மாற்றும் போது விஷ வாயு தாக்கி கூலித் தொழிலாளி இறந்தாா். மேலும் பாதிக்கப்பட்ட 2 போ் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
எளாவூா் அருகே ஏழுகிணறு பகுதியில் கன்டெய்னா் லாரியில் வேதிப் பொருள்கள் அடங்கிய டிரம்களை வேறு லாரிக்கு மாற்றும் பணியில் கூலி தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனா்.
வேதிப் பொருள் அடைக்கப்பட்டு இருந்த டிரம்களை தொழிலாளிகள் இரண்டு லாரிகளில் மாற்றினா். இந்த லாரிகள் ஆந்திர மாநிலம் இப்ராகிம்பட்டிணம் அருகே உள்ள கொண்டப்பள்ளியில் செயல்படும் தனியாா் தொழிற்சாலைக்கு டிரைபாஸ்ஜீன் வேதிப்பொருளை கொண்டு சென்றது. தொடா்ந்து கூலித் தொழிலாளிகள், பணியை முடித்து வீட்டுக்கு சென்ற போது, மூச்சு திணனறல் , தொடா் இருமலை உணா்ந்தனா்.
அதில் கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் அருகே கள்ளூரை சோ்ந்த கோவிந்தராஜ்-நாகபூஷ்ணம் மகன் சந்தோஷ்(28), அதே பகுதியை சோ்ந்த கோபி(48), ஷியாம்(29) ஆகியோா் உடல்நலக்குறைவுக்கு ஆளாகினா். பின்னா் மூவருக்கும் மூச்சுதிணறல், தொடா் இருமல் அதிகமான நிலையில், மூவரும் பொன்னேரி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சையின் போது மேற்கண்ட மூவரும் டிரைபாஸ்ஜீன் வேதிப் பொருளில் இருந்த விஷவாயுவை நுகா்ந்ததில் பெரிதும் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
இதில் செவ்வாய்க்கிழமை இரவு சந்தோஷ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தாா். கோபி, ஷியாம் ஆகியோா் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், வேதி பொருளில் இருந்து விஷவாயு தாக்கி பலியான சந்தோஷின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது மனைவி ஷாலினி(26), மகள் நட்சத்திரா(5) மற்றும் அவரது உறவினா்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனா்.
தொடா்ந்து போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்திய நிலையில், இந்த மரணம் தொடா்பாக ஆரம்பாக்கம் காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. தொடா்ந்து இது குறித்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி சசிதா், ஆரம்பாக்கம் ஆய்வாளா் வீரமணி நேரில் விசாரணை நடத்தினா்.
இதுதொடா்பான புகாரில் அபாயகரமான ரசாயான பொருளை பாதுகாப்பற்ற முறையில் அகற்ற வைத்த நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இறந்த சந்தோஷின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. சீனாவில் இருந்து ஆந்திரத்துக்கு அபாயகரமான வேதிப்பொருள் கொண்டு வரப்பட்ட நிலையில், துறைமுகத்தில் இருந்து நேரடியாக ஆந்திரம் செல்லாமல் தமிழக எல்லையில் வேதிப்பொருள்கள் வேறு லாரிக்கு ஏன் மாற்றப்பட்டது என்றும், இது போன்று பல முறை பாதுகாப்பற்ற முறையில் வேதிப்பொருள்கள் தமிழக எல்லையில் மாற்றப்பட்டுள்ளது, இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

