புதிய கற்கால அகழாய்வும் தொல்பொருட்களும்
தமிழகத்தில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த டி.கல்லுப்பட்டி, பையம்பள்ளி, மல்லப்பாடி, தொகரப்பள்ளி, முள்ளிக்காடு, தையல்மலை, மயிலாடும்பாறை, மோதூர், அப்புக்கல்லு ஆகிய ஒன்பது இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன.*1 அவற்றில் பையம்பள்ளி, மயிலாடும்பாறை, மோதூர் ஆகிய இடங்களில் முறையான அறிவியல் வழிமுறைகளைப் பின்பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வகழ்வாய்வுகளில் இருந்து புதிய கற்கால மக்களின் வாழ்விடங்களும், அவர்கள் பயன்படுத்திய கற்கோடாரிகள் போன்ற குறிப்பிடத்தக்க தொல்பொருட்கள் பலவும் கிடைத்துள்ளன. டி.கல்லுப்பட்டியில் புதிய கற்காலக் கற்கோடாரிகளும், மாதிரி அகழாய்வுக்குழிகள் மட்டும் போடப்பட்ட முள்ளிக்காடு, தொகரப்பள்ளியிலிருந்து மட்கலன்களும் கற்கருவிகள் சிலவும் கிடைத்துள்ளன.
பையம்பள்ளி
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது பையம்பள்ளி. இங்கு மைய அரசு அகழாய்வு மேற்கொண்டு பல புதிய செய்திகளை வழங்கியுள்ளது. இவ்வகழ்வாய்வு, முதன்முதலாகத் தமிழகத்தில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களும், அவர்கள் விவசாயம் செய்துள்ளனர் என்பதற்குரிய சான்றாகப் பயிர் வகைகளையும் கண்டடைந்த சிறப்பு பெற்றதாகும்.*2
தக்காணத்தில் வாழ்ந்த கால்நடை மேய்ப்பர்கள் புதிய கற்காலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஈரான் பகுதியில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் என்றும் கருதப்படுகிறது. ஆனால், பென்காடு லெவின் போன்றவர்கள், அவர்கள் தென்னிந்தியாவைச் சார்ந்த தொல்குடிகளே என்பர்.*3 இக்கருத்து ஏற்புடையதாகும். தக்காணத்தில் வாழ்ந்த கால்நடை மேய்ப்பவர்கள் தொண்டை மண்டலத்திலும் வாழ்ந்துள்ளர். மத்திய அரசு தொல்லியல் துறை மேற்கொண்ட பையம்பள்ளி அகழாய்வில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் புதிய கற்காலத்தின் முடிவும், பெருங் கற்காலத்தின் தொடக்கமும் வெளிப்படுவதைக் காணமுடிகிறது. இதனை இங்கு கணப்பட்ட மண்ணடுக்கில் புதிய கற்காலத்தைத் தொடர்ந்து, மேலடுக்கில் பெருங் கற்காலப் பண்பாட்டு எச்சங்கள் காணப்படுவதும் உறுதி செய்கிறது.*4
இங்கு கால்நடைகளின் சுடுமண் உருவங்கள் கிடைத்துள்ளன. இக்கால மக்கள் விவசாயத்தின் பயனறிந்து வாழ்ந்தார்கள் என்பதற்குச் சான்றாக கேழ்வரகு (Ragi), பச்சைப்பயிறு (Green Gram), கொள்ளு (Horse Gram) மற்றும் சோளம் போன்ற பயிர் வகைகள் மக்கிய நிலையில் கிடைத்துள்ளன. மேலும், மக்கள் தங்கும் இருப்பிடங்களாக தரைமட்டப் பள்ளங்களும் (Pit Dwelling) வெட்டப்பட்டு, அதன்மேல் புல் வேய்ந்த கூறைகளை அமைத்துக்கொண்டதற்கான அடையாளங்களும் கிடைத்துள்ளன. இவற்றின் தரை, தட்டைக் கற்களால் பாவப்பட்டிருந்தன. இவர்கள், வட்டம் மற்றும் நீள்வட்ட வடிவிலான புல் வேய்ந்த கூரை வீடுகளில் வசித்தனர் என்பதற்கு அடையாளமாக, மரக்கம்புகள் நடும் குழிகளும் (Post Holes) அகழாய்வில் வெளிப்பட்டுள்ளன.
இங்கு மாடு, ஆடு, கோழி, புள்ளிமான், பன்றி, காட்டுப்பூனை ஆகியவற்றின் எலும்புகள் கிடைத்துள்ளன. இதிலிருந்து இங்கு வாழ்ந்த புதிய கற்கால மக்கள், மேற்கண்ட விலங்குகளை வளர்த்து அவற்றை உணவாகவும் கொண்டனர் என அறியலாம்.*5 இங்கு காண்டாமிருகத்தின் எலும்புகள் கிடைப்பதைக் கொண்டு, 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதி சதுப்பு நிலமாக இருந்தது எனக் கொள்ளலாம். ஏனென்றால், காண்டாமிருகம் சதுப்பு நிலக் காடுகளில்தான் வாழ்வது வழக்கம்.
இங்கு வாழ்ந்த மக்கள், கையால் செய்யப்பட்ட சாம்பல் நிற மட்கலன்களையும், சக்கரத்தால் வனையப்பட்ட சிவப்பு நிற மட்கலன்களையும் உபயோகப்படுத்தியுள்ளனர். மேலும், இங்கு கற்கோடாரிகள், அம்மிக்கற்கள், குழவிக்கற்கள், திரிகைக் கற்களும் கிடைத்துள்ளன. இதிலிருந்து, அம்மி, திரிகை முதலான கருவிகளைப் பயன்படுத்தி தானியங்களை அரைத்து உணவாகப் பயன்படுத்தியதையும், தானியங்களில் இருந்து கொட்டைகளைப் பிரித்து எடுக்கும் அறிவையும் பெற்றிருந்தனர் என்பதையும் அறியமுடிகிறது.*6
மயிலாடும்பாறை
மயிலாடும்பாறையானது, இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்தில், போச்சம்பள்ளி வட்டத்தில் (7821’E:1223:N - திசைப் புள்ளியில்) அமைந்துள்ளது. இங்கிருந்து வடமேற்கில் 3 கி.மீ. தொலைவில் தொகரப்பள்ளி அமைந்துள்ளது. தொகரப்பள்ளி, மூதறிஞர் ராஜாஜி அவர்கள் பிறந்த ஊராகும். மயிலாடும்பாறையைச் சுற்றி சுமார் 20 கி.மீ. சுற்றளவில் தொல்லியல் சிறப்பு வாய்ந்த பல இடங்கள் அமைந்துள்ளன. இவற்றுள் தொகரப்பள்ளி, கங்கவரம், சந்தூர், வேடர் தட்டக்கல், குட்டூர், கிட்லூர், சாம்பமுட்டுலு, கப்பல்வாடி போன்ற இடங்கள் குறிப்பிடத்தகுந்தவை.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறைப் பிரிவினரால் 2004-ம் ஆண்டில் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில், புதிய கற்காலம் பற்றிய சுவையான செய்திகள் பல கிடைத்துள்ளன. இங்கு நடைபெற்ற அகழாய்வில் நுண் கற்காலம், புதிய கற்காலம், பெருங் கற்காலம் மற்றும் வரலாற்றுக் காலம் ஆகிய நான்கு காலகட்டங்களைச் சார்ந்த பண்பாட்டு எச்சங்கள் தொடர்ச்சியாகக் கண்டறியப்பட்டுள்ளன.
இவ்விடத்துக்கு அருகில் அமைந்த சாணாரப்பன் மலையின் உச்சியில் உள்ள பாறைக்குகையில், புதிய கற்காலத்தைச் சார்ந்த கையால் செய்யப்பட்ட சிவப்பு நிற மட்கலன்கள் கிடைத்துள்ளன. அருகில், பெருங் கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்களில், வெள்ளை மற்றும் சிவப்பு நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. தாளப்பள்ளம் அருகில் அமைந்த கருவோட்டுப்பள்ளம் என்ற சிற்றோடைக்கு அருகில் தோண்டப்பட்ட அகழ்வுக்குழியில், புதிய கற்காலத்தைச் சார்ந்த உளிகளும், கைக்கோடாரிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வகழ்வாழ்வுக் குழிகளில், புதிய கற்காலத்தைச் சார்ந்த இரண்டு குடிசை வீடுகளின் தரைப்பகுதிகளும், வட்டவடிவ மரக்கம்பு நடப்பட்ட குழிகளும் (Post Holes) காணப்பட்டன.*7 இங்கு ஆய்வுக்குப் போடப்பட்ட ஐந்து குழிகளில், பெருங் கற்காலத் தடயங்கள் காணப்பட்டன. கல்வட்டம் என்பது பெருங் கற்கால மக்களின் ஈமச் சின்ன வகைகளுள் ஒன்று. இவ்வகை கல்வட்டங்கள் இங்கு மிகுதியான எண்ணிக்கையில் காணப்படுகின்றன. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெருங் கற்காலப் பண்பாட்டைச் சார்ந்த எச்சங்கள் எண்ணிலடங்காத அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.*8 மயிலாடும்பாறைக்கு அருகில் அமைந்துள்ள கூசிகுண்டு என்ற இடத்தில், நுண் கற்கருவிகளும் மூலக்கற்களும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. நுண் கற்கருவிகளில் அறுப்பான், கிளிப்பான், திருகி, கூர்முனை போன்ற வகைகள் கிடைத்துள்ளன.*9
மோதூர் அகழாய்வு
(மோதூர்: இரண்டு மலைகளுக்கு இடையில் அமைந்த புதிய கற்கால மக்களின் வாழ்விடத்தில் ஆய்வுக்குப் போடப்பட்ட அகழாய்வுக் குழிகள்)
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர், 2005-ம் ஆண்டு இங்கு விரிவான அகழாய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த அகழாய்வில் காணப்பட்ட மண்ணடுக்குகளில், புதிய கற்காலத்தைச் சார்ந்த கற்கருவிகளும், மட்கலன்களும் ஏராளமாக கிடைத்துள்ளன. அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய கற்கால அகழாய்வுகளை ஒப்பிட்டு நோக்கும்போது, மோதூரில் எண்ணிக்கை மிகுதியாக 500-க்கும் மேற்பட்ட புதிய கற்காலக் கற்கருவிகளும், பண்பாட்டு எச்சங்களும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் புதிய கற்கால மக்கள் அதிக அளவில் தங்கி மேம்பட்ட நாகரிக வளர்ச்சி பெற்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர் என்பதற்குச் சான்றாக பையம்பள்ளி, மயிலாடும்பாறை மற்றும் மோதூர் அகழாய்வுகளைக் குறிப்பிடலாம்.
(மோதூர் அகழாய்வுக் குழியில் மண்ணடுக்குகளின் தோற்றம் வரைபடமும் புகைப்படமும்)
தமிழகத்திலும் புதிய கற்காலப் பண்பாட்டுத் தடயங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இருந்தும் அக்காலப் பண்பாட்டை முழுமையாக அறியும் பொருட்டு, புதிய கற்கால வாழ்விடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மிகக் குறைவே. மோதூரில் கிடைத்த அளவு புதிய கற்காலத் தொல்பொருட்கள் தமிழகத்தில் வேறு எங்கும் கிடைக்கவில்லை. இவ்வகழ்வாய்வில், பெருங் கற்கால மண்படிவுக்கு அடுத்த கீழடுக்கில், புதிய கற்காலப் பண்பாட்டுப் படிவு சாம்பல் நிறமாகவும், புதிய கற்காலக் கைக்கோடாரிகள் இன்னும் பிற கற்கருவிகளுடன் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மோதூரில் 15 அகழாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவற்றில், அகழாய்வுக் குழிகள் 7, 10 மற்றும் 14 ஆகியவை வரலாற்றுக் காலத்துடன் தொடர்புடையவை என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*10 எஞ்சியுள்ள பிற அகழாய்வுக் குழிகள், புதிய மற்றும் பெருங் கற்காலத் தடயங்களை வெளிப்படுத்துபவையாகும்.
சுடுமண் ஆட்டு உருவம்
மோதூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில், மண்ணடுக்கில் சேகரிக்கப்பட்ட புதிய கற்காலத் தொல்லியல் தரவுகளில் முதன்மையானது, சுடுமண் ஆட்டு உருவம் ஆகும். இது நன்கு செழிப்பாக வளர்ந்த செம்மறி ஆட்டின் தோற்றம் கொண்டதாகும். இது, இங்கு வாழ்ந்த புதிய கற்கால சமுதாயம், கால்நடை மேய்தல் தொழிலில் ஈடுபட்டிருந்ததை உறுதி செய்கிறது.
(சுடுமண் ஆட்டு உருவம் - RAM)
மோதூர் அகழாய்வுக்குழிகளில் எண் 9 குறிப்பிடத்தக்க ஒன்று. இக்குழியில்தான் அதிக அளவில் ஒழுங்கற்ற கற்துண்டுகள் ஒரே வரிசையில் அடுக்கிவைத்ததுபோல் காணப்பட்டன. இது, புதிய கற்கால மக்களின் வாழ்விடப் பகுதியாகும். இக்கல்லடுக்கு, அவர்களால் அமைக்கப்பட்ட கற்சுவரின் ஒரு பகுதியே எனலாம். இது, களிமண்ணைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இது, இரண்டு குன்றுகளுக்கு இடையே அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.*11 இது, புதிய கற்கால மனிதன் தனது இருப்பிடத்தை மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குப் பகுதியில் அமைத்துக்கொண்டிருந்ததற்குச் சான்றாக விளங்குகிறது. மேலும், அகழ்வுக் குழி 6-ல், தரைமட்டத்தைவிட பள்ளமான குழிகள் அமைத்துத் தங்கியுள்ளான் என்பதும் வெளிப்படுகிறது. இக்குழியில், தரைமட்டத்தைவிட பள்ளமான இரண்டு குழிகள் உள்ளன. இக்குழிகளின் விட்டம் சுமார் 1.50 மீட்டர். இக்குழிகளில் இருந்து பல்வேறு வகையான கற்கருவிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை முழுமையாக ஆய்வுக்கு உரியவை.
அகழாய்வுக் குழி 11-ல், வழவழப்பான கைக்கோடரிகளுடன் செம்பு வளையல்களும், ஒரு சுடுமண் பாவையும் அதாவது தாய் தெய்வத்தின் உடைந்த உருவமும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.*12 இதன் தலைப்பகுதி கிளி மூக்கு போன்று கூர்மையாகவும், உடல் பகுதி அகன்றும் காணப்படுகின்றது.*13 இது கீழ்வாளை ஓவியத்துடன் ஒத்துள்ளது.*14 தென் மாநிலங்களில் நடைபெற்ற புதிய கற்கால வாழ்விட அகழாய்வுகளில் காணப்பட்ட அதாவது டி.நரசிப்பூர், பிக்கிலிகால் போன்ற அகழாய்வுகளில் காணப்பட்ட சுடுமண் தாய் தெய்வங்களை ஒத்து உள்ளன. எனவே, இங்கு கிடைத்த தாய் தெய்வ உருவமும் புதிய கற்காலத்தைச் சார்ந்தவை என்றே கணிக்கப்படுகிறது. மேலும், இதனுடன் காணப்பட்ட தொல்லியல் சான்றுகளும் இதையே உறுதிபடுத்துகின்றன.
மேலும், வடஇந்தியாவில் இனாம்கான் (Inamgaon) என்ற இடத்தில் கிடைத்த புதிய கற்காலத்துக்கு உரிய தாய் தெய்வ சுடுமண் உருவங்களுடனும், உலக அளவில் ஆப்கானிஸ்தானில் கர்-இ-மார் (Gar-I-mar) என்ற இடத்தில் கிடைத்த புதிய கற்கால தாய் தெய்வ உருவங்களுக்கும், அடிப்படையில் அதாவது கிளிமூக்கு போன்ற மிகச்சிறிய தலையுடன் கூடிய ஒற்றுமை உள்ளது. இக்குணம், மோதூர் தாய் தெய்வ சுடுமண் உருவம் புதிய கற்காலத்தைச் சார்ந்த்து என்றே உறுதிபடுத்துகின்றன.
(இனாம்கான் தாய் தெய்வ உருவங்கள் மற்றும் பலவகைக் கற்கருவிகள்)
(மோதூர் தாய் தெய்வ சுடுமண் உருவம்)
(கர்-இ-மார் (Gar-I-mar) ஆப்கானிஸ்தான் - மனித வடிவில் அமைந்த சுடுமண் உருவம். Neolithic Anthromorphic Ceramic Female Figure)
*
தமிழகத்தில் அகழாய்வு மேற்கொண்ட புதிய கற்கால இடங்களும் வெளிப்பட்ட பண்பாடுகளும், தடயங்களும்
இடம் / வட்டம் / மாவட்டம் | பண்பாடு | தடயங்கள் |
பையம்பள்ளி / திருப்பத்தூர் / வேலூர் | புதிய கற்காலம் | கைக்கோடாரிகள், குடியிருப்பின் தரை கீழ்மட்ட பள்ளம் |
ஆப்புக்கல்லு / வேலூர் / வேலூர் | புதிய கற்காலம் | கைக்கோடாரிகள், |
மல்லப்பாடி / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி | புதிய கற்காலம் | கைக்கோடாரிகள் |
தொகரப்பள்ளி / போச்சம்பள்ளி / கிருஷ்ணகிரி | புதிய கற்காலம் | மட்கலன்கள் |
முள்ளிக்காடு / அரூர் / தருமபுரி | புதிய கற்காலம் | கைக்கோடாரிகள், மட்கலன்கள் |
தையல்மலை / அரூர் / தருமபுரி | புதிய கற்காலம் | கைக்கோடாரிகள், மட்கலன்கள் |
மயிலாடும்பாறை / போச்சம்பள்ளி / கிருஷ்ணகிரி | 1.நுண் கற்காலம் 2.புதிய கற்காலம் 3.பெருங் கற்காலம் 4.வரலாற்றுக் காலம் | கைக்கோடாரிகள் |
மோதூர் / பாலக்கோடு / தருமபுரி | 1.புதிய கற்காலம் 2.பெருங் கற்காலம் 3.வரலாற்றுக் காலம் |
|
டி.கல்லுப்பட்டி / திருமங்கலம் / மதுரை | புதிய கற்காலம் | கைக்கோடாரிகள் |
(அடுத்த வாரம் மோதூர் அகழாய்வில் கண்டறியப்பட்ட புதிய கற்காலத் தொல்பொருள்களும் அவற்றின் சிறப்புகளும்)
*
சான்றெண் விளக்கம்
1. Selvaraj.S, Recent Archaeological Discoveries in Dharmapuri Region, Essay Published in Department of Archaeology, Government of Tamil Nadu, Tamil Nadu, 2004 p.9
2. Ancient India, Vol-2, Bullettin of Archaeological Survey of India, 1946
3. T.S. Sridhar, Excavations of Archaeological Series, Tamil Nadu, Modur, Department of Archaeology, Chennai, 2005,
4. Ancient India, op.cit.,
5. பூங்குன்றன், ர, அதியமான் நள்ளி நாட்டில் ஆயும் ஆயரும், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை. மே 2009.
6. T.S. Sridhar, Excavations of Archaeological Series, Tamil Nadu, Modur, Department of Archaeology, Chennai, 2005,
7. Ibid.,p.3
8. Ibid., p.4.
9. Ibid., p.5.
10. S. Sridhar, Excavations of Archaeological Series, Tamil Nadu, Modur, Department of Archaeology, Chennai, 2005,
11. Ibid., pp.6-8
12. Selvaraj.S, Significance of Excavations at Modur Seminar Paper 2005
13. Ibid., p.3
14. கீழ்வாலை ஓவியம், தென்னார்க்காடு மாவட்டம் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்குச் செல்லும் வழியில் 23 கி.மீ. தூரத்தில் கீழ்வாலை இடத்தில் என்ற ‘ரத்தக்குடைக்கல்’என்று அழைக்கப்படும் குன்றில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.