பெருங் கற்படைக் காலம் (இரும்புக் காலம் முதல் சங்க காலம் வரை – 4)

வேட்டையாடுதல், குதிரை மீது சவாரி செய்துகொண்டே ஈட்டி எறிதல் போன்ற காட்சிகளும், இரண்டு குதிரை வீரர்கள் நேருக்கு நேர் போரிடும் காட்சி, மகளிர் நடனமாடுதல் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இக்காட்சியில், ஆடை அமைப்பும் காட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியம்தான், தமிழகத்தில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட தொல் பழங்கால ஓவியமாகும்.

மல்லச்சந்திரம் - பெருங் கற்படைச் சின்னங்கள் ஒரு பார்வை

தமிழகத்தில் அரிதாகக் காணப்படும் பெருங் கற்படைச் சின்னமும், தமிழகத்தில் வேறு எங்கும் காணப்படாத பெருங் கற்படைச் சின்னமும், வட தமிழகத்தைச் சேர்ந்த பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லச்சந்திரம் என்ற இடத்தில் இருப்பதைக் கண்டறிந்து வெளியுலகுக்கு அறிவித்தவர்கள், அப்பகுதி வரலாற்று ஆசிரியர்களும், ஆசிரியர்ப் பெருமக்களும் ஆவர். இவர்களில், திரு. ராமானுஜம் அவர்களின் தீவிரமான களப்பணியால் இது சாத்தியமானது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜீனூர், ஜக்கசமுத்திரம், மல்லச்சமுத்திரம் சூளகிரி போன்ற பல பகுதிகளில் காணப்பட்ட பெருங் கற்படைச் சின்னங்களைக் கள ஆய்வில் அடையாளம் கண்டு, வரலாற்று ஆசிரியர்களும், ஆசிரியர்ப் பெருமக்களும் அறியப்படுத்தியுள்ளனர். பின்னர், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகமும் இப்பகுதிகளில் ஆய்வு செய்து, பல அரிய தகவல்களை வழங்கியுள்ளன.

முனைவர் கா.ராஜன் அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டப் பெருங் கற்படைக் கால ஆய்வில் மேலும் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். மல்லச்சந்திரம் பகுதியை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்க, அப்போதைய மாவட்ட ஆட்சியர் டாக்டர் சந்தோஷ் பாபு மற்றும் தமிழகத் தொல்லியல் துறையின் சார்பாகப் 'புதையுண்ட தமிழகம்' ஆசிரியர் ச. செல்வராஜ் இருவரும் இணைந்து கடும் முயற்சிகள் மேற்கொண்டனர். மைய அரசின் பாதுகாக்கப்பட்ட வனத்துறைக்கு உட்பட்ட பகுதியில் இப்பகுதி இருப்பதால், அவ்வாறு அறிவிக்க இயலாமல்போனது. தற்போது அவை, சிதைக்கப்பட்டு அழிந்து வருகின்றன.

தனிச்சிறப்பு பெற்ற மல்லச்சந்திரம் பெருங் கற்படை நினைவுச் சின்னங்கள், தனித்தன்மை வாய்ந்தவை. இவை, ஒரே இடத்தில் 200-க்கும் மேற்பட்டுக் காணப்படுவதும், அரிதான ஒன்றாகும்.

சிறப்பு வடிவமைப்பு

இங்கு காணப்படும் கல்திட்டைகளில், ஐந்துக்கும் மேற்பட்ட வடிவங்களைக் காணமுடிகிறது. கல்லறையைச் சுற்றிய தலைப்பகுதியை அரைவட்ட வடிவம் கொண்ட பலகைக் கற்களைக் கொண்டு வடிவமைப்பதை சிறப்பு வடிவமாகக் கருதலாம். மேலும், இதனை கல்லறையைச் சுற்றி வட்டமாக அமைக்க, தலைப்பகுதியில் அரை வட்டம் கொண்ட பலகைக்கல், அதனை ஒட்டி சாதாரணமான செவ்வகப் பலகைக்கல் என்று ஒன்றை அடுத்து ஒன்று என மாறிமாறி வைத்து அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

(மல்லச்சந்திரம் - பலகைக் கல்லின் தலைப்பகுதி அரைவட்ட வடிவில் காணப்படுகிறது)

இவை மிகவும் அரிய வகையாகும். அடுத்த கட்டுமானச் சிறப்பாக, கல்லறையைச் சுற்றி செவ்வகக் கற்கள் கொண்டு சுவர்போல் அடுக்கிக் கட்டப்பட்டுள்ளதாகும். இவ்வமைப்பு, இந்த நினைவுச்சின்னத்தைப் பாதுகாக்கும் முறையாகும். இவ்வமைப்பு, தற்காலக் கோயில் அமைப்பு போன்று கல்லறை நடுவில் இருக்க, சுற்றிலும் இரண்டு வட்டமாக திருச்சுற்றுப்பாதைகள் (கோயில் பிராகாரச் சுற்றுகள்) போன்று அமைத்த வடிவமாகும். இத்தோற்றமும் வடிவமைப்பும், இதன் கட்டுமானச் சிறப்பை வெளிக்காட்டுவதாக உள்ளன.

இங்கு காணப்படும் மற்றொரு அமைப்பு, கல்வட்டமும், அதன் உள்ளே செல்ல பாதையும் அமைத்துள்ள வடிவமாகும். ஒரு பெரிய கல்வட்டத்துக்குள் பல பிரிவுகளை உடைய கற்பதுக்கை அமைத்துள்ள அமைப்பும் அரிதான ஒன்றாகும். இக்கட்டடக் கலையின் தோற்றமே, பின்னர் கோயில் கட்டுமானத்துக்கு வழி வகுத்தன எனலாம். இங்கு, இரண்டு இடுதுளைகள் கொண்ட கல்திட்டைகளும் காணப்படுகின்றன.

(மல்லச்சந்திரம் - பாதையுடன் காணப்படும் கல்திட்டை)

(மல்லச்சந்திரம் - சாதாரண கற்பதுக்கை, இடுதுளையுடன்)

(பெருங் கற்கால நினைவுச்சின்னங்கள் நிறைந்து காணப்படும் மல்லச்சந்திரம். கிருஷ்ணகிரி மாவட்டம், கல்திட்டை. நீள் செவ்வக வடிவில் உடைத்தெடுக்கப்பட்ட கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட பெருங் கற்படைச் சின்னம்)

மேலும், இக்கல்திட்டைச் சின்னங்களில், இடுதுளைகளை வட்டமாக நேர்த்தியாக அமைத்துள்ளதையும் காணமுடிகிறது. இங்கு, கல்திட்டைகள் அமைக்கப் பயன்படுத்தப்பட்ட கற்பலகைகள், சம அளவு கொண்ட செவ்வக வடிவில் உடைத்தெடுக்கப்பட்ட தன்மை, கவனிக்கத்தக்க வளர்ச்சியாகும்.

தலைவனுக்கு எடுக்கப்பட்ட நினைவுச் சின்னம்!

இங்கு, தொகுப்பாக அமைக்கப்பட்ட கல்திட்டைகளின் மையப்பகுதியில் சிறப்பாக அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்தைச் சுற்றிலும் 6.30 மீட்டர் இடைவெளி விட்டு பல கல்திட்டைகளை அமைத்துள்ளனர், இந்த அமைப்பைக்கொண்டு, மையத்தில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னம், இக்குழுவின் தலைவனுக்கு எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என ஊகிக்கமுடிகிறது.

(மல்லச்சந்திரம், கிருஷ்ணகிரி மாவட்டம் - தொகுப்பாக உள்ள கல்திட்டைகள்)

(மல்லச்சந்திரம் - கல்திட்டை ஓவியம்)

மல்லச்சந்திரம், பெருங் கற்படைக் கால மக்கள் வரைந்த ஓவியங்களை கற்பதுக்கையில் காணலாம்.

பாறை ஓவியங்கள்

இந்தியாவில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட தொல் பழங்காலப் பாறை ஓவியங்கள், பிம்பேட்கா என்ற இடத்தில் உள்ள குகை ஓவியங்களே ஆகும். மத்தியப் பிரதேசத்தில் ரைசன் மாவட்டத்தில் பிம்பேட்கா அமைந்துள்ளது. இந்த ஓவியங்கள், இடைப் பழங்காலத்தைச் சார்ந்தவை என்று தொல்லியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஓவியங்கள்தான், முதன்முதலில் மனித வாழ்வியலைக் குறிக்கும் ஓவியங்களாக உள்ளன. இங்கு, கொம்புகளை உடைய காட்டெருமை, யானை, மான் ஆகியவற்றுடன் வேட்டையாடுதலும், மன்னன் குதிரை மீது செல்லுதல் போன்ற காட்சிகளும் வரையப்பட்டுள்ளன. இவை, காலத்தால் பழமைவாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. (இவற்றின் காலம் 10,000 ஆண்டுகள் முதல் 3,000 ஆண்டுகள் வரை என பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன). இவற்றில், வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பழமையான பிம்பேட்கா ஓவியக் காட்சிகள்

(யானை உருவமும், அதில் மனிதன் பயணிக்கும் காட்சியும்)

(வேடைக்காட்சியும், குதிரை மீது அமர்ந்த மனிதனும்)

(குதிரை சவாரிக் காட்சி)

(கொம்புடைய காட்டெருமையை வேட்டையாடும் காட்சி)

தமிழகத்தில் பாறை ஓவியங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மல்லப்பாடி என்ற இடத்தில் காணப்படும் குகை ஓவியத்தில், வேட்டையாடுதல், குதிரை மீது சவாரி செய்துகொண்டே ஈட்டி எறிதல் போன்ற காட்சிகளும், இரண்டு குதிரை வீரர்கள் நேருக்கு நேர் போரிடும் காட்சி, மகளிர் நடனமாடுதல் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இக்காட்சியில், ஆடை அமைப்பும் காட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியம்தான், தமிழகத்தில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட தொல் பழங்கால ஓவியமாகும். தொல் பழங்கால ஓவியங்களின் வரலாறு, அவ்வப்பகுதியின் பண்பாட்டோடு தொடர்புடையதாக வெளிப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்கள், இங்கு பழமையான ஓவியங்கள் காணப்படவில்லை என்ற கருத்தை தெரிவித்தனர். மல்லப்பாடி குகைப் பகுதியில் பாறை ஓவியங்கள் இருப்பதை, பேராசிரியர் ராமன் அவர்கள் தலைமையில் அகழாய்வில் ஈடுபட்டிருந்த சென்னைப் பல்கலைக் கழக மாணவர்கள்தான் முதன்முதலில் கண்டறிந்து வெளிப்படுத்தினர். இந்த ஓவியம் வெண்மை நிறம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பின்னர், பாகூர் குப்புசாமி அவர்கள், விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாளை என்ற இடத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட ஓவியங்கள் காணப்பட்டதை அறிந்து தெரிவித்தார்.

கீழ்வாளை ஓவியங்கள்

(ஒரு படகில் நால்வர் கைகோர்த்துக்கொண்டு செல்லும் காட்சி)

(குதிரை மீது ஒருவர், கடிவாளத்தைப் பிடித்தவருடன் இன்னொருவர் உள்ள காட்சி)

கீழ்வாளையில் கண்டறியப்பட்ட ஓவியங்கள் சிவப்பு நிற வண்ணம் கொண்டவை என்ற பெருமையைப் பெற்றுள்ளன. அரிய மிகப்பழமையான ஓவியங்கள் சிவப்பு வண்ணத்திலேயே தீட்டப்பட்டுள்ளன. கீழ்வாளை ஓவியங்களும், அக்கால மக்களின் அன்றாட வாழ்க்கையை எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளன. இந்த ஓவியங்களில், சிவப்புடன் வெண்மை நிறமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு காட்டப்பட்டுள்ள மனிதர்களின் தலைப்பகுதி வித்தியாசமாகக் காட்டப்பட்டுள்ளது.

(வெண்மை நிறத்தில் காணப்படும் கீழ்வாளை ஓவியம்)

இந்த ஓவியங்களில், ஒரு படகில் நான்கு மனிதர்கள் செல்வது போன்றும், குதிரை மீது ஒரு வீரன் அமர்ந்துள்ள நிலையிலும், மற்றொருவன் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துள்ள நிலையும், அருகில் மூன்றாதாக இன்னெருவன் நின்றிருப்பது போலவும், மற்றொரு காட்சியில், பலர் ஒருவருக்கொருவர் கையைப் பிடித்துக்கொண்டு இணைந்து செல்வது போலவும்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

(குறியீடுகள் இடம்பெற்ற கீழ்வாளை ஓவியம்)

கீழ்வாளையில் கிடைத்த ஓவியங்களில், சிந்துவெளி முத்திரைகளை ஒத்த குறியீடுகள் இடம்பெற்றுள்ளது, மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த ஓவியம், தமிழ்நாடு அரசால் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பாறை ஓவியங்கள் காணப்படும் பிற இடங்கள்

கீழ்வாளை ஓவியத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்த ஓவியங்கள் குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்பட்டது. அதன்பின்னர், தமிழகத் தொல்லியல் துறை, “புதையுண்ட தமிழகம்” ஆசிரியரின் தலைமையில் ஒரு குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு, பல இடங்களில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் இருப்பதைக் கண்டறிந்து வெளிக்கொண்டு வந்தது.

இக்குழு, கீழ்வாளை ஓவியம் இருந்த விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தன் ஆய்வைத் தொடங்கியது. அது, விழுப்புரம் முதல் திருக்கோவிலூர் வரை காணப்படும் அனைத்து மலைகள் மீதும் கவனம் செலுத்தி தன் ஆய்வை தீவிரப்படுத்தியது. அதன் பலனாக, செத்தவரை, ஆலம்பாடி, படியேந்தல், வேட்டைகாரன்மலை என, பல புதிய தொல் பழங்கால ஓவியங்கள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட்டன. இதன் இன்னொரு பலனாக, உதயநத்தம் ஆந்ரோஃபார்மிக் உருவம் என்றும் தாய் தெய்வ உருவம் என்றும் ஸ்ரீவத்சம் என்றும் குறிக்கப்படும் குத்துக்கல், பல கல்வட்டங்கள், பகுக்கப்பட்ட கல்லறைகள், கண்டாச்சிபுரம் அருகே இடுதுளையுடன் உள்ள கல்லறை மற்றும் பல நினைவுச்சின்னங்களும், தொல்பொருட்களும் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட்டன.

பின்னர், தமிழகம் முழுவதும் இக்குழு ஆய்வு செய்தது. இதன் பலனாக, கோவை மாவட்டம் வேடைக்காரன்புதூர், பெரியநாயக்கன்பாளையம் அருகே 'கோவனூர் ஓவியங்கள்' அறியப்பட்டன. கோவனூர் ஓவியத்தில், வெண்மை நிறத்தில் வரையப்பட்ட கொம்புடன் கூடிய மாட்டின் உருவமும், மீன் போன்ற உருவங்களையும் காணமுடிகிறது.

(கோவனூர் ஓவியம் - கோவை மாவட்டம்)

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர் கா. ராஜன் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில், ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தில் (இன்றைய தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்) மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மேலும் பல இடங்களில் பெருங் கற்கால ஓவியங்கள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பாக, தருமபுரி மாவட்ட ஆசிரியர்களுடன், 'புதையுண்ட தமிழகம்' ஆசிரியரும் இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல தொல் பழங்கால ஓவியங்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் கோயம்புத்தூர், திண்டிவனம், குடியாத்தம், உதகமண்டலம், பழநி என பல பகுதிகளில் இருந்தும் தொல் பழங்கால ஓவியங்கள், ஆர்வலர்கள் மற்றும் தொல்லியல் துறையினரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில், தொல் பழங்கால ஓவியங்கள் அதிக அளவில் கிடைக்கும் பகுதியாக இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் விளங்குகிறது. வரட்டணபள்ளி, குருவிநாயனபள்ளி, குருபரபள்ளி, மல்லச்சந்திரம், மல்லப்பாடி, ஒப்பத்தவாடி, ஒதிக்குப்பம், பட்டகப்பட்டி ஆகிய இடங்களில் எல்லாம் இத்தைய ஓவியங்களைக் காணமுடிகிறது. இம்மாவட்டத்தின் மகாராஜாக்கடை என்ற அங்கனநாச்சிமலை குகைத்தளங்களில், வளமைச் சடங்கைப் போற்றும் வகையில் ஆண், பெண் உருவங்கள் வரையப்பட்டுள்ளன.

இவற்றுக்கு முத்தாய்ப்பாக, செத்தவரை குகை ஓவியத்தில், கைமுத்திரைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை, இந்த ஓவியத்தை வரைந்த மனிதனின் கையொப்பம் போன்று, எழுதப்படிக்கத் தெரியாத மக்கள் தங்களது கைரேகையைப் பதிவதுபோல், ஓவியங்களின் கீழ்ப்பகுதியில் கைப்பகுதியைப் பதிவு செய்துள்ளனர் என்பதற்கு இது குறிப்பிடத்தக்க சான்றாகும்..

கற்பதுக்கைகளில் ஓவியங்கள்

கல்திட்டைகளில் உட்புற பலகைக் கற்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் அன்றாட வாழ்வியலைச் சித்தரிக்கின்றன. வேட்டையாடுதல், விலங்குகளுடன் போரிடுதல், நாட்டியமாடுதல், பல கால்களை உடைய விலங்குகள் மற்றும் குறியீடுகள் என பலவகையிலான காட்சிகள் இந்த ஓவியங்களில் இடம்பெற்றிருக்கின்றன.

மல்லப்பாடி ஓவியங்கள்

(மல்லப்பாடி - குதிரை மீது அமர்ந்த நிலையில், இருவர் ஈட்டியுடன் போரிடும் காட்சி)

இந்த மல்லப்பாடி ஓவியத்தில், இரண்டு வீரர்கள் குதிரை மீது அமர்ந்து ஈட்டி கொண்டு போரிடும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதில், குதிரைகளும் ஆக்ரோஷத்துடன் இருப்பதுபோல் காட்டப்பட்டுள்ளது சிறப்பாகும். இந்த ஓவியத்தில், மேல்பதியில் இருவர் வாள் கொண்டு போரிடும் காட்சியும் காட்டப்பட்டுள்ளது. இதில் இடம்பெறும் உருவங்கள், இடையில் (புல் அல்லது இலைதழை ஆடை) ஆடையுடன் இருப்பதுபோல் காட்டப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து, பெருங் கற்கால மக்கள் பரந்த அளவில் ஒரு சிறந்த நாகரிகத்தைப் பின்பற்றி வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

கொல்லூர் ஓவியம்

(கொல்லூர் - கோட்டுருவம்)

(பல கால்கள் கொண்ட விலங்கு)

ஓவியங்களில் கோட்டுருவமும், ஏற்கெனவே போடப்பட்ட கோட்டுருவத்தின் மீது மேலும் ஒரு வண்ணத்தைக் கொண்டு வரைவதை அக்கால மக்கள் பின்பற்றியுள்ளனர் என்பதை அறியமுடிகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் காணப்படும் ஓவியங்களில், சிவப்பு நிற ஓவியங்கள் மேலேயே வெள்ளை நிறக் கோடுகளும் காணப்படுகின்றன. இவற்றில் சூரியன், சந்திரன், எருமை, மாடுகள், குதிரை போன்ற விலங்குகளையும், பல கால்களையும் கொண்ட மிருகங்களையும் வரைந்துள்ளனர்.

மனிதர்களைக் குறிக்க, கோடுகளால் கை, கால், பாதம் ஆகியவை வரையப்பட்டுள்ளன. இவர்களது கைகளில் ஈட்டி, குச்சி போன்றவற்றையும் காணமுடிகிறது. பெண்கள் நடனமாடும் காட்சிகள், அவர்கள் திருவிழா எடுப்பித்ததை காட்டுகிறது. அவர்களது ஆடை, பிற அலங்காரங்களும் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன. டமருகம், ஏணி, ஸ்வஸ்திகா, சதுரம் போன்றும் சில குறிப்பிடமுடியாத குறியீடுகளையும் வரைந்துள்ளதைக் காணமுடிகிறது.

செத்தவரை ஓவியம்

(செத்தவரை - நெருப்பு மூட்டி இறைச்சியைச் சுடும் காட்சி)

செத்தவரை ஓவியங்கள், பலவகைச் சிறப்புகளைக் கொண்டுள்ளது. இதில், பெருங் கற்கால மக்கள் தீயை மூட்டி, அத்தீயின் மேல் ஒரு குச்சியில் இறைச்சியை மாட்டிவைத்துச் சுடுவதுபோல் காட்டப்பட்டுள்ளது. அருகே, மானின் உருவம் பெரியதாகக் காட்டப்பட்டுள்ளது. இது, வேட்டைக்குச் சென்ற மக்கள், மானை வேட்டையாடி, அதன் இறைச்சியைச் சுடும் காட்சியாகும். இது, அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிபோல் சித்தரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அக்கால மக்கள் இறைச்சியை தீயில் சுட்டு சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதும் புலப்படுத்துகிறது. இதனை, கலைத்திறன் கொண்ட ஒருவன் நிழற்படம் எடுப்பதுபோல் சித்தரித்து, அதனை யாவரும் உணரும் விதத்தில் வரைந்து காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, ஒரு ஓவியத்தில் பல செய்திகளை விளக்கியுள்ளது, தமிழக முன்னோர்கள் எத்தகு கலைத்திறம் பெற்றவர்களாகத் திகழ்ந்திருந்தனர் என்பதைக் காட்டுகிறது.

இந்தச் சித்தரிப்புக்குக் கீழே, பல கைகளின் பதிப்புகள் காணப்படுகின்றன. இவை, இந்த ஓவியத்தை வரைந்தவனின் கையொப்பத்துக்குப் பதிலாக, கையை அச்சாக வைத்துள்ளனர். இது, இந்த ஓவியங்களை வரைந்தவர்களின் கை அச்சாக இருக்க வேண்டும். இதைக் காணும்பொழுது, அக்கால மக்கள் எத்தகைய வளர்ச்சி நிலையை அடைந்துள்ளனர் என்பதுடன், எத்தகைய அறிவு முதிர்ச்சி பெற்றவர்களாக இருந்துள்ளனர் என்பதையும் எண்ணி வியக்கச் செய்கிறது. கை ஓவியங்கள் அனைத்தும், ஒரு வட்டத்துக்குள் ஓவியத்தின் கீழ்ப்பகுதியில் வரையப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.

மீன் உருவம்

(செத்தவரை - மீன் உருவம்)

செத்தவரை ஓவியத்தில், மாட்டின் உருவம், மீனின் உருவம் ஆகியவை எக்ஸ்ரே படம்போல், உள் எலும்புகள் முதலான உள்தோற்றத்தை அப்படியே காட்டுவதுபோல் வரையப்பட்டுள்ளது. மாட்டின் முதுகெலும்பும், மீனின் முட்களும் தெளிவாக இதில் காட்டப்பட்டிருப்பது பெரும் சிறப்புக்கு உரியதாகத் தோன்றுகிறது. அது, தமிழகத்தில் பெருங் கற்படைக் கால மக்கள் மிகவும் தெளிந்த சிந்தனையுடன் அறிவுபூர்வமாகச் செயல்பட்டுள்ளனர் என்பதை தெளிவாக்குகிறது.

ஓவியங்கள் குறித்த ஆய்வின் முடிவில், ஒரு இடத்தில் வாழ்ந்த பெருங் கற்படைக் கால மக்கள், அந்த இடத்தில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவு வரை பரவலாக வாழ்ந்துள்ளனர் என்பது தெரிகிறது. தருமபுரி மாவட்டத்தில் திருமல்வாடி, நல்லாம்பட்டி, திருவண்ணாமலை மாவட்டம், நாயனூர், தேவனூர் போன்ற இடங்களில் கிடைக்கும் பெருங் கற்படைச் சின்னங்கள் மீதான ஆய்வுகளும் இக் கருத்தை மெய்ப்பிக்கின்றன. மேலும், உணவு தேடுதலுக்காக வேட்டைக்குச் செல்லும் மக்கள், தங்களது இருப்பிடத்தை விரிவுபடுத்திக்கொண்டே சென்றிருக்கலாம் எனவும் தோன்றுகிறது.

தமிழகப் பாறை ஓவியங்களின் கால நிலை

தமிழகத்தில் காணப்பட்ட பாறை ஓவியங்களை ஆய்வு செய்த தொல்லியல் வல்லுநர்கள், அவற்றை, காலத்தால் 3000 - 5000 ஆண்டுகளுக்கு உட்பட்டது என்பர். அதாவது, இவை பெருங் கற்கால மக்களால் வரையப்பட்ட ஓவியங்கள் என்ற கருத்தையே வெளிப்படுத்துகின்றனர். மேலும், தமிழகத்தில் கிடைத்துள்ள பாறை ஓவியங்கள் அனைத்தும், பெருங் கற்கால நினைவுச்சின்னங்கள் அமைந்த இடத்துக்கு அருகே அமைந்த பாறைகளிலும் குகைத்தளங்களிலுமே காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செத்தவரை, உதயநத்தம், கொல்லூர், மல்லப்பாடி, மகாராஜாக்கடை, மல்லச்சந்திரம் போன்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பகுதிகளுக்கு அருகே, பெருங் கற்படைக் கால மக்களின் நினைவுச்சின்னங்கள் அல்லது வாழ்விடங்களைக் காணமுடிகிறது. மேலும், இக்கருத்துக்கு வலு சேர்ப்பதுபோல், தமிழகத்தில் பல மாவட்டங்களில் கிடைத்த பெருங் கற்கால நினைவுச்சின்னங்களின் கற்பலகைகளிலேயே ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. இச் சான்றுகளின் அடிப்படையிலும், தமிழகத்தில் கிடைத்துள்ள ஓவியங்களின் காலம் 3000 - 5000 ஆண்டுகளுக்கு உட்படுத்துவது பொருத்தமானதே. இக்காலக் கணிப்பானது, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பு ஆய்வுகளின்படியும், சான்றுகளின் அடிப்படையிலுமே வரையறுக்கப்படுகிறது எனலாம்.

தமிழகத்தில் ஓவியங்கள் வரைந்துள்ள இடங்களை ஆய்வு செய்தபோது, பெருங் கற்படைக் கால மக்களின் நினைவுச் சின்னங்களுக்கு அருகே அமைந்துள்ள பாறைகளிலும், குகைத்தளங்களிலும் அவை காணப்படுகிறது எனக் குறிப்பிட்டோம். இது, பெருங் கற்படைக் காலத்துக்கும், புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட காலமாகும். இங்குதான், பெருங் கற்கால மக்கள் இரவு நேரத்தில் தங்கள் உணவு தேடுதலுக்கோ அல்லது வேட்டையாடுவதற்கோ சென்று திரும்பிய பின்பு, இரவில் தங்கிய  பாறைகளிலும், குகைத்தளங்களிலும் தாங்கள் செய்த செயலை தத்தமது திறமைக்கு ஏற்ப வண்ணக்கலவைகள் கொண்டு வரைந்து பதிவு செய்துள்ளனர் என்று கருதலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com