அமைவிடம்
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறையில் இருந்து 26 கி.மீ. தொலைவிலும், சீர்காழியில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும், பூம்புகார் எனும் காவிரிப்பூம்பட்டினம் அமைந்துள்ளது. வங்கக் கடற்கரை ஓரத்தில் அமைந்த பண்டைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சிறந்த வணிக நகரம் மற்றும் சிலப்பதிகாரம் எனும் காவியத்துக்குக் கருவாக அமைந்த ஊர் எனப் பல்லாற்றானும் புகழ்மிக்கது காவிரிப்பூம்பட்டினம்.
வரலாற்றுச் சிறப்புகள்
இவ்வூர் புகார், பூம்புகார், காவிரிபுகும்பட்டினம், காவேரிப்பட்டினம், கபேரிஸ் என்ற பெயர்களைக் கொண்டு வரலாற்று நெடுகிலும் சிறப்புறத் திகழ்ந்துள்ளது. சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை ஆகியவை, இவ்வூர் பற்றிய விரிவான செய்திகளை எடுத்தியம்புகின்றன.
இவ்வூர் ஒரு சிறந்த வணிகத்தலமாகவும், செல்வந்தர்கள் வாழ்ந்த ஊராகவும், நாளங்காடி, அல்லங்காடி என இரவும்பகலும் தொடர் வாணிகம் நடைபெற்ற ஊராகவும் இலக்கியங்களில் புகழப்பட்டுள்ளதும் அறிந்த ஒன்றாகும். அயல்நாட்டார்கள் பலரும் வந்து இங்கு தங்கி வணிகம் புரிந்துள்ளனர். குறிப்பாக, உரோமானியர்கள் இங்கு வருகை புரிந்து வாணிகம் புரிந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது.
காவிரிப்பூம்பட்டினத்தில், அரசன் வாழ்விடம், அந்தணர் இருப்பிடம், மருத்துவர், ஜோதிடர் எனப் பல பிரிவினருடன், நாட்டியக் கலைஞர்களும் வாழ்ந்த இடங்கள் இருந்ததை அறியமுடிகிறது. மேலும், சிறப்புமிக்க கடற்கரை துறைமுகப்பட்டினமாக விளங்கிய நகரம் என்பதால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நல்ல நிலையில் இங்கு நடைபெற்று வந்துள்ளது. அதாவது, பல்வேறு நாடுகளிலிருந்து கப்பல்கள் இங்கு இறக்குமதிப் பொருட்களுடன் வரும். அதேபோல, இங்கிருந்து கப்பல்கள் மூலமாகப் பல பொருட்கள் ஏற்றுமதியும் செய்யப்படும். ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்கவை சந்தனம், அகில், முத்து, மிளகு, அரிய கல்மணிகள் போன்றவை ஆகும்*1.
சங்க காலச் சோழர்களும் புகாரும்
மூவேந்தர்கள் ஆட்சிபுரிந்த தமிழகத்தில், அருட்செல்வத்தாலும், பொருட்செல்வத்தாலும், கலைச்செல்வத்தாலும் புகழ்பெற்று விளங்கியவர்கள் சங்க காலச் சோழர்கள் என்றால் அது மிகையாகாது. பிற பகுதிகளில் நாகரிகம் வளர்ச்சிபெறாத காலத்திலேயே, சோழ மன்னர்கள் காவிரி ஆற்றுக்குக் கரை எடுத்தல், அணை கட்டுதல், தடுப்பணை அமைத்தல், கால்வாய்களைச் செப்பனிடுதல் போன்ற அத்தியாவசியப் பணிகளைச் செய்து மக்களுக்குத் தொண்டாற்றி, நாட்டை வளம்கொழிக்கச் செய்தவர்கள் ஆவர். அதோடு நிற்காமல், வாணிபத் துறையில் உலக நாடுகளோடு தொடர்புகொண்டு, கடல்கடந்த வாணிகத்தைப் பெருக்கியவர்களும் சோழர்களே ஆகும்.
உறையூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த கரிகாலன், காவிரி ஆற்றுக்குப் பெரிய கரையை அமைத்தான். கடலோடு காவிரி கலக்கும் இடத்தில் இயற்கையான துறைமுகமாக இருந்த இக்காவிரிப்பூம்பட்டினத்தை தனது அரசுக்கான தலைமை நகரங்களுள் ஒன்றாக அமைத்துக்கொண்டான். இமயம்வரை படை எடுத்துச் சென்று பகைவர்களை வென்று, இமயமலை முகட்டில் புலி இலச்சினையைப் பொறித்துத் திரும்பியவன். மகத நாட்டைப் போரில் வென்றதால், அவ்விடத்தில் இருந்து அழகிய பட்டிமண்டபத்தையும், அவந்திவேந்தனின் தோரணவாயிலையும், வச்சிர நாட்டு மன்னன் அளித்த பொன்னாலும் மணியாலும் அமைக்கப்பட்ட முத்துப்பந்தலையும் பெற்றுவந்து, தனது காவிரிப்பூம்பட்டினத்தில் வைத்து அழகுபடுத்தினான் என்று இளங்கோவடிகள் தனது சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.
“இருநில மருங்கிற் பொருநரைப் பெறாஅச்
செருவெங்காதலின் திருமாவளவன்
***
மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோனிறை கொடுத்த கொற்றப்பந்தரும்
மகதநன்னூட்ட வாள்வாய்வேந்தன்
புகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபமும்,
அவந்திவேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்தோங்கு மரபில் தோரணவாயிலும்
பொன்னி;னும் மணியினும் புனைந்தன வாயினும்”
என்று குறிப்பிடுகிறார்.
இச்சிறப்பு மட்டுமல்லாது, பட்டினப்பாக்கமும் மருவூர்பாக்கமும் அமைத்து, வணிகத்தைப் பெருக்கிய பாங்கு குறித்தும், அயல்நாட்டு வணிகம் சிறக்கவேண்டி நாளங்காடியும், அல்லங்காடியும் அமைத்தனர் என்பதையும் இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது.
புகார் நகரத்தில் வீற்றிருந்த மன்னர்களும் புலவர்களும்
புகார் நகரில் வீற்றிருந்து அரசு புரிந்த மாமன்னர்கள் பலர், இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களில், நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி, கரிகால்வளவன், சேட்சென்னி, நலங்கிள்ளி, கிள்ளிவளவன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்.
பழந்தமிழ் இலக்கியங்களால் கடைச் சங்கக் காலத்தில் புகார் நகரத்தில் தோன்றிச் செந்தமிழ் வளர்த்த பெரும்புலவர்களாகக் கீழ்கண்டோர் உள்ளனர்.
காவிரிபூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிபூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிபூம்பட்டினத்துச் சேந்தன்கண்ணனார்
காவிரிபூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிபூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் நப்பூதனார்
சம்பாபதி வனம்
பண்டைக் காலத்தில் இருந்தே பூம்புகாரின் சிறப்புக்கு அங்கு வீற்றிருக்கும் சம்பாதி அம்மனும் ஒரு முக்கியக் காரணம்.
சம்பாபதி அம்மன்
சம்பாபதி அம்மன் முழுவதும் சுதையால் செய்யப்பட்ட உருவமாகும். இது பொ.ஆ. 1 – 2-ம் நூற்றாண்டுகளைச் சார்ந்தது. ஏறத்தாழ 1900 - 2000 வருடப் பழைமை வாய்ந்தது. சாய்க்காட்டில் அமைந்த சாய்க்காட்டு அம்மை என்றும் சம்பாபதி அம்மன் அழைக்கப்படுகிறாள். புகார் நகரத்தின் தெய்வம் இச்சம்பாபதி அம்மன். இவ்வூர், புகார் நகரின் ஒரு பகுதியே எனலாம். இதனைக் குறிக்கும் “தண்புகார்ச் சாய்க்காட் டெந்தலைவன்” என வரும் திருஞானசம்பந்தர் அருளிச் செய்த திருப்பதிகத் தொடரால் நன்கு அறியலாம். சாய்க்காட்டில் உள்ள திருக்கோயிலின் தெற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் இச்சம்பாபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது இக்கோயிலுக்குக் கிழக்கே, காவிரியின் கரையோரம் அமைந்த பூவனம் மணிமேகலையில் குறிக்கப்பட்ட பழைய ‘உவவனம்’ ஆகும்.
தவறு செய்யும் மக்களை இங்கு அழைத்து வந்து நிற்கவைத்து, தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மைதானா? என்று கேட்கும்பட்சத்தில், இச்சம்பாபதி அம்மன் முன் யாரும் பொய் கூறத் தயங்கி, அனைத்து உண்மைகளையும் கூறிவிடுவர் என்பது அக்கால வழக்கு. அத்தகு சம்பாபதி அம்மன் கோயில் அமைந்த இடம்தான் சம்பாபதி வனம் ஆகும். இங்கு, திருவிழாக் காலங்களில் புதுமணத் தம்பதியினர் சென்று தங்கள் வாழ்க்கை வளம்பெற அம்மனை வேண்டி அருளைப் பெற்றுச் செல்வர். இதை ஒரு பெரிய சடங்காகவே நடத்திவந்துள்னனர்.
அகழாய்வின் நோக்கம்
நாளங்காடியாகிய சோலைக்குக் கிழக்கே கடற்கரையை ஒட்டி அமைந்த நகர்ப்பகுதியாகிய மருவூர்பாக்கத்தில், கப்பல் மூலமாக வாணிகம் செய்யும் வெளிநாட்டு வாணிகர்கள் தம்முள் வேறுபாடி இன்றித் தங்கி வாழ்ந்த இருப்பிடங்களும், வண்ணம், சுண்ணம், சாந்தம், நறும்புகைக்கு உரிய வாசனைப் பொருட்களும், இவற்றை விலை கூறி விற்போர் திரிந்த பெருந்தெருக்களும், அழகிய நுண்ணிய மயிராலும், பருத்தி நூலாலும், பட்டு நூலாலும் நெய்யவல்ல சாலியர் முதலியோர் இருந்த இடங்களும், கூலக்கடைத் தெருவும், சிற்றுண்டி செய்து விற்போர் என பல்வேறு தொழில்புரிவோரும் வாழ்ந்த இடங்கள் எல்லாம் தற்போது எங்கே என்ற கேள்வியே பூம்புகார் அகழாய்வுக்கு வித்திட்டது.
மேலும், இங்குள்ள பரதவர்கள், இன்றைக்கும் கப்பகரப்பு, கரையப்பர் என்ற சொற்களைப் பயன்படுத்தி, தங்களது மீன்பிடித்தல் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். ’கைதைவேலி நெய்தலங்கானல்’ என இளங்கோவடிகளால் குறிக்கப்பெற்ற இப்பகுதி சோமகுண்டம், சூரியகுண்டம் ஆகிய தீர்த்தங்களையும், காமவேள் கோட்டத்தையும் தன்னகத்தே கொண்டு விளங்கியதாகக் குறிப்பர். புகார் நகரின் கிழக்குப் பகுதியில் இருந்த கட்டடங்களும், காமவேள் கோட்டம் முதலிய கோயில்களும் கடல்கோளால் கொண்டுசெல்லப்பட்டன. அவற்றின் எச்சங்களை இன்றைக்கு வாழ்பவர்கள் நன்கு அடையாளமிட்டுக் காட்டுகின்றனர்.
இப்பகுதியிலிருந்து, கல்யாணசுந்தரர் செப்புத் திருமேனியும், அழகம்மை எனும் கற்சிற்பமும் மீன்பிடி வலையில் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. திருச்சாய்காட்டத் திருக்கோயிலில் அமைந்த வில்லேந்திய முருகன் திருவுருவமும் கடலிலிருந்து எடுக்கப்பட்டதே. திருவெண்காடு கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட கற்சிற்பங்கள், இன்று தஞ்சைக் கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாமல், எண்ணிலடங்கா முதுமக்கள் தாழிகளும், உறை கிணறுகளும், பெருங்கிணறுகளும் தொல்பொருட்களும், மணிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
முதுமக்கள் தாழியில் புடைப்புச் சிற்பங்களைப் பதித்து, தாய் தெய்வ வழிபாட்டையும் வளமைச் சடங்கையும் பெருமைப்படுத்திய பகுதி பூம்புகார் என்பதற்கு, இங்கு மேற்பரப்பு ஆய்வில் சேகரிக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் பதிந்திருந்த தாய் உருவங்களைக் குறிப்பிடலாம். எனவே, வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலும் வரலாற்றின் தொடக்கக் காலத்திலும் பெரும் நாகரிக வளர்ச்சியையும், தமிழக மக்களின் பண்பாட்டையும் சமய வழிபாட்டையும் எடுத்து இயம்பியுள்ள பூம்புகார், வரலாற்றில் தனியொரு சிறப்பிடம் வகித்துள்ளது.
அவை இன்று மண்ணோடு மண்ணாகிக் காணமல் போனதா? இல்லை, கடல்கொண்டு சென்றதா? என ஆய்வு செய்யவே, இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் பெரும்முனைப்போடு செயல்பட்டு, தரைப்பகுதியில் பரந்தளவில் ஒரு அகழாய்வை மேற்கொண்டு, பல்வேறு தடயங்களை இந்த உலகுக்கு வழங்கியுள்ளன.
சிலம்பு கூறியதும், இளங்கோவடிகள் எடுத்தியம்பியதும், பிற இலக்கியங்கள் பகர்ந்ததும் மிகையன்று. அவற்றை நாம் தற்போது அகழாய்வுகளின் வாயிலாக வெளிக்கொணர்ந்து, நம் பழந்தமிழர் பெருமையையும், தமிழ்ச் சமுதாயத்தின் பெருமையையும், தமிழகத்தை ஆட்சிபுரிந்த சங்க காலச் சோழர்களையும் தலைநிமிரச் செய்பவையாகவே திகழ்கின்றன எனலாம். அத்தகைய அகழாய்வுச் சான்றுகள் என்னென்ன என்பதையும், அவற்றின் வாயிலாக புகார் நகருக்கு வருகை புரிந்த அயல்நாட்டார் குறித்த அனைத்து செய்திகளும் இதன்மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.
இந்த அகழாய்வுச் செய்திகள் என்னவென்று பார்ப்போம். முதலில், மேற்பரப்பு மற்றும் களஆய்வில் சேகரிக்கப்பட்ட தொல்பொருட்களான சுடுமண் பொருட்களைக் காணலாம்.
சுடுமண் பொருட்கள்
புகார் நகரின் சிறப்பை வெளிக்கொணருவதற்காகவே தன் வாழ்நாளை செலவிடுபவரான அப்பகுதி ஆய்வாளர் புலவர் திரு. தியாகராஜர் அவர்கள், புகார் பகுதியில் மேற்கொண்ட களஆய்வில் சேகரித்து வைத்திருந்த தொல்பொருட்களை, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையினரால் புகாரில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்கடல் அகழ்வைப்பகத்துக்கு வழங்கியுள்ளார். அவற்றில் இன்றியமையாத தொல்பொருட்களாக உள்ளவை சுடுமண் பாவைகள் ஆகும். இவை தனிச்சிறப்பு பெற்றவை. இவை, முதுமக்கள் தாழியின் தோள்பட்டையில் பதியப்பட்டவை ஆகும் இவையே, அக்காலத்திய பெண் தெய்வ வழிபாட்டையும், வளமைச் சடங்கையும் பறைசாற்றுபவையாக உள்ளன. அவற்றைக் காண்போம்.
முதுமக்கள் தாழியின் தோள்பட்டைகளில் காணப்படும் தாய் தெய்வ உருவங்கள்
சுடுமண் பௌத்த பாதங்கள் – பூம்புகார் களஆய்வு
புகார் படகுத்துறை கட்டுமானப் பகுதி – மரக்கம்புப் பகுதி
படகுகள் வந்தால், அவற்றைப் பிடித்துக் கட்டுவதற்காகப் படகுத்துறைகளில் மரக்கம்புகளை நட்டுவைப்பர். இத்தகைய மரக்கம்பு ஒன்று கட்டடப் பகுதியுடன் இணைந்துநிலையில் அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், இவ்விடத்தில் படகுத்துறை அமைந்திருந்ததையும், பல்வேறு படகுகள் இங்கு வந்து சரக்குகளை ஏற்றியும் இறக்கியும் சென்றிருக்கும் என்பதையும் இதன்மூலம் அறிய முடிகிறது.
புகார் அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட படகுத்துறையின் பகுதி
மேற்கண்ட படகுத்துறையின் கட்டுமான அமைப்பைப் பார்க்கும்போது, வேகமாக வரும் நீரை தடுத்து, அதன் வேகத்தைக் குறைக்கச் செய்யும் விதத்தில் இக்கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, இங்கு வரும் படகுகள் அலைகளால் பாதிக்கப்படாமல் இருக்கவும், பொருட்களை ஏற்ற, இறக்க வசதியாகவும் இருக்கும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது. சங்க கால மக்கள், கட்டுமானத் திறமையைப் பெற்றுத் திகழ்ந்தவர்கள் என்பதை இக்கட்டடப் பகுதிகளும் அதன் கட்டுமானப் பிரிவுகளும் தெளிவுபடுத்துகின்றன.
தாலமி எனும் அயல்நாட்டார் தனது குறிப்பேட்டில், இவ்வூரை ‘கபேரியஸ் எம்போரியம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். எம்போரியம் என்பது பன்னாட்டாரும் ஓரிடத்தில் குவிந்து வணிகம் செய்யும் பகுதியைக் குறிக்கும் சொல். இத்தகு சிறப்பைப் பெற்ற நகரம் கடலால் கொள்ளப்பட்டது என்ற குறிப்பு, மணிமேகலையில் “அணிநகர் தன்னை அயல்கடல் கொள்க” என்ற வரியாக நமக்குக் கிடைக்கிறது. மேலும், பௌத்தப் பள்ளிகளும், பௌத்தத் துறவிகளும், இங்கு இருந்துள்ளனர் என்பது பற்றிய செய்திகளையும் மணிமேகலை தெரிவிக்கிறது. இத்தகு சிறப்புபெற்ற நகரத்தின் உண்மை வரலாற்றை அறிதல் வேண்டி இங்கு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது*2. படகுத்துறையை அடுத்து, பல்லவனீச்சுரத்தில் மேற்கொண்ட அகழாய்வில் பல வரலாற்றுச் சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டன.
காவிரிப்பூம்பட்டினம் அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட பௌத்த விகாரத்தின் ஒரு பகுதி
அகழாய்வு
இங்கு நிலப்பரப்பிலும், ஆழ்கடலிலும், அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டது. மைய அரசுத் தொல்லியல் துறையினரால் இங்கு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. கள ஆய்வில், சதுர வடிவ நாணயம், ரோமானியர் காசுகள், மட்கலன்கள் போன்றவை கிடைத்ததன் பயனாக, இங்கு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அகழாய்வில் பௌத்தவிகாரத்தைக் கண்டறிந்து வெளிக்கொணர்ந்தது, வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று. அடுத்து, கீழையூர் பகுதியில் படகுத்துறை ஒன்று வெளிக்கொணரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வானகிரியிலும் ஒரு செங்கல் கட்டடப் பகுதியும் வெளிக்கொணரப்பட்டது. பல்லவனீச்சுரத்தில் வெளிக்கொணரப்பட்ட பௌத்தவிகாரத்தில், பௌத்த செப்புப் படிமமும், பௌத்த பாதமும் சேகரிக்கப்பட்டன. தற்போது பௌத்தவிகாரத்தில் சேகரிக்கப்பட்ட தொல் பொருட்களை அங்கேயே காட்சிக்கு வைத்துள்ளனர். இங்கு 1970-71 மற்றும் 1972-73 ஆகிய வருடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன*3.
புகாரில் அமைந்த பௌத்த பள்ளி
பொ.ஆ. முதல் இரண்டு நூற்றாண்டுகளில், சோழ நாட்டின் தலைநகராகிய உறையூரில் பிறந்து வளர்ந்த புத்ததத்தன் என்பவன், இலங்கைக்கு இருமுறை சென்று பௌத்த சமய நூல்களை நன்கு பயின்று, பின்னர் சோழ நாட்டுக்குத் திரும்பி வந்து அபிதம்மாவதாரம், விநயவிநிச்சயம் என்ற இரு நூல்களையும் பாலி மொழியில் எழுதி வெளியிட்டான். அவற்றுள், அபிதம்மாவதாரம் என்ற நூலை, அரண்மனைகளும் பூஞ்சோலைகளும், செல்வம் நிறைந்த வணிகர்களும் உள்ள காவிரிப்பூம்பட்டினத்தில் கணதாசனால் அமைக்கப்பட்டிருந்த பௌத்த பள்ளியில் தான் தங்கியிருந்தபோது, சுமதி என்ற மாணவன் கேட்டுக்கொண்டதற்கிணங்க எழுதி முடித்த செய்தியை, அந்நூலின் இறுதியில் புத்ததத்தன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இக்கூற்றுக்கும், அகழாய்வில் வெளிக்கொணர்ந்த பௌத்த விகாரத்தையும் ஒப்பிடுகையில், காவிரிப்பூம்பட்டினம் பொ.ஆ. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் பெற்றிருந்த செல்வச்செழிப்பும், கல்விவளமும், பௌத்தத் துறவிகள் ஆற்றிய பணிகளும், பௌத்த பள்ளி இருந்ததும் நிரூபணம் ஆகின்றன. அங்கு கிடைத்த தொல்பொருட்களும் இக்கருத்துக்கு வலுவூட்டுகின்றன என்பதில் ஐயமில்லை. பௌத்த சிற்பங்களும், சுடுமண் பாவைகளும், சுடுமண் பொருட்களும் குறிப்பிடத்தகுந்த தொல்பொருட்களாகும்.
பௌத்த சிற்பம்
சுடுமண் பொம்மை
பளிங்குக்கல் பௌத்த பாதம் - காவிரிப்பூம்பட்டினம் அகழாய்வு
தொடர்ந்து, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, இங்கு அகழாய்வுப் பணியைத் துவக்கியது. அந்த ஆய்வில், மேலையூரில் வாய்க்காலையொட்டி ஒரு படகுத்துறை வெளிக்கொணரப்பட்டது. இங்கு காணப்பட்ட செங்கற்களின் அளவு 60 செ.மீ. x 60 செ.மீ. என நீள அகலமும், தடிமன் 9 செ.மீ. என்ற அளவிலும் இருந்தது. செங்கற்கள் நன்கு தூய்மை செய்த களிமண்ணைக் கொண்டு செய்யப்பட்டுள்ளன. இவை, சங்க காலத்தைச் சார்ந்தவை என்பதில் ஐயமில்லை. இத்துறை, படகு கட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இங்கு, நடப்பட்ட மரக்கம்பு ஒன்றும் ஆய்வில் வெளிக்கொணரப்பட்டது*4.
தொல்பொருட்களாக அரிய கல்மணிகள், சோழர் கால நாணயங்கள், உரோமானியர் மட்கலன்கள், உரோமானியப் பேரரசர் சீசரின் செப்பு நாணயம், சுடுமண் பொருட்கள், எழுத்துப் பதிப்பு கொண்ட போர்ஸலைன் மட்கலன் ஓடு போன்றவை சேகரிக்கப்பட்டன.
அகழாய்வில் கிடைத்த சோழர் காலக் காசுகள்; சுடுமண் பாவைகள் - புகார்
ஆழ்கடல் அகழாய்வு
கடல் கொண்ட பூம்புகார் நகர் குறித்து தனிக்கவனம் செலுத்தும்வகையில், முதன்முறையாக ஆழ்கடல் ஆய்வில் தமிழ்நாடு அரசு இறங்கியது.
தேசிய கடலாய்வு நிறுவனத்துடன் இணைந்து, முனைவர் எஸ்.ஆர். ராவ் அவர்கள் தலைமையில் இப்பணி தொடங்கியது. இதன் விளைவாக, கடல் கொண்ட பண்டைய பூம்புகார் நகரின் ஒரு பகுதியைக் கண்டறிந்து, அதன் கீர்த்திமிகு வரலாறு உலகுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
இவ்வகழ்வாய்வின் மூலம், இன்றைய பூம்புகாரில் இருந்து வடகிழக்கே சுமார் 5 கி.மீ. தொலைவில், 67 அடி ஆழத்தில் 45 மீட்டர் நீளத்தில், 7 மீட்டர் தடிப்பில் ஒரு கட்டடப் பகுதியைக் கண்டறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது*5. இது ஒரு கோயிலின் மதில் சுவராகவோ அல்லது பௌத்த விகாரமாகவோ இருக்கலாம் என்று எஸ்.ஆர். ராவ் குறிப்பிட்டார்.
இக்கட்டடப் பகுதியில், சுவரின் தோற்றத்தில் காணப்பட்ட இடத்தை நன்கு சுத்தம் செய்தபோது, அதன் தடிப்பு 5 மீட்டராகக் குறைந்தது. இதில் 7 வரிசை கற்கள் மட்டுமே சுத்தம் செய்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கட்டடம் கட்டப் பயன்படுத்தப்பட்ட கற்கள், செம்புராங் கற்கள் (Laterite) வகையைச் சார்ந்ததாகும். இவ்வகழ்வாய்வால், கடல் கொண்ட பூம்புகார் நகரம் கடலுக்குள் உள்ளது என்பதுடன், இலக்கியங்கள் தெரிவித்த கருத்துகள் உண்மை என்றும், பண்டைய பூம்புகார் ஒரு பெரிய வணிக நகரமா என்பது போன்ற பல கேள்விகளுக்குப் பதிலும் கிடைத்தது.
அடுத்து, வானகிரிக்கு அருகே சுமார் 4 கி.மீ. தொலைவில் ஒரு கப்பல் சிதைந்த நிலையில் இருப்பதையும் ஆய்வில் வெளிக்கொணரப்பட்டது*6. இச்சிதைந்த கப்பல், அயல்நாட்டில் இருந்து ஈயக் கட்டிகளை ஏற்றி வந்த ஒரு போர்க்கப்பல். இந்த மூழ்கிய கப்பலில் இருந்து ஈயக் கட்டிகள், பீரங்கி, ஈய குண்டுகள், பெரிய அளவிலான சுமார் 30 ஈய பார் (Lead ingot) ஆகியவை சேகரிக்கப்பட்டன. இவற்றுடன், வெடி மருந்துப் பெட்டி ஒன்றும் சேகரிக்கப்பட்டது. ஈய கட்டியில், டபிள்யு பிளாக்கெட் (W. BLACKETT) என்ற அச்சும், அதனை அடுத்து ஒரு கிரீடமும் காட்டப்பட்டுள்ளது. இவை வெளிநாட்டுக் குறியீடுகளாக இருக்கலாம் என்றும், வெடிபொருட்கள் தயாரிக்கக் கொண்டுவரப்பட்டவை என்றும் தோன்றுகிறது. இத்துறைமுகம், பொ.ஆ. 17 – 18-ம் நூற்றாண்டு வரை செயல்பட்டிருக்கலாம்*7.
ஆழ்கடல் அகழாய்வு, ’புதையுண்ட தமிழகம்’ தொடரின் ஆசிரியரின் தலைமையில், பூம்புகார் நகரில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையும் இந்தியக் கடலாய்வு நிறுவனமும் (National Institute of Oceanography) இணைந்து, 1994-95 மற்றும் 1997-98 ஆகிய ஆண்டுகளில் நடத்தியது. இவர், இங்கு நடைபெற்ற ஆழ்கடல் அகழாய்வில் முழுமையாகக் கலந்துகொண்டு கடல் மூழ்குநராகவும், அகழ்வாய்வாளராகவும் பணியாற்றிப் பல வரலாற்று உண்மைகளைக் கண்டறிந்துள்ளார். அது பற்றிய முழு விவரங்களையும் அடுத்து வரும் வாரங்களில் காண்போம்.
(தொடரும்)
சான்றெண் விளக்கம்
|
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.