வரலாற்றுக் காலம் - 8. போளுவாம்பட்டியும், குடிக்காடும்

அகழாய்வுக்குழியின் 2 மீட்டர் ஆழத்தில் இந்த சுடுமண் முத்திரை கிடைத்துள்ளது. இம்முத்திரையில் வில் அம்பு, கயல் ஆகிய உருவங்களுடன், “வர்மனக” என்ற தமிழி எழுத்துப் பொறிப்பும் காணப்படுகிறது. இம்முத்திரையில் ச

போளுவாம்பட்டி

அமைவிடம்

கோயம்புத்தூரில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில், காவிரியின் கிளை நதியான நொய்யல் ஆற்றங்கரையில் இந்தப் போளுவாம்பட்டி கிராமம் உள்ளது. போளுவாம்பட்டி அருகில் முட்டம் என்ற ஊரும்  உள்ளது. முட்டம் நகரும், அமரபுஜங்க சதுர்வேதிமங்கலம் என்ற ஊரும் கல்வெட்டில் காணப்படுகின்ற பெயர்களாகும். போளுவாம்பட்டி கிராமத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கோட்டைக்காடு என்ற மண்மேடு காணப்படுகிறது. தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, இப்பகுதியை அகழாய்வு செய்ய தெரிவு செய்தது.     .

அகழ்வுக் குழிகள் அமைக்கக் காரணம்

தமிழகத்தில் மேற்கொண்ட கள ஆய்வுகளிலேயே அதிக அளவில் சுடுமண் பாவைகள் கிடைத்த இடம் இதுதான். இவற்றுடன், மேற்பரப்பு ஆய்வில் அரிய கல்மணிகள் சேகரிக்கப்பட்டன. இவற்றின் வெளிப்பாடாக, இவ்வூர் ஒரு தொழிற்கூடமாகவும், வாணிபத் தலமாகவும் இருக்கலாம் என்று எழுந்த ஐயப்பாட்டினை தெளிவாக்க இங்கு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

அகழ்வுக்குழிகளும் தொல்பொருட்களும்

இங்கு மூன்று அகழ்வுக்குழிகள் தோண்டப்பட்டன. குழிகள், 2.60 மீட்டர் ஆழம்வரை தோண்டப்பட்டன. இவற்றில் ஐந்து மண் அடுக்குகள் தென்பட்டன. இங்கு பல்வேறு தொல்பொருட்களுடன் ஏராளமான பானை ஓடுகளும் கிடைத்தன*1. மேலும், எழுத்து பொறித்த மட்கலன்கள், பல்வேறுவிதமான சுடுமண் உருவங்கள், சுடுமண் விளையாட்டுப் பொருட்கள், அலங்கரிக்கப்பட்ட சுடுமண் காதணிகள், சுடுமண் விளக்குகள், கல்மணிகள் என வரலாற்றுக்குச் சிறப்பு சர்க்கும் வகையிலான ஏராளமான தொல்பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. அத்துடன், தலையலங்காரம் செய்யப்பட்ட சுடுமண் உருவங்களும் (தலைப் பகுதி மட்டும்) கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தலையலங்காரம் செய்யப்பட்ட சுடுமண் பாவையின் தலைப்பகுதி மட்டும்

தொல்பொருட்கள்

இங்கு கிடைத்தவற்றில் சுடுமண் காதணிகள், இரும்புப் பொருட்கள், அரிய கல்மணி வகைகள், சுடுமண்ணால் ஆன முத்திரை ஆகியவை சிறப்பானவை. மேலும், இங்கு கிடைத்த சுடுமண் குடுவை, ஊது உலை போன்ற தொல்பொருட்களும் குறிப்பிடத்தக்கவை. 200-க்கும் மேற்பட்ட கல்மணிகள்  கிடைத்துள்ளன.

சுடுமண் பாவைகள் பெரும்பாலும் உடைந்த நிலையிலே சேகரிக்கப்பட்டுள்ளதால், அவை உடைக்கப்பட்டவையா அல்லது இயற்கையாகவே உடைந்துபோனவையா என்பதில் ஐயம் உள்ளது. ஏனெனில், இங்கு கிடைத்த பெரும்பான்மையான சுடுமண் பாவைகள், தலைப்பகுதி துண்டிக்கப்பட்ட நிலையிலேயே கிடைத்துள்ளதால், ஒரு மரபு தழுவிய சடங்கு முறை இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இக்கருத்தைக் கொண்டே, சடங்குகளின் அடியொற்றிய பண்பாட்டைச் சார்ந்தவையாக இந்த உருவங்கள் இருக்கலாம் என்ற கருத்தும் ஒரு சாரரால் முன்வைக்கப்பட்டுள்ளது.

சதுரங்க (செஸ்) காய்களைப்போன்று யானை, குதிரை, போர் வீரன், அரசன், அரசி போன்ற விளையாட்டுக் காய்களை சுடுமண்ணால் செய்து விளையாட்டில் பயன்படுத்தியுள்ளனர். சதுரங்க ஆட்டத்தை சங்க கால மக்கள் அனைவரும் தங்களது இல்லத்திலும், பொது இடத்திலும் விளையாடியுள்ளதை இவை தெளிவுபடுத்துகின்றன. சங்க கால மக்கள், விவசாயம், வணிகம் செய்ததுடன், பொழுதுபோக்கும் வகையில் வீர விளையாட்டுகளையும், சதுரங்கம் போன்ற அறிவுப்பூர்வமான விளையாட்டையும் விளையாடியுள்ளனர் என்பதை இந்தத் தொல்பொருட்கள் எடுத்துரைக்கின்றன.

சுடுமண் காதணிகள் 

கல்மணிகள்

குடையப்பட்ட பல்வேறுவிதமான காதணிகளைப் பார்க்கும்போது, இங்கு வட்டமான வளையங்களும், தொங்குவதற்கு ஏற்ப தொங்கட்டான்களும், காது மாட்டல்களும் பழக்கத்தில் இருந்தது தெளிவாகிறது.

மேலும், பல்வேறுவிதமான கல்மணிகள், சுடுமண் மணிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, கழுத்தணிகளாகவும் அலங்காரம் செய்துகொண்டனர் என்பதையும் இங்கு கிடைத்த தொல்பொருட்கள் தெளிவுபடுத்தி நிற்கின்றன. சங்க கால வாழ்விடங்களிலெல்லாம் சங்கு வளையல்கள் ஏராளமாகக் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கேற்ப, இங்கும் அலங்கரிக்கப்பட்ட பல சங்கு வளையல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

காதணிகள்

சுடுமண் முத்திரை

சுடுமண் முத்திரை

அகழாய்வுக்குழியின் 2 மீட்டர் ஆழத்தில் இந்த சுடுமண் முத்திரை கிடைத்துள்ளது. இம்முத்திரையில் வில் அம்பு, கயல் ஆகிய உருவங்களுடன், “வர்மனக” என்ற தமிழி எழுத்துப் பொறிப்பும் காணப்படுகிறது. இம்முத்திரையில் சேர, சோழ, பாண்டியர்களின் இலச்சினைச் சின்னங்கள் ஒருசேர உள்ளது கவனிக்கத்தக்கது. இது ஒரு அரிய கண்டுபிடிப்பு. இம்முத்திரை வெளியிடப்பட்டதற்கான காரணம் அல்லது பயன்பாட்டு நோக்கத்தை அறிய கூடுதல் தரவுகள் தேவைப்படுகின்றன.

கட்டடப் பகுதியும் செங்கற்களும்

அகழாய்வில் செங்கல் சுவர்ப் பகுதி ஒன்றும் வெளிக்கொணரப்பட்டது. இங்கு காணப்படும் செங்கற்கள் அளவில் பெரியவை. இது, சங்க கால கட்டடப் பகுதியாக இருக்கலாம். இப்பகுதியில் பெரும்பாலான இடங்கள் தீக்கிரையாகி அழிந்துபோயிருக்கலாம் என்று தெரிகிறது.  இங்கு காணப்பட்ட சாம்பல்களும், கரித்துண்டுகளும் இதனை உறுதிசெய்கின்றன.

யக்ஷா தெய்வ சுடுமண் உருவங்கள்

போளுவாம்பட்டியில் பொ.ஆ. 5 மற்றும் 6-ம் நூற்றாண்டைச் சார்ந்த யக்ஷா எனும் சிறு தெய்வத்தின் சுடுமண் பொம்மைகள் பல சேகரிக்கப்பட்டுள்ளன.

சுடுமண் உருவங்கள் - யக்ஷா

பண்பாட்டுக் கால நிலைகள்

சங்க காலம் தொட்டு சோழர்கள் காலம் வரை, அதாவது பொ.ஆ. 100 முதல் பொ.ஆ. 1200 வரை இங்கு மக்கள் வாழ்க்கை முறை இருந்துள்ளது என்பதை அகழாய்வில் கிடைத்துள்ள சான்றுகளைக்கொண்டு உணரலாம்*2.

குடிக்காடு

அமைவிடம்

கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில், வங்கக் கடல் பகுதியில் அமைந்துள்ளது குடிக்காடு. இது ஒரு கடற்கரைப்பட்டணமாகும். இந்த ஊருக்கு அருகில் பரவனாறு உப்பங்கழியும், 15 கி.மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற திருப்பாதிரிப்புலியூரும் உள்ளன.

அகழாய்வு

சென்னைப்  பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையினர், 1988-89-ம் ஆண்டில், ஊரிருக்கையின் இரண்டு மண்மேட்டைத் தேர்வு செய்து அகழாய்வு மேற்கொண்டனர். சுமார் 48 சதுர மீட்டர் பரப்பளவில் ஆய்வு செய்யப்பட்டது*3.

தொல்பொருட்கள்

ஆய்வில், 47 செ.மீ. ஆழத்தில் 70 செ.மீ. அகலத்தில் ஒரு செங்கல் கட்டடம் 3 வரிசை அளவில் கண்டறியப்பட்டது. இங்கு பயன்படுத்தப்பட்ட செங்கற்களின் அளவுகள், காவிரிப்பூம்பட்டினம், உறையூர், காஞ்சிபுரம் போன்ற அகழாய்வுகளில் கிடைத்ததைப் போலவே உள்ளன. குடிக்காடு அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட செங்கற்களின் அளவுகள்  35 X 22 X 6 செ.மீ. ஆகும்.

குடிக்காடு அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட கட்டடப் பகுதி

இதன் தெற்குப் பகுதியில் தரைப் பகுதி செல்வது கண்டறியப்பட்டது. அத்துடன், இக்கட்டடம் மேல்தளத்துடன் இருந்துள்ளது என்பதற்குச் சான்றாக, ஏழு குச்சி நடுகுழிகளும் கண்டறியப்பட்டன.

ஊது உலை ஒன்றும், கல்மணிகள், சுடுமண் மணிகள், சங்கு மணிகள், கூம்பு, உருளை வடிவ பல்வேறு தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. முழுமைபெற்ற மணிகளுடன், முழுமை அடையாத, துளையிடப்படாத மணிகளும் கிடைத்துள்ளன. மேலும், கண்ணாடி மணிகளும் அதிகம் கிடைத்துள்ளன. இவற்றுடன், விலை உயர்ந்த கல்மணிகளான ஜேஸ்பர் (Jasper), சால்ஸிடோனி (Chalcedony), அகேட் (Agate), பளிங்குக்கல் (Quartze) போன்றவையும் கிடைத்துள்ளன.

சுடுமண் மனித உருவம், விளக்குப் பகுதி, காதணி

வட்டச்சில்லு, விளையாட்டுப் பொருட்கள், கல்மணிகள்

இவற்றுடன், சுடுமண் காதணிகள், விளக்குகள், பகடைக் காய்கள், தக்களி மற்றும் இரும்பினால் ஆன மணிகள், ஆணிகள், செம்பினால் ஆன காதணி மற்றும் பல தொல்பொருட்களும் வெளிக்கொணரப்பட்டன*4.

மேலும், சுடுமண்ணால் ஆன மனித உருவம் (T.C. Human Figurines), சுடுமண் காதணிகள் (T.C. Ear Ornaments), தக்களி (Spindle Whorl), விளையாட்டுப் பொருட்கள் (Gamesmen) மற்றும் எடைக்கற்கள் எனக் கருதப்படும் வட்டச்சில்லுகளும் (Hopscotches) இங்கு கிடைத்த பிற தொல்பொருட்கள் ஆகும். இத் தொல்பொருட்களின் காலம், பொ.ஆ.மு. 100 முதல் பொ.ஆ. 200 வரை என அறியமுடிகிறது.

பண்பாட்டுக் காலம்

குடிக்காடு அகழாய்வு, பொ.ஆ.மு. முதல் நூற்றாண்டு முதல் பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டு வரை, இப்பகுதியில் தொன்மையான நாகரிகம் கொண்ட மக்கள் வாழ்ந்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், இங்கு அரிய கல்மணிகள் செய்யும் தொழிற்கூடம் இருந்துள்ளதையும் இவ்வாய்வு தெளிவுபடுத்துகிறது.

மேற்கோள் சான்றுகள்

  1. சு. இராசவேலு, தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 1995.

  2. இரா. பூங்குன்றன், கோவை மாவட்டத் தொல்லியல் கையேடு, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, சென்னை.

  3. சு. இராசவேலு, மேலது.

  4. சு. இராசவேலு, மேலது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com