சிலம்பு கூறும் பூம்புகார் - ஆழ்கடல் ஆய்வு ஒரு பார்வை

கடல்கொண்ட பூம்புகாரை 'கண்டுபிடிக்க’ இரண்டு கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. ஒன்று, நிலப்பரப்பில் அகழாய்வு; இரண்டாவது, நீர்ப்பரப்பில் (கடலில்) அகழாய்வு. அகழாய்வுக்கு மேற்பரப்பு ஆய்வு மிகவும் அவசியம்.

கடல் கொண்ட நகரம் - புகார்

பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்

வீங்குநீர் வேலியுலகிற் கவன்குலத்தொரு

ஓங்கிப் பரந்தொழுகலான்..

என்று சிலப்பதிகாரமும்,

வான் பொய்ப்பினும் தான் பொய்யா

மலைத் தலைய கடற்காவிரி

புனல் பரந்து பொன் கொழிக்கும்…

என்று பட்டினப்பாலையும்

புகழ்ந்து பாராட்டும் சங்கப் பாடல்கள் குறிக்கும் புகார், தற்போது நாகை மாவட்டத்தில், மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 26 கி.மீ. தொலைவிலும், சீர்காழியிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள காவிரிப்பூம்பட்டினம் என்ற ஊர்தான்.

விழித்திரு தமிழா! உணர்ந்திடு தமிழா! நம் பழந்தமிழர் பெருமையை எடுத்துக்கூறும் புலவர்கள் பொய் உரைத்ததில்லை என்பதை தொல்லியல் அகழாய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. காவிரிபூம்பட்டினம், சங்க காலச் சோழர்களின் துறைமுகப்பட்டினமாகத் திகழ்ந்த பூமி. வங்கக் கடற்கரையில் வரலாறு படைத்த பகுதி, இன்று வெற்று பூமியாகத் திகழ்கிறது.

காவிரி. கர்நாடக மாநிலத்தில் உற்பத்தி ஆகி தமிழகத்தின் கடற்கரைப் பகுதியில் கடலோடு சங்கமிக்கிறது. அப்படி கடலோடு காவிரி சங்கமிக்கும் இடம்தான் புகார். புகாருக்குள் காவிரி ஓடி, இறுதியில் கடலில் புகும் இடமாக இருந்ததால் இது காவிரிபுகும்பட்டினம், அதுவே இன்று காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) என்று அழைக்கப்படுகிறது.

பல பெருமைகள் கொண்ட சோழர்களின் முன்னோர்கள், சங்க காலச் சோழர்கள் வாழ்ந்த புகார்ப் பகுதியில் நடந்ததென்ன என்ற உண்மையைப் பார்ப்போம்.

பட்டினப்பாலை சிறப்பித்துக் கூறும் காவிரிப்பூம்பட்டினத்தின் (பூம்புகார்) ஒரு பகுதியை கடல்கோளால் கடல்கொண்டது. தற்போது எஞ்சியுள்ள பகுதி சிறிதளவுதான் என்பது, அகழ்வாய்வுகள் மற்றும் மேற்பரப்பு ஆய்வுகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இலங்கை, பர்மா, சீனா, ரோம் போன்ற நாட்டு மக்கள் இங்கு வந்து தமிழக வணிகப் பெருமக்களுடன் பண்டமாற்றம் செய்ததை, தொல்லியல் அகழாய்வுச் சான்றுகள் வாயிலாகவும், சங்க இலக்கியங்களின் வழியாகவும் நாம் நன்கு அறியமுடிகிறது. தமிழகக் கடற்கரை துறைமுகப்பட்டினங்களில் புகாருக்குத்தான் தென்கிழக்கு ஆசிய நாட்டு மக்கள் அதிக அளவில் வந்து சென்றுள்ளனர் என்பதையும், இப் பகுதியில் பெரும் வணிகத்தலங்கள் இருந்ததையும் தொல்லியல் அகழாய்வுச் சான்றுகள்தான் நிரூபிக்கின்றன.

பொ.ஆ.மு. 2-ம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 5-ம் நூற்றாண்டு வரை, தமிழகக் துறைமுகப் பகுதிகள் மிகவும் செல்வச்செழிப்புடன் இருந்துள்ளன. முசிறி, தொண்டி, காவிரிப்பூம்பட்டினம், வசவசமுத்திரம், பெரியபட்டினம், அழகன்குளம், கொற்கை, மரக்காணம், தேவிபட்டினம், நாகை போன்ற துறைமுகங்களை அதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் இருந்து கிடைத்த தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இந்தக் கூற்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வந்தவர்கள், இங்கேயே தங்கி தங்களது கலைத்திறமையையும், தொழில்வளத்தையும், வணிகவளத்தையும் உயர்த்தியதை அரிக்கமேடு, அழகன்குளம். காவிரிப்பூம்பட்டினம் போன்ற இடங்களில் காணலாம்.

சங்க இலக்கியங்களில், புகார், காவேரிபட்டினம், காகண்டி, சம்பாபதி, சோழப்பட்டினம், கபேரிஸ் எம்போரியம் என்று பல்வேறு பெயர்களில் காவிரிப்பூம்பட்டினம் அழைக்கப்பட்டுள்ளது. இவ்வூர், மருவூர்பாக்கம், பட்டினப்பாக்கம், அல்லங்காடி மற்றும் நாளங்காடி என பெரும் பிரிவுகளையும் தன்னகத்தே கொண்டு திகழ்ந்துள்ளது.

பெரும் பிரிவுகளுடன் பல பூஞ்சோலைகளும், மன்றங்களும் இங்கு இருந்துள்ளன. இலவந்திச்சோலை, உய்யா வனம், கவேரா வனம், சம்பாபதி வனம், உவ வனம், வெள்ளிடை மன்றம், இளஞ்சி மன்றம், பாவை மன்றம், நெடுங்கல் மன்றம் மற்றும் தோரணவாயில் முத்துப்பந்தல் போன்ற பல பகுதிகள் கொண்ட ஒரு பெரிய நகரமாகத் திகழ்ந்த இவ்வூர், கடல்கொண்டதால் இப்போது சிறு கிராமமாகத் திகழ்கிறது.

கடல்கொண்ட பூம்புகாரை 'கண்டுபிடிக்க’ இரண்டு கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. ஒன்று, நிலப்பரப்பில் அகழாய்வு; இரண்டாவது, நீர்ப்பரப்பில் (கடலில்) அகழாய்வு. அகழாய்வுக்கு மேற்பரப்பு ஆய்வு மிகவும் அவசியம். அதன்படி, காவிரிப்பூம்பட்டினத்தை மையமாகக்கொண்ட மணிக்கிராமம், வானகிரி, சாய்காடு, கழுதைக்காரன் துறை, நெய்தவாசல், புதுப்பட்டினம், வெள்ளையன் இருப்பு, திருமுல்லைவாயில் ஆகிய பகுதிகளில் மத்தியத் தொல்லியல் துறை மேற்பரப்பு ஆய்வு செய்தது.

அதைத் தொடர்ந்து, முனைவர் கே.வி ராமன் மற்றும் முனைவர் எஸ்.ஆர். ராவ் இருவரும் இணைந்து பல்லவனீஸ்வரம் என்ற பகுதியில் முதன்முதலில் அகழாய்வு செய்தனர். அகழாய்வில், பௌத்த விகாரம் மற்றும் பௌத்த பாதம் வெளிக்கொணரப்பட்டது. கீழையூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில், படகுத் துறைமுகம் தென்பட்டது. பண்டைய புகார் துறைமுகப்பட்டினத்தை நமக்கு நினைவூட்டும் வகையில் கிடைத்த முதல் மற்றும் முக்கியமானச் சான்றுகள் இவை. மேற்குறித்த தொல்லியல் தடயங்களால், பூம்புகார் எனும் சங்க கால நகரம், கடல்கொள்ளப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது.

1981-ம் ஆண்டு, முனைவர் எஸ்ஆர். ராவ் மற்றும் முனைவர் இரா. நாகசாமி ஆகியோர் தலைமையில், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையும் கோவாவில் உள்ள மைய அரசின் நிறுவனமான தேசியக் கடலாய்வு நிறுவனமும் (National Institute of Oceanography) இணைந்து, பல நுண்ணிய கருவிகளைக் கொண்டு கடல் மேற்பரப்பு ஆய்வு நடத்தப்பட்டது.

ஆழ்கடல் அகழாய்வில் மேற்பரப்பு ஆய்வின் பங்கு

மேற்பரப்பு ஆய்வில் Side Scane Sonar, Side Scane Sonar Fish, Sensor, Echo Sounder, Protomagnetometer and Miniranger போன்ற கருவிகளைக் கொண்டு, கடலின் மேற்பரப்பில் ஆய்வு தொடங்கப்பட்டது. இந்த ஆய்வில், Side Scane Sonar என்ற மின்னணுக் கருவி மிகவும் முக்கியமானதாகும்.

கடலில் அடையாளப் பந்து மிதக்கவிடப்பட்டுள்ள காட்சி (Marker Bouy)

ஆழ்கடல் ஆய்வு

சக்திவாய்ந்த பல நுண்ணிய கருவிகளைக் கொண்டு, வானகிரி முதல் புதுக்குப்பம் வரை கடல் மேற்பரப்பு ஆய்வு செய்யப்பட்டது. மூன்று இடங்களில், கட்டடப் பகுதிகள் போன்ற அமைப்பு இருப்பதை இவ்வாய்வுகள் மூலம் தெரியவந்தது. கட்டடப் பகுதிகளின் நீளம் 40 மீ, அகலம் 25 மீ, தடிமன் 5 மீ எனக் குறிக்கப்பட்டு, இப்பகுதிகள் மேலும் ஆய்வுக்குரியவை என தெரிவு செய்யப்பட்டன. இப் பகுதியில், கடலின் ஆழம் 24 மீட்டர் எனவும் குறிக்கப்பட்டது. அடுத்து, வானகிரி கடற்கரையிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில், 19 மீட்டர் ஆழத்தில் ஒரு கப்பலின் உடைந்த பகுதிகள் இருப்பது கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

கட்டடப் பகுதிகள்

தற்போதுள்ள கண்ணகி சிலையிலிருந்து, அதாவது கடற்கரையிலிருந்து வடகிழக்கே சுமார் 5.5 கி.மீ. தொலைவில், ஆங்கில எழுத்து U போன்ற வடிவில் அமைந்த ஒரு கட்டடப் பகுதி, சுமார் 35 மீ நீளமும், 6 மீ உயரமும், 5 மீட்டர் தடிமனும் உள்ளதாகக் கண்டறியப்பட்டது. இதனை ஒட்டியபடி மற்றொரு கட்டடப் பகுதி சுமார் 20 மீட்டர் இடைவெளியில் காணப்பட்டதும் குறிக்கப்பட்டது. இந்த இரண்டு பகுதிகளும் இணையாகச் செல்வதை உணரமுடிகிறது. இவற்றின் அமைப்பை நோக்கும்போது, இவை ஒரு நீண்ட மதில் சுவராகவோ அல்லது கோயில் சுவராகவோ இருக்கலாம் என்று கருதப்படுகிறது. முழுமையான ஆய்வே அதன் உண்மை நிலையை வெளிப்படுத்தும். இதைத் தொடர்ந்து, ஆழ்கடல் அகழாய்வுப்பணியை மேற்கொள்வது என்ற முடிவு எடுக்கப்பட்டு, அதற்குரிய பணிகள் தொடங்கப்பட்டன.

கடல் மூழ்குநரும் தொல்லியல் ஆய்வாளருமான நமது புதையுண்ட தமிழகம் ஆசியருமான ச. செல்வராஜ், 1995-ல் ஆழ்கடல் ஆய்வை முடித்து படகுக்கு வந்து, தமிழ்நாடு தொல்லியல் துறை இயக்குநர் திரு நடன. காசிநாதன் அவர்களுடன் ஆய்வுப்பணி குறித்துக் கூறுகிறார்.

மூழ்குநர் உடையில் ஆயத்த நிலையில் புதையுண்ட தமிழகம் ஆசிரியர். ச. செல்வராஜ்

ஆழ்கடல் அகழாய்வு

ஆழ்கடல் அகழாய்வு என்பது நில அகழாய்வுபோல் எளிதானது அல்ல. அதற்குத் தனிப்பயிற்சி தேவைப்படுகிறது. மேலும், நீர் அகழாய்வுப் பணிக்கு ஆய்வு நேரம் குறைவு. ஆனால், அப்பணிக்கு ஆயத்தமாவதற்கும் பிற பணிகளுக்கும் நிறைய நேரம் செலவிடப்படும். அதிகபட்சமாக, ஒரு மூழ்குநர் நீருக்கடியில் 30 நிமிடங்கள் மட்டுமே தங்கி ஆய்வுப்பணியை மேற்கொள்ள முடியும். எனவே, அனைத்து ஏற்பாடுகளையும் முன்னதாகவே முடித்து சரிபார்த்து, எல்லாம் தயார் என்ற நிலையில்தான் கடலுக்கடியில் ஆய்வுக்குச் செல்லமுடியும்.

நில அகழாய்வு என்பது, கண்களுக்குப் புலப்படும் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வு. கடலில் ஆய்வு செய்வது என்பது, நமது உடல் – மனது – அறிவு மூன்றும் ஒருங்கிணைந்து பணியாற்றவேண்டியது அவசியம். மேலும், இயற்கையோடும், கடல் நீர் விலங்குகளோடும் போராடியபடிதான் இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், இந்த ஆய்வுக்கு பேலும் பல துறைகளின் ஒத்துழைப்பு தேவைப்படும். குறிப்பாக மீனவர்கள். இவர்கள் ஆய்வு நடைபெறும் பகுதியில் கட்டுமரத்திலோ அல்லது விசைப்படகிலோ சென்று மீன்பிடித்தல் கூடாது. எனவே, அவர்களது ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். அடுத்து, காவல் துறை, கடலோரக் காவல்படை, துறைமுகம், மீன்வளத் துறை போன்ற துறைகளுடன், குறிப்பிட்ட ஊரின் பஞ்சாயத்துத் தலைவர், மீனவ சமூகத் தலைவர் ஆகியோரின் ஒத்துழைப்பும் தேவைப்படும்.

காற்றின் அழுத்தம், கடலின் கொந்தளிப்புத் தன்மை (Water Current) ஆகியவை தினமும் கண்காணிக்கப்பட வேண்டும். இதைக் கண்காணிக்க கடலலைப் பட்டியல் (Tidal Chart) தேவை. அத்துடன், ஆழ்கடல் ஆய்வுக்கு இரண்டு கப்பல்கள் தேவைப்படும். ஒன்று கடல் ஆய்வுக்கும், மற்றொன்று நுண்ணிய கருவிகள் மற்றும் பிற உபகரணங்களை வைத்துக்கொள்வதற்கும் பயன்படுத்தப்படும்.

இரண்டு வகை மூழ்குநர்கள்

நீருக்கடியில், இரண்டு வகைகளில் மூழ்குநர்கள் செயல்படுவார்கள். 1. Surface Supply Diving System, 2. Scuba Diving System. இதில், இரண்டாவது முறையில் மூழ்குநராகச் செயல்பட சிறந்த பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே முடியும். முதல் முறையில், கேபிள் இணைப்புடன் செயல்படும் மூழ்குநர், கேபிள் எந்த அளவு நீளம் உள்ளதோ அந்த அளவுக்குத்தான் ஆய்வு தூரத்தை வரையறுத்துக்கொள்ள முடியும். ஆனால் இரண்டாவது முறையில், மூழ்குநர் தனது விருப்பத்துக்கு ஏற்ப எங்கு வேண்டுமானாலும் ஆய்வை மேற்கொள்ள முடியும். சிலிண்டரில் உள்ள ஆக்ஸிஜன் அளவை மட்டுமே அவ்வப்போது சரிபார்த்துக்கொண்டால் போதும்.

Scuba Diving System

ஆழ்கடலில் கட்டடப் பகுதியும் அகழாய்வும்

ஆழ்கடலில் 69 அடி ஆழத்தில், அதாவது 24 மீட்டர் ஆழத்தில் ஒரு  நீண்ட கட்டடப் பகுதி இருப்பதை முன்னரே குறிப்பிட்டோம். அந்தக் கட்டடப் பகுதியில் ஒரு அகழ்வுக்குழி அமைக்கப்பட்டு ஆய்வு தொடங்கியது. ஆய்வுப் பகுதியில் அதிக அளவில் மண் மற்றும் தூசுகள் படிந்து (Sediments and Debries) காணப்படுவதால், அவற்றை நன்கு சுத்தம் செய்த பிறகு, மூன்று முதல் நான்கு வரிசைகள் நன்கு தெளிவாக உணரப்பட்டன. இவை மனிதனால் கட்டப்பட்டவை (Manmade Structure) என்பதும் உறுதி செய்யப்பட்டது. கட்டடப் பகுதியிலிருந்து ஆய்வுக்காக ஒரு கல் மேலே கொண்டுவரப்பட்டது. இது, செம்புராங்கல் (Latrite Stone) வகையைச் சார்ந்தது.

கட்டடப் பகுதி – செம்புராங்கற்கள்

Marking trenches in under seabed

தஞ்சை, திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களின் மதில் சுவர்கள், பண்டைக் காலங்களில் செம்புராங்கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளதை களஆய்வின் மூலம் உணரமுடிந்தது. எனவே, இங்கு காணப்படுவதும் பழைய கட்டடத்தின் கற்களே என்றும், அதனுடன் கிடைத்த (Associate Findings) பிற தொல்பொருட்களான சங்க கால மட்கலன்களும் அதனை உறுதி செய்கின்றன. ஆக, கடலுக்கடியில் கட்டடப் பகுதிகள் காணப்படுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இவ்வாய்வு முழவதும், நிழற்படங்களாகவும், வீடியோக்களாகவும் முறையாகப் பதிவு செய்யப்பட்டன.

கப்பலின் சிதைந்த பகுதி

அடுத்து, வானகிரிப் பகுதியில் குறிக்கப்பட்ட சிதைந்த கப்பல் காணப்படும் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், கப்பல் ஒன்று இயற்கையாகவோ அல்லது எரிபொருள் தட்டுப்பாட்டினாலோ அல்லது எதிரிகளாலோ சிதைக்கப்பட்ட கப்பலின் பகுதி ஆங்காங்கே சிதறிக் கிடப்பதைக் கண்டறிந்து ஆய்வுசெய்தபோது, கப்பலின் பல பகுதிகளும், கப்பலில் இருந்த சில முக்கியமான பொருட்களும் கிடைத்தன.

பீரங்கியின் சிதைந்த பகுதி

மேலும், கப்பலின் உடைந்த மரப்பகுதிகள் மற்றும் Lead Ingots, Gun Powder Box போன்றவையும் கண்டறியப்பட்டன. இவை ஒவ்வொன்றும் 60 கிலோ எடை உள்ளவை. இவற்றின் அளவுகள் 90 x 12.5 செ.மீ. என்று பதிவு செய்யப்பட்டது.

Gun Powder Box – பூம்புகார் ஆழ்கடல் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட வெடிமருந்துப் பெட்டி. கடலில் சிதைந்து கிடக்கும் காட்சி

ஈயக்கட்டிகளின் தொகுப்பு - சரிந்து கிடக்கும் நிலை (Cluster of Lead Ingots on the seabed

நீள்செவ்வகம், அரைவட்ட வடிவ தலைப்பகுதியுடன் கொண்ட உருளை என பல வடிவங்களில் ஈயக்கட்டிகள் கிடைத்தள்ளன. இவற்றில் எழுத்துகள் பொறித்தவையும், கிரீடம் முத்திரை பதித்த ஒன்றும், இதயம் முத்திரை பதித்த ஒன்றும் காணமுடிந்தது. மொத்தமாக 30-க்கும் மேற்பட்ட ஈயக்கட்டி பார்கள் சேகரிக்கப்பட்டன. இவற்றில் W B 1792 என்றும் W:BLACKETT 1792 என்றும் எழுத்துப் பொறித்த ஈயக்கட்டி பார்களும் கிடைத்துள்ளன. இவை அனைத்தும், உடைந்த கப்பலில் இருந்து சிதறி விழுந்து, ஒரு தொகுப்பாக செருகி வைத்ததுபோல் கடலில் காணப்பட்டன.

ஆழ்கடலில் காணப்பட்ட ஈயக்கட்டிகள் - பூம்புகார்

கடலில் இருந்து எடுத்து வரப்பட்டு, நன்கு சுத்தம் செய்து, பூம்புகார் ஆழ்கடல் அகழாய்வு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஈயக்கட்டிகள்

ஆய்வு விவரங்கள் அனைத்தும், வரைபடம் வாயிலாக வரையப்பட்டன. பிறகு, ஆய்வில் சேகரிக்கப்பட்ட தொல்பொருட்களை கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. இங்கு சிதைந்து காணப்படும் கப்பல், தரங்கம்பாடிக்கு வந்த கப்பலாக இருக்க வேண்டும். டேனிஷ் அரசின் போர்க்கப்பலாகவும் அது இருக்கலாம். ஏனெனில், இந்த அளவுக்கு அதிகமாக ஈயக்கட்டிகளை, குண்டுகள் தயாரிக்கவோ அல்லது வேறு ஏதோ வெடிப்பொருட்களைத் தயாரிக்கவோதான் அவற்றை இறக்குமதி செய்திருக்க வேண்டும். இது ஒரு போர்க்கப்பல் என்பதும், அது பதினெட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதும் சான்றுகள் வாயிலாக தெள்ளத் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.

நில அகழாய்வுகள்

ஆழ்கடல் அகழாய்வுக்கு முதலில் உறுதுணையாக இருப்பது நில அகழாய்வுகளே. இதையடுத்து, தமிழ்நாடு அரசும், மைய அரசும், பூம்புகார் பகுதியில் மேற்கொண்ட நில அகழாவுகள் குறித்துப் பார்ப்போம்.

நில அகழாய்வில், கடற்கரையை ஒட்டிய பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போதுள்ள சுற்றுலா விருந்தினர் மாளிகைக்கு அருகில் ஒரு ஆய்வுக்குழி அமைக்கப்பட்டது. அதில், 10 தளவரிசை அமைப்பில்,  ஒரு செங்கல் கட்டடப் பகுதி வெளிப்படுத்தப்பட்டது. இது, 3.25 மீ உயரம், 1.20 மீ அகலம் கொண்டதாக இருந்தது. பயன்படுத்தப்பட்டிருந்த செங்கற்களின் அளவுகள் 24 x 12 x 6 என்ற முறையில் குறிக்கப்பட்டது.

அடுத்து, மேலையூர் என்ற பகுதியில் மேற்கொண்ட அகழாய்வில், படகுத்துறையும், அதில் கட்டப்பட்ட மரக்கழியும் வெளிப்படுத்தப்பட்டன. இங்கு காணப்பட்ட செங்கற்கள் அளவில் மிகவும் பெரியவையாகவும், தூய களிமண்ணால் செய்யப்பட்டவையாகவும் இருக்கின்றன. செங்கற்கள், 60 X 60 X 15 செ.மீ. என்ற அளவிலும் 60 X 60 X 12 செ.மீ என்ற அளவுகளிர் இருந்தன. இவை, சங்க காலத்துக் கட்டுமானத்தைச் சார்ந்தது என்பதும், கண்டறியப்பட்டது சங்க கால படகுத்துறை என்பதும் தெள்ளத்தெளிவாக அறியமுடிந்தது.

மேலையூர் அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட படகுத்துறைப் பகுதி.

இந்த ஆய்வுகளும், ஆய்வுகளில் சேகரிக்கப்பட்ட மற்றும் வெளிப்படுத்தப்பட்ட அனைத்தும், காவிரிபூம்பட்டினத்தையும், சங்க காலத்தையும், சங்க காலச் சோழர்களின் துறைமுகப்பட்டினத்தையும் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துவதாக இருக்கின்றன. இப்பகுதிக் கடலில் இருந்து மீனவர்களால் எடுத்துவரப்பட்ட பௌத்தச் சிற்பமும் குறிப்பிடத்தக்க ஒன்று. இச்சிற்பமும் காலத்தால் பொ.ஆ.மு. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது என ஆய்வாளர்களால் குறிக்கப்பட்டுள்ளது. மேலும், நாகை மாவட்டம் முழுவதும் பௌத்தச் சிற்பங்கள் ஆங்காங்கே பரவலாகக் காணப்படுவதால், இப்பகுதியில் பௌத்தப் பள்ளிகள் இருந்துள்ளன என்பதும், கல்வெட்டுச் சான்றுகள் உள்ளதால் அதை இன்னும் உறுதிப்படுத்திக்கொள்ள முடிகிறது.

மீனவர்களிடம் இருந்து, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையின் அலுவலர் மறைந்த திரு. க. நெடுஞ்செழியன் அவர்கள் மீட்டுவந்த பௌத்தச் சிற்பம்

இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை அகழாய்வு

மைய அரசு சார்மில், K.V. ராமன் மற்றும் S.R. ராவ் தலைமையில்  மேற்கொண்ட அகழாய்வில், பல்லவனீஸ்வரத்தில் பௌத்த விகாரமும், கீழையூர் அகழாய்வில் படகுத்துறையும் வெளிக்கொணரப்பட்டன. இதன்மூலம், காவிரிப்பூம்பட்டினம் கடல்கொண்டது என்பதும், தற்போது அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டது எஞ்சியுள்ள நகரத்தின் எச்சங்களே என்பதும் உறுதியாகிறது.

பௌத்த விகாரக் கட்டடப் பகுதி - காவிரிப்பூம்பட்டினம், பல்லவனீஸ்வரம்

இந்த அகழாய்வுகளின் அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு அரசும் ஆழ்கடல் அகழாய்வுப் பணியைத் தொடங்கியது. அதன்மூலம், கடல்கொண்ட பூம்புகார் நகரம் இயற்கையின் சீற்றத்தால் நீருக்குள் மூழ்கடிக்கப்பட்டது என்ற உண்மையைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் நாகரிகத்தில் சிறந்து விளங்கியது என்பதும், கடல் வாணிகத்தில் சிறப்பு பெற்றிருந்தது என்பதும் இலக்கியங்கள் உள்ளிட்ட பலவற்றாலும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இது நம் தமிழர்கள் அனைவருக்கும் பெருமைதரக்கூடியது. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி தம் தமிழ்க்குடி என்பது அவ்வப்போது வெளிப்படுத்தப்படும் தொல்லியல் சான்றுகள் நிரூபித்துக்கொண்டே வருகின்றன.

பௌத்த விகாரம் கட்டப் பகுதி - தற்போதைய நிலை

ஆர்வலர்கள் கருத்து

தமிழக கடற்கரைப் பகுதிகளில் சில குறிப்பிட்ட இடங்களைத் தெரிவுசெய்து, மீண்டும் ஆழ்கடல் அகழ்வுப்பணியைத் துவக்கி, நமது கடல்கொண்ட நகரங்களையும் அவை கூறும் நாகரிகங்களையும் தமிழ் உலகுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்பது நெடுநாள் அவா. தற்பொழுது கடல்கொண்ட புகார்ப் பகுதியை ஆய்வுசெய்து, தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ள என்பதும், அங்கு பழமையான கட்டடங்கள் உள்ளன என்பதும் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவற்றின் தெளிவான செய்திகளைக் கண்டறிய மீண்டும் இப்பணி துவங்குதல் வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாகும். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் கடல்கடந்து வாணிகம் செய்தான் என்பதும், புகார் ஒரு பரந்துபட்ட வணிக நகரமாகத் திகழ்ந்தது என்பதும், அகழாய்வுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட கீழையூர் படகுத்துறை பகுதி

தமிழக கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க வணிக நகரங்களையும். கடல்கொண்ட பகுதிகளையும் ஆழ்கடல் மற்றும் நில அகழாய்வுகள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டன. நமது பண்பாட்டை எடுத்துக்கூறும் வகையில் என்னென்ன தொல்பொருட்கள் கிடைத்துள்ளன; அவை கூறும் தகவல்கள் என்ன என்பதையும் புதையுண்ட தமிழகம் தொடரில் தொடர்ந்து காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com