அத்தியாயம் 40 - அண்மைக்கால அகழாய்வுகள் 2015 - 16 (பகுதி 1)

தமிழகத்தில் அண்மைக்காலத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பட்டறைப்பெரும்புதூர் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி ஆகியவை ஆகும்.

அண்மைக்கால அகழாய்வுகள் 2015 – 16 (பகுதி 1)

தமிழகத்தில் அண்மைக்காலத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பட்டறைப்பெரும்புதூர் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி ஆகியவை ஆகும். சிறப்புபெற்ற இவ்விரண்டு அகழாய்வுகளைக் குறிப்பிட்டால் சிறப்பாக அமையும் என்ற கருத்தின் பின்புலத்தில், அகழாய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டுவரும் புதையுண்ட தமிழகம் தொடரில் இவற்றின் செய்திகள் தொகுத்து வழங்கப்படுகின்றன.

பட்டறைப்பெரும்புதூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டறைப்பெரும்புதூர் எனும் சிறிய ஊர், சென்னையிலிருந்து சுமார் 58 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் முதன்முதலில் மக்கள் வாழ்ந்த இடம் கொற்றலை ஆற்றுப்படுகையில்தான் என்பது தொல்லியல் வல்லுநர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. இக்கொற்றலையாறு, திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி அருகே ஓடுகிறது. கொற்றலையாற்றின் வடகரையில் அமைந்த சிறப்புபெற்ற இடங்கள்தான் அத்திரம்பாக்கம் மற்றும் பரிக்குளம் போன்ற வரலாற்றுக்கு முற்பட்ட பழைய கற்கால மக்கள் வாழ்ந்த பகுதிகளாகும். இவ்விடங்களில் நடைபெற்ற அகழாய்வுகள் மூலம், இப்பகுதியில் சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் இங்கு வாழ்ந்துள்ளனர் என்பது சான்றாதாரங்களுடன் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் மேலும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பழைய கற்கால மக்களின் வாழ்விடங்கள் உள்ளன என்பதை தகுந்த தொல்லியல் தடயங்களைக் கொண்டு திரு. து. துளசிராமன் (உதவி இயக்குநர், தொல்லியல் துறை) அவர்கள் உறுதிசெய்து அதனை முறைப்படி பதிவு செய்துள்ளார்.

சென்னைத் தொழிற்பட்டறை (Madras Industry)

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில், இந்தியாவில் இரண்டு பழைய கற்கால தொழிற்பட்டறைகள் இருந்துள்ளன என்பதை தொல்லியில் ஆய்வாளர்கள் ஆங்காங்கே காணப்பட்ட கற்கால மக்கள் பயன்படுத்திய கைக்கோடாரிகளின் அமைப்பைக் கொண்டு பகுத்துள்ளனர். இக்கைக்கோடாரிகள் எந்தத் தொழிற்பட்டறையில், எந்தத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டன என அதன் தொழில்நுட்ப அடிப்படையில் பிரித்துள்ளனர். அவற்றில் ஒன்று சென்னைத் தொழிற்பட்டறை. மற்றொன்று, சோன் தொழிற்பட்டறை. கொற்றலையாற்றுப் படுகைகளில் காணப்பட்ட கைக்கோடாரிகள் சென்னைத் தொழிற்பட்டறைகளில் தயாரிக்கப்பட்டவை அல்லது சென்னைத் தொழிற்பட்டறையின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்றும், இதுபோன்ற கைக்கோடாரிகள் பெரும்பாலும் சென்னைப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. சோன் பள்ளத்தாக்கில் அமைந்தது சோன் தொழிற்பட்டறை. இங்கு தயாரிக்கப்பட்ட கைக்கோடாரிகள் இப்பகுதியில் மட்டுமே காணப்பட்டன. எனவே, சோன் ஆற்றங்கரையில் உள்ள பட்டறை சோன் தொழிற்பட்டறை என்றும், கொற்றலை ஆற்றுப் பகுதியில் அமைந்த பட்டறை சென்னைத் தொழிற்பட்டறை என்றும் அழைக்கப்பட்டன.

அத்தகைய சிறப்புபெற்ற பண்டைய சென்னைத் தொழிற்பட்டறைக்கு அருகே அமைந்ததுதான் இந்த பட்டறைப்பெரும்புதூர். இங்கு தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டு பல சிறப்புச் செய்திகளைத் தமிழகத்துக்கு வழங்கியுள்ளது. மேற்பரப்பு ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட தொல்பொருட்களின் அடிப்படையில், பட்டறைப்பெரும்புதூர் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த பகுதிதான் என்பதில் ஐயமில்லை. இருப்பினும், அகழாய்வுச் சான்றுகள் வாயிலாக அறிந்துகொள்வதே சிறப்பு. மேலும், அவ்வூரின் தொன்மையை அறியும்பொருட்டும் இப்பகுதியை அகழாய்வுக்கு தேர்ந்தெடுத்தனர்.

அகழாய்வு

நத்தமேடு, ஆனைமேடு, இருளர்தோப்பு போன்ற மூன்று மேட்டுப் பகுதிகளைத் தேர்வுசெய்து, அங்கு அகழ்வுக் குழிகள் போட்டு ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் இவ்வகழாய்வில் சேகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பிடத்தக்க தொல்பொருள் உறைகிணறு. தமிழக அகழாய்வுகளில் கிடைத்த உறைகிணறுகளில் இதுவே அதிக எண்ணிக்கையில் சுடுமண் வளையங்களைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

உறைகிணறு

சங்கு வளையல்கள்

உறைகிணறுகள், அப்பகுதியில் வாழும் மக்களின் அடிப்படையான நீர்த் தேவையை நிறைவு செய்யப் பயன்பட்டுள்ளன. தமிழகத்தில் கொற்கை, பூம்புகார், மாமல்லபுரம், மாளிகைமேடு, வசவசமுத்திரம், அரிக்கமேடு, செங்கமேடு, பல்லவமேடு, படைவீடு போன்ற இடங்களில் எல்லாம் அகழாய்வுகளில் உறைகிணறுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அகழ்ந்தெடுக்கப்பட்டவற்றுள், செங்கமேடு அகழாய்வில்தான் உறைகிணற்றுக்கு அதிக அளவில் சுமார் 16 சுடுமண் வளையங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது காணமுடிந்துள்ளது. ஆனால், பட்டறைப்பெரும்புதூர் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட உறைகிணற்றில், சுமார் 20-க்கும் மேற்பட்ட சுடுமண் வளையங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இங்கு திரளான மக்கள் வாழ்ந்திருத்தல் வேண்டும் என்பதும், இவர்கள் சங்க காலத்தைச் சார்ந்த மக்கள் என்பதும் தெள்ளத்தெளிவாக அறிந்துகொள்ள இவ்வுறைகிணறு நமக்குச் சான்றாக அமைகிறது. பட்டறைப்பெரும்புதூர் அகழாய்வு 50 ச.மீ. அளவில் மேற்கொள்ளப்பட்ட சிறிய அளவிலான ஆய்வு. இந்தச் சிறிய இடத்திலேயே இத்தனை தொல்பொருட்களும், உறைகிணறும் காணப்படுகின்றன என்றால், அதிகப் பரப்பளவில் அதிகப் பொருட்செலவில் அகழாய்வை இங்கு மேற்கொண்டால், மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்கலாம்.

தொல்பொருட்கள்

நுண் கற்கருவிகள், இருமுனை கூர்தீட்டிய அறுப்பான், சுரண்டிகள், புதிய கற்காலக் கைக்கோடாரிகள், சங்கு வளையல்கள், வட்டச் சில்லுகள், விளையாட்டுக் காய்கள், சுடுமண் மணிகள், கண்ணாடி மணிகள், மான் கொம்புகள், அம்பு முனைகள், நறுமணப் புகைக்கலன் போன்ற குறிப்பிடத்தக்க தொல்பொருட்கள் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மிகவும் இன்றியமையாத தொல்பொருளாக நறுமணப் புகைக்கலத்தை குறிப்பிடலாம்.

நுண் கற்கருவிகள்

நறுமணப் புகைக்கலம்    

நறுமணப் புகைக்கலன்

தமிழக அகழாய்வுகளில், முழுமையாக முதன்முதலில் கிடைத்துள்ள சிறப்பான தொல்பொருள் இந்த நறுமணப் புகைக்கலன். இதன்வாயிலாக, சங்க கால மக்கள் வாசனைத் திரவியங்களையும் வாசனைக் குச்சிகளையும் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாகிறது. கூம்பு வடிவில் அமைந்தள்ள இச்சுடுமண் கலம் அழகிய வடிவில் அமைக்கப்பட்ட ஒன்று. அடிப்பகுதி தட்டையாகவும் மேல்பகுதி கூர்மையாகவும், பார்ப்பதற்கு அடிப்பகுதி ஆம்போரா ஜாடியைப் போன்று காணப்படுகிறது. இதனைக் கவிழ்த்துவைத்தால், அசையாமல் நின்றுகொள்ளும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டு, அதன் உடல் பகுதிகளில் பெரிய பெரிய துளைகள் இடப்பட்டுள்ளன. மட்கலனில் துளைகள் காணப்படுவதால், இதனையும் துளையிடப்பட்ட மட்கலன் (Perforated Jar) என்ற வகையில் கொண்டு வரலாம். இதன் பயன்பாடு என்று கவனிக்கும்போது வாசனைத் திரவியங்கள் பூசப்பட்ட குச்சிகளை இத்துவாரத்தில் செருகி, அறையின் ஒரு பகுதியில் பொருத்துவர். இவை சிறிது சிறிதாக எரிந்து வாசனைப் புகையை அறை முழுவதும் பரவச் செய்யும். இப்பயன்பாட்டின் காரணமாகத்தான், இம்மட்கலனை நறும்புகைக் கலன் என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

தமிழக அகழாய்வுகளில், மாங்குடியில் ஒரு மட்கலனில் விளிம்புக்குக் கீழ்ப்பகுதியில் துளையிடப்பட்ட நிலையில் கிடைத்தது. அது உடைந்த நிலையில் சேகரிக்கப்பட்டது. இம்மட்கலனில் காணப்படும் துவாரத்தின் வழியாக நூலைக்கட்டி தொங்கவிட்டு அதில் நறுமணப் புகை தரும் பொருட்களைப் போட்டு பற்றவைத்து புகையை வரவழைப்பார்கள். இவ்வகையில், இவ்வகைக் கலன்கள் அறையை நறுமணம் கமழச் செய்ய பயன்படுத்தப்பட்ட ஒன்று. பட்டறைப்பெரும்புதூர் அகழாய்வில் நறுமணப் புகைக்கலம் முழுமையாகக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது இன்றைக்கு நாம் ஊதுபத்தி பொருத்தப் பயன்படுத்தப்படும் தாங்கி போன்றது என்றால் அது மிகையில்லை. இதுபோன்ற தனிச்சிறப்பு வாய்ந்த தொல்பொருட்கள் நகரப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. மேலும் உயர்குடியோர், பெருவணிகர்கள் மட்டுமே இந்நறுமணப் புகைக்கலனைப் பயன்படுத்துவர். இதுபோன்ற தொல்பொருள்கள் ராஜஸ்தான் மாநிலம் சம்பார், பைரட் போன்ற இடங்களிலும், பிகாரில் வைசாலி என்ற இடத்திலும் கிடைத்துள்ளன. தமிழகத்தில் பட்டறைப்பெரும்புதூர் அகழாய்வில்தான் முதன்முதலில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது சிறப்பானது.

ரோமானியர் வருகை

தமிழகத்தில் சிறப்புபெற்ற வணிகத் தலங்களுக்கும், தொழிற்பட்டறைகள் நிறைந்த பகுதிகளுக்கு தூரக் கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து அயல்நாட்டினர் வணிகம் பொருட்டு வருகை புரிந்துள்ளனர். அதன் அடிப்படையில், பட்டறைப்பெரும்புதூர் பகுதிக்கு ரோமானியர்கள் வருகை புரிந்துள்ளனர் என்பதற்கு அங்கு அகழாய்வில் கிடைத்த ரௌலட்டட் மட்கலன்கள் சான்று பகர்கின்றன.

மணிகள்

சுடுமண் மணிகள், கண்ணாடி மணிகள், கல்மணிகள் போன்றவையும், இவற்றுடன் நன்கு அலங்கரிக்கப்பட்ட கார்னீலியன் வகை மணிகளும் கிடைத்துள்ளன.

மட்கலன்கள்

தொல்லியல் அகழாய்வுக்கு காலக்கண்ணாடியாகவும், பண்பாட்டுக் கூறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டவும் பெரிதும் துணை நிற்பது, அகழாய்வில் மண்ணடுக்குகளில் சேகரிக்கப்படும் மட்கலன்களே என்றால் அது மிகையல்ல. பட்டறைப்பெரும்புதூரில் கருப்பு சிவப்பு, சிவப்பு, பளபளப்பான சிவப்பு நிற மட்கலன்கள், சாம்பல் நிற மட்கலன்கள், வண்ணம் தீட்டப்பட்ட மட்கலன்கள், குறியீடுகள் கீறப்பட்டவை, எழுத்துப் பொறித்தவை என நுண் கற்காலம் முதல் புதிய கற்காலம், பெருங் கற்காலம் மற்றும் வரலாற்றுக் காலம் வரை பயன்படுத்தப்பட்ட மட்கலன்களும் சங்க காலக் கூரை ஓடுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக புதிய கற்காலத்திலிருந்து பெருங் கற்காலம், வரலாற்றக் காலம் வரை தொடர்ச்சியாக இங்கு மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

படகு, குறியீடு பொறிக்கப்பட்ட மட்கலன் ஓடுகள்

வண்ணம் தீட்டப்பட்ட மட்கலன்கள்

கூரை ஓடுகள்

சங்க காலத்தில் கூரை வேயப் பயன்படுத்தப்பட்ட ஓடுகள், தனிப்பட்ட வகையில் வடிவமைக்கப்பட்ட ஒன்று. அதனை பள்ளம்பதித்த கூரை ஓடுகள் என்றும் குறிக்கலாம். ஏனெனில், இவ்வோட்டின் இரண்டு பக்கங்களிலும் பள்ளம் பதிக்கப்பட்டிருக்கும். எனவேதான் இவ்வோடுகளை பள்ளம்பதித்த ஓடுகள் என்றழைத்தனர். இவை கூரை வேய்வதற்கு ஏற்ப வைக்கப்பட்டுள்ள குச்சிகளில் பொருத்தி அதன்மேல் காணப்படும் இரண்டு துளைகளைப் பயன்படுத்தி கயிற்றால் கட்டிவைப்பர். இதனால் மழை, வெய்யில் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். இவ்வோடுகள், சங்க காலத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதன் பயன்பாடு காலப்போக்கில் மாற்றம்பெற்று, சோழர்கள் காலத்தில் நீள்செவ்வக வடிவில் தட்டையாகவும் மேல் பகுதியில் கொக்கி ‘ட’ போன்ற அமைப்பில் வடிமைத்துப் பயன்படுத்தத் துவங்கினர் என அறியமுடிகிறது.

காலக்கணிப்பு

அகழாய்வில், கீழிருந்து மேலாக மண்ணடுக்குகளை ஆய்வு செய்யும்போது, கீழே நுண் கற்கருவிகளும், மூலக்கற்களும் கிடைத்துள்ளன. இவை பழைய கற்காலத்தில் கடைநிலைப் பழைய கற்காலத்தைச் சார்ந்த மக்கள் பயன்படுத்தியவையே என்பதும், இந்த நுண் கற்கருவிகள் கொண்டு இவர்களது காலத்தை சுமார் 30,000 ஆண்டுகள் முற்பட்டது எனவும் தொல்லியல் ஆய்வாளர்கள் பகுத்துள்ளனர். அதன் அடிப்படையில், இப்பகுதியில் நுண் கற்காலம் முதல் மக்கள் வாழ்க்கை முறை துவங்குகிறது என்பதையே உணர்த்துகிறது.

அடுத்து, சாம்பல் நிற மட்கலன்களும், வண்ணம் தீட்டிய மட்கலன்களும், அவற்றுடன் பளபளப்பாகத் தீட்டப்பட்ட கூர்மையான கைக்கோடாரிகளும் மண்ணடுக்கில் சேகரிக்கப்பட்டுள்ளன. இத்தொல்பொருட்கள் புதிய கற்காலத்தைச் சார்ந்தவை என்பதில் சிறிதும் ஐயமில்லை. அடுத்து, இரும்புக் கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களும், குறியீடுகள் கீறப்பட்ட மட்கலன் ஓடுகள், உறை கிணறு ஆகியவையும் சங்க காலத்தின், அதாவது எழுத்து கீறப்பட்ட மட்கலன்களும், சங்கு வளையல்களும், சுடுமண் மணிகளும் பிற தொல்பொருட்களும் வரலாற்றின் துவக்க நிலைக்கு அழைத்துச் செல்கின்றன. இவ்வாறு, நுண் கற்காலம் முதல் இன்று வரை தொடர்ச்சியானதொரு வாழ்விடமாகப் பட்டறைப்பெரும்புதூர் அமைந்துள்ளது என்பதை அகழாய்வுச் சான்றுகள் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com