அத்தியாயம் 41 - அண்மைக்கால அகழாய்வுகள் 2015 – 16 (பகுதி 2)

இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை, கீழடி பள்ளிச்சந்தைத்திடல் என்ற இடத்தில் அகழாய்வு மேற்கொண்டுள்ளனர். இங்கு பல அகழ்வுக்குழிகள் போடப்பட்டு அரிய தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.

கீழடி – பள்ளிச்சந்தைத்திடல்

தமிழகத்தில் நடத்தப்பட்டுவரும் மிகப்பெரிய அளவிலான அகழாய்வு கீழடி அகழாய்வு ஆகும். இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வகழாய்வு, தமிழக வரலாற்றில் புதிய தகவல்களைப் பதிவு செய்து வருகிறது.

இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை, தமிழகத்தில் பல இடங்களில் அகழாய்வுகளை மேற்கொண்டு பல அரிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. அவற்றில், அகன்ற பரப்பளவில் மேற்கொண்ட அகழாய்வில் திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகிறது. சுமார் 9,000 தொல்பொருட்களை வழங்கிய அகழாய்வு என்ற பெருமையையும், தமிழகத்தில் பண்டைய காலத்தில் சிறந்த நாகரிக வாழ்க்கை முறை இருந்ததற்கான தடயங்களையும் வெளிப்படுத்திய அகழாய்வு இதுவாகும். அடுத்து, அகன்ற பரப்பளவில் மேற்கொண்ட பெரிய அளவிலான அகழாய்வாக, சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வைக் குறிப்பிடலாம்.

கீழடி அமைவிடம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில், வைகைக் கரையில் அமைந்துள்ளது கீழடி கிராமம். சிவகங்கையிலிருந்து 38 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 491 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

(வைகை நதி, ராமநாதபுரம் வழியாக ஆற்றங்கரை என்ற இடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது. ஆற்றங்கரைக்கு அருகில் அமைந்ததுதான் அழகன்குளம் எனும் சங்க காலப் பாண்டிய நாட்டுத் துறைமுகப்பட்டினம். இப்பகுதியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியில் துறை அகழாய்வு மேற்கொண்டு, பல அரிய தொல்பொருட்களையும், பல்வேறுவகையான அரிய மட்கலன்களையும், நாணயங்களையும், உரோமானிய மட்கலன்களையும் வெளிப்படுத்தியுள்ளது. இவ்வகழாய்வு, தமிழக வரலாற்றுக்குப் பண்டைய துறைமுகப்பட்டினத்தையும் வணிக நகரத்தையும் வெளிக்கொணர்ந்து சுட்டிக்காட்டிய அகழாய்வு என்ற பெருமையைப் பெற்றது. அதேபோல், வைகை நதிக்கரையில் அமைந்துள்ள இந்தக் கீழடி அகழாய்வும், பல அரிய தொல்பொருட்களை வழங்கிக்கொண்டு உள்ளது.

தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையினர், தமிழகத்தில் சிறப்புபெற்ற சங்க கால ஊர்கள் என 300-க்கும் மேற்பட்ட ஊர்களை, மேற்பரப்பு ஆய்வின் வாயிலாகக் கண்டறிந்து குறித்துள்ளனர். இத்துறையினர், 1976-ம் ஆண்டு கீழடிப் பகுதியை மேற்பரப்பு ஆய்வு மேற்கொண்டு அங்கு சேகரித்த தொல்பொருட்களின் அடிப்படையில், கீழடி ஒரு  சிறப்புபெற்ற வணிகத்தலம் என்பதையும், இங்கு ரோமானியர்கள் வருகை புரிந்துள்ளதையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

வரலாற்றில் கீழடி

அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் கீழடியைச் சுற்றிலும், மணலூர், குந்தகை போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன. இவற்றுள், குந்தகை என்பது குந்திதேவி சதுர்வேதிமங்கலம் என்பதைக் குறிப்பதாகும். இவ்வூர் பாண்டிய நாட்டு மன்னனின் அரசியார் பெயரால் அமைந்ததே என்பதை, இவ்வூரில் அமைந்துள்ள அர்ஜுனேஸ்வரர் கோயில் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன.

கீழடி அகழாய்வு

இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை, கீழடி பள்ளிச்சந்தைத்திடல் என்ற இடத்தில் அகழாய்வு மேற்கொண்டுள்ளனர். இங்கு பல அகழ்வுக்குழிகள் போடப்பட்டு அரிய தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இவற்றுடன், மட்கலன் ஓடுகளும், சுடுமண் பொருட்களும், குறிப்பாக கட்டடப் பகுதிகளும் அதிக அளவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பெரிய பெரிய தொட்டிகள் போன்ற மட்கலன்களும், செவ்வக வடிவத் தொட்டிகளும், கட்டடப் பகுதிகளுக்கு அருகிலே வைக்கப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றன.

தொல்பொருட்கள்

கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், சுடுமண் காதணிகள். கல்மணிகள், அகேட், கார்னீலியன், கிரிஸ்டல், பெரில் போன்ற மணிகளும் கிடைத்துள்ளன. பள்ளம்பதித்த கூறை ஓடுகள், விளையாட்டுக் காய்கள், குறிப்பாக தந்தத்தால் ஆன தாயக்கட்டை, பகடைக் காய் மற்றும் சதுரங்கக் காய் ஒன்றும், சுடுமண் அடுப்பு, சங்கு வளையல்கள், அம்பு முனைகள், தந்தத்தால் ஆன காதணிகள் எனப் பல்வேறு தொல்பொருட்களை இவ்வகழாய்வில் சேகரிக்கப்பட்டுள்ளன.

பகடைக் காய்

மகாபாரதத்தில் பயன்படுத்தப்பட்டது போன்ற பகடைக் காய். இதுவும் தாயக்கட்டையைப் போன்றதே. தமிழக அகழாய்வுகளில் இதுவரை சதுரமான பகடைக் காய்கள் கிடைத்ததில்லை. சதுரங்கக் காய்கள் பல அகழாய்வுகளில் கிடைத்துள்ளன. சதுரங்க விளையாட்டை, தமிழர்களின் பண்டைய விளையாட்டுகளில் ஒன்றாகவே குறிப்பர். தமிழர் வாழவில் இவ்விளையாட்டு தனிச் சிறப்பிடம் பெற்றது என்பதற்குச் சான்று, பெரும்பான்மையான தமிழக அகழாய்வுகளில் சுடுமண் சதுரங்கக் காய்கள் கிடைத்துவருவதைக் கூறலாம். சதுரங்க விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் காய்களுடன் குதிரை, யானை, அரசன், அரசி, போர் வீரர்கள் என, சுடுமண்ணால் செய்யப்பட்ட பல உருவங்களும் சேகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கீழடி அகழாய்விலும் இதுபோன்ற சுடுமண் சதரங்கக் காய்கள் கிடைத்துள்ளன. ஆனால், தாயம் விளாயாடுதல் என்பது பெண்கள் விளையாடும் விளையாட்டாக இருந்து பின்னர் இருபாலரும் விளையாடும் விளையாட்டாக மாறியது. அதற்குப் பயன்படுத்தப்படும் காய்தான் தாயக் கட்டை ஆகும். இதுபோன்ற தாயக் கட்டைகள் தந்தத்தாலும், எலும்பாலும் செய்தவை தமிழக அகழாய்வுகளில் பல இடங்களில் கிடைத்துள்ளன. அவற்றுள் அழகன்குளம், மாங்குடி, பேரூர், படைவீடு போன்ற பல அகழாய்வுகளில் தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், ஒருபுறம் மூன்று வட்டங்கள் போடப்பட்ட நிலையில் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் ஒரே அளவினதாகவே காணப்படுகின்றன.

கீழடி அகழாய்வில் காணப்படும் தாயக் கட்டையை பகடை உருட்டுக் காய், பகடைக் காய் என்பர். அரச குடும்பத்தினர், உயர்குடி மக்கள், பெரு வணிகர்கள் மட்டுமே விளையாடப் பயன்படுத்தப்பட்டதுதான் இந்தப் பகடைக் காய். இதன் மேல் பகுதியில் நான்கு வட்டங்களும் இன்னொரு பகுதியில் ஆறு வட்டங்களும் போடப்பட்டுள்ளதைக் காணலாம். இவை முறையே இரண்டு நான்கு ஆறு என்றும்; அடுத்த பக்கங்களில் ஒன்று, மூன்று, ஐந்து என்ற எண்களுக்காள வட்டங்கள் போடப்பட்டிருக்கும். எனவே, இது பகடைக்காய் என்பதும் பகடை உருட்டும் விளையாட்டை இப்பகுதியில் இருந்தவர்கள் விளையாடி இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். எவ்வாறாயினும், பகடைக் காய் வகையொன்று தமிழகத்தில் முதன்முதலாகக் கீழடி அகழாய்வில்தான் கிடைத்துள்ளது என்பதும், இதனை மகாபாரத இதிகாசத்துடனும் ஒப்பிட்டுச் சொல்லவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இத்தொல்பொருள், தமிழனின் தனிப்பெருமையை நிலைநிறுத்தவதாக உள்ளது. பெரும்பான்மையான பண்டைத் தமிழர்களின் வீர விளையாட்டுகளையும், அறிவு நுணுக்கமான விளையாட்டுகளையும், தந்திரமான விளையாட்டுகளையும் கண்டறிந்தவர்கள் என்பதற்குச் சான்றாக இத்தொல்பொருள் விளங்குகிறது.

பகடைக் காய்

கல்மணிகள்

இரும்புக் கருவிகள்

மட்கலன் ஓடுகள்

கருப்பு சிவப்பு, சிவப்பு, வண்ணம் தீட்டிய மட்கலன், குறியீடுகள் கீறப்பட்ட மட்கலன் ஓடுகள், எழுத்துப் பொறித்த மட்கலன் ஓடுகள் என சங்க காலத்தைச் சார்ந்த மட்கலன்கள் அனைத்தும் கிடைத்துள்ளன. மட்கலன்களில் திசன், எதிரன், ஆதன் போன்ற தமிழி எழுத்துகள் காணப்படுவதாகக் குறித்துள்ளனர். இவை அனைத்தும் சங்க காலப் பெயர்களாகும். கொடுமணல் அகழாய்விலும், அழகன்குளம் அகழாய்விலும் இப்பெயர்கள் குறித்த மட்கலன்கள் கிடைத்துள்ளன.

தமிழி எழுத்துப் பொறித்த மட்கலன்கள்

கருப்பு சிவப்புக் குடுவை  

அயல்நாட்டு மட்கலன்கள்

ரோமானிய மட்கலன்களாகிய ரௌலட்டட், அரிடைன் போன்ற மட்கலன்களும் கிடைத்துள்ளன. அரிட்டைன் மட்கலன் ஆரஞ்சு-சிவப்பு நிறத்தில் காணப்படும். மேல்பகுதி மிகவும் மென்மைத்தன்மை உடையதாக இருக்கும். இதன்பெயர்க் காரணம், இம்மட்கலன் செய்யப்பட்ட இடத்தைக்கொண்டே அழைக்கப்படுகிறது. இத்தாலி நாட்டில் அரிட்டியம் (Arretium) என்றழைக்கப்படும் இடம் தற்போது அரிஸோ (Arrezzo) என்று குறிக்கப்படும் பகுதியில்தான் அரிடைன் மட்கலன் தயாரிக்கப்படுகிறது. எனவே, இதனை அரிடைன் என்று அழைக்கின்றனர். இம்மட்கலன் டெர்ரா சிக்லெட்டா (Terra Sigletta)  என்ற வகையைச் சார்ந்தது. இம்மட்கலனை அடையாளம் காண்பதற்கு இதன் அடிப்பகுதியில் முத்திரைகள் இடப்பட்டுள்ளதைக்கொண்டு கண்டறியலாம். அழகன்குளம் அகழாய்வில் பல ஓடுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அரிடைன், வடஇந்திய பளபளப்பான கருப்பு நிற மட்கலன் (NBPW) போன்ற மட்கலன்கள் ஒரே இடத்தின் தன்மையையும், தரத்தையும் வெளிப்படுத்த உதவும் மட்கலன்களாகும்.

கட்டடப் பகுதிகள்

தமிழகத்தில் சங்க கால வாழ்விடங்களாகக் கருதப்பட்ட பல இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த அகழாய்வுகளில் சிறிய அளவிலான கட்டடப் பகுதிகள் மட்டுமே வெளிப்படுத்தப்பட்டன. சான்றாக கொற்கை, மாங்குளம் போன்ற அகழாய்வுகளைக் குறிப்பிடலாம். ஆனால், கீழடி அகழாய்வில் நீண்ட தொடர்ச்சியான கட்டடப் பகுதிகளும், கால்வாய்களும், நீர்நிலைத் தொட்டிகளும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்கள் அளவில் 36X22X5 செ.மீ., 38X21X6 செ.மீ., 34X21X5 செ.மீ. என்ற மூன்று வகையான அளவிலானவை பயன்படுத்தப்பட்டுள்ளன. செங்கற்கற்கள் பாவப்பட்டுள்ள பகுதிகளில் மூலிகைச் சாறுகளையே இணைப்புச் சாந்தாக பயன்படுத்தியுள்ளதைக் காணமுடிகிறது. மேலும், கட்டடப் பகுதிகள் தொடர்ந்து காணப்பட்டாலும் ஒரு முழுமையான அமைப்பைக் காண இயலவில்லை.

கீழடி - பள்ளிச்சந்தைத்திடல் அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட கட்டடப் பகுதிகள்

இங்கு காணும் கட்டுமான அமைப்பை ஆய்வு செய்யும்போது, கீழடி அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட கட்டடங்களின் கட்டுமான முறையும், இதற்கு முன் இந்தியப் தொல்லியல் பரப்பாய்வுத் துறை மேற்கொண்ட அரிக்கமேடு அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட கட்டடப் பகுதிகளில் காணப்படும் கட்டுமான அமைப்பும், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை கொற்கை அகழாய்வில் வெளிப்படுத்திய கட்டடப் பகுதியில் காணப்படும் கட்டுமானமும் ஒரே தொழில்நுட்பத்தைச் சார்ந்தவையாகத் தோன்றுகிறது. மேற்குறிப்பிட்டவற்றில், செங்கற்களை ஒன்றன் மீது ஒன்றாக வரிசையாக அடுக்கிவைத்துக் கட்டப்பட்டுள்ளதையே காணமுடிகிறது. இக்கட்டடப் பகுதிகளை சாயத் தொட்டிகள் என்று கருதுகின்றனர். கீழடி அகழாய்வில் காணப்படுவதும் சாயத் தொட்டியாக இருக்கலாம்.

கீழடி அகழாய்வில் காணப்படும் கட்டுமானத்தில் இணைப்புச்சாந்து மெல்லியதாகவே பூசப்பட்டுள்ளது. இக்கட்டுமானத்தில் செங்கற்கள் நேராக வைத்து அடுக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டுச் சொல்லலாம். கட்டடப் பகுதிகள் பல அகழ்வுக்குழிகளில் காணப்பட்டாலும், அவை ஒன்றின் தொடர்ச்சியா என்பதை அறிய இயலவில்லை; அதன் பயனையும் தெளிவாக உணரமுடியவில்லை. இவை குளியல் அறையாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது. முழுமையான அகழாய்வும், இடைப்பட்ட மண்தடுப்புகளை அகற்றி பின்னர் ஆய்வு மேற்கொண்டால், இதன் கட்டுமானத்தையும் பயன்பாட்டையும் அறிந்துகொள்ள இயலும். கட்டடப் பகுதிகளுக்கு அருகில் ஐந்து தொட்டிகள் காணப்படுகின்றன. இவை சாயத்தொட்டிகளாக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இதேபோல் மற்றொரு இடத்திலும் கட்டடப் பகுதிக்கு அருகே ஒரு பெரிய தொட்டியும், அதனுள்ளே ஒரு தொட்டியும் காணப்படுகிறது. சாயம் ஏற்றுவதற்கு மட்டும்தான் அதிகத் தொட்டிகள் தேவைப்படும் என்ற கருத்தின் அடிப்படையில், இவற்றை சாயத் தொட்டிகளா என்று கவனித்தல் வேண்டும். கட்டடப் பகுதிகளுக்கு அருகில் உறைகிணறுகள் அமைந்துள்ளதையும் காணமுடிகிறது. சாயத் தொழிற்பட்டறை இருந்த இடமாகவும் இதனைக் கருதலாம்.

இங்கு காணப்படும் தொட்டிகள் சாயம் நனைக்கப் பயன்படுத்தப்பட்ட தொட்டிகள்போல் காணப்படுகிறது.

கட்டடப் பகுதிகள் ஒப்பாய்வு

கொற்கை அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட கட்டடப் பகுதி, உறைகிணற்றுடன்

அரிக்கமேடு அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட கட்டடப் பகுதி, உறைகிணற்றுடன்

சுடுமண் குழாய்கள்

சங்க கால மக்கள் சுடுமண் குழாய்களை அமைத்து நீர் போக்குவரத்தை ஏற்படுத்திப் பயன்படுத்தியுள்ளனர். இதுபோன்ற சுடுமண் குழாய்கள் தமிழகத்தில் சங்க கால வாழ்விடங்கள் என்று குறிக்கப்பட்ட திருக்கோயிலூர் (விழுப்புரம் மாவட்டம்), அரூர் (தருமபுரி மாவட்டம்) உலகடம் (பவானி வட்டம், ஈரோடு மாவட்டம்) போன்ற இடங்களில் சுடுமண் குழாய்கள் கிடைத்துள்ளன. இவற்றில், உலகடம் பகுதியில் கிடைத்த சுடுமண் குழாய்களில் தமிழிலேயே எண்கள் இடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை ஒத்த நிலையில் நீண்ட சுடுமண் குழாய்களைப் பதித்து நீர் போக்குவரத்தை (வாய்க்கால்) அமைத்துள்ளதை கீழடி அகழாய்வில் வெளிப்படுத்தியுள்ளனர். இவை அனைத்தும், சங்க கால வாழ்விடம் என்பதை உறுதிப்படுத்தக்கூடிய சான்றாக அமைகின்றன. செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கால்வாய் ஒன்றும் இந்த அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட வாய்க்கால்

கட்டடப் பகுதியின் கட்டுமானத்தின் தோற்றம்

ரோமானியர் வருகை

தமிழக அகழாய்வுகளில் ரோமானியார் வருகை புரிந்துள்ள இடங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்கள் நமது கலைப்பொருட்களையும்; பாண்டி நாட்டு முத்துகளையும் பெற்றுக்கொள்ளவே வருகை புரிந்துள்ளனர் என்பதை நன்கு உணரமுடியும். மேலும், தமிழகத்தில் அகேட், கார்னீலியன், பெரில், கிரிஸ்டல் போன்ற கல்மணிகள் செய்யப்படும் தொழிற்பட்டறைகள் பல இடங்களில் இருந்துள்ளதை தமிழக அகழாய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக, கொடுமணல், பொருந்தல், அழகன்குளம் போன்ற அகழாய்வுகளைக் குறிப்பிடலாம். எனவே, கீழடி அகழாய்வில் காணப்படும் தொல்பொருட்கள் அனைத்தும் தமிழக மக்களால் தயாரிக்கப்பட்டு அயல்நாட்டினருக்கு வணிகம் செய்துள்ளனர் என்ற கருத்தே ஏற்புடையது. தமிழகத்தில் பெரும்பான்மையான வணிக நகரங்களுக்கு ரோமானியர்கள் வருகை புரிந்துள்ளனர்.

சந்தைத்திடல்

கீழடியில் காணப்படும் கட்டடப் பகுதிகள், பள்ளிச்சந்தைத் திடல் கிராமம் அருகே வெளிப்படுத்தப்பட்ட ஒன்று. இப்பகுதி சங்க காலத்தில் ஒரு பெரும் வணிக நகரமாகத் திகழ்ந்திருக்கலாம் என்பதும், அவ்விடம் பெருவணிகர்களும் சிறு வணிகர்களும் கலந்து சந்தை புரிந்த இடம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். பள்ளிச்சந்தைத் திடல் என்பதே வணிகம் செய்யும் பொதுஇடம் என்ற பொருளில் அமைந்ததுதான். சந்தை என்பது பழைய சொல். இச்சொல் காலப்போக்கில் அழிந்துவருகிறது. ஒரு பொருளைத் தயாரித்து அவற்றை சந்தைப்படுத்துதல் என்பது இன்றைக்கும் வழக்கில் உள்ள ஒன்று. எனவே, கீழடி - பள்ளிச்சந்தைத்திடல் என்பது வணிகப் பெருமன்றம் அமைந்த இடம் என்று கருதுதல் வேண்டும். இன்றைக்கு அழைக்கப்படும் வணிக வளாகம்தான் சந்தை என்பதன் நேரடிப்பொருள் ஆகும்.

திடல் என்பது திட்டு அல்லது மேடு என பொது இடத்தைக் குறிக்கும் சொல். சங்க காலப் பெருநகரங்கள், தனி ஊர்கள் போன்ற கிராமங்களில் இத்திடல் அமைப்பு உண்டு. இன்றும் பல கிராமங்களில், திடலில் மக்கள் கூடும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. பண்டைய கிராமங்களில், வாரத்தில் ஒருநாள் சந்தை கூடுவதை தமிழக மக்கள் நன்கு அறிவர். எனவே, இங்கு பல இடங்களில் இருந்து தயாரிக்கப்பட்டுவரும் பொருட்கள் அனைத்தும் ஒன்று கூடி வணிகம் செய்யும் பொதுஇடம் ஆகும். இங்கு உள்நாட்டோரும், பல அயல்நாட்டோரும் வருகைபுரிந்து வணிகம் புரிந்துள்ளதால்தான், பல அயல்நாட்டுத் தடயங்களும் கீழடி அகழாய்வில் கிடைத்து வருகின்றன. இதுபோன்ற சிறப்புமிக்க சந்தைத்திடல்ககளை பெருநகரங்களுக்கு அருகே சற்று வெளிப்புறத்தில் அமைத்துக்கொள்வர். இங்கு வரும் வணிகர்களுக்குத் தேவையான வசதிகளையும் தங்குவதற்குரிய இடங்களையும், அவர்களது பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் வசதி செய்துகொடுக்க ஊரின் ஒதுக்குப்புறமே சிறந்தது என்பது எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாகும். இதன் அடிப்படையில் அமைந்த ஒரு சிறப்புபெற்ற சங்க கால பெருவணிக நகரமே கீழடி சந்தைத்திடல் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

காலக்கணிப்பு

அகழாய்வில் காணப்படும் தொல்பொருட்களின் அடிப்படையிலும், கட்டடப் பகுதிகளையும் பிற அகழாய்வுகளோடு ஒப்புநோக்கும்போது இவையும், கொற்கை, அரிக்கமேடு போன்றவற்றின் சமகாலத்தைச் சார்ந்ததாகவே இருக்கலாம் என்று கருதத் தோன்றுகிறது. கொற்கை அகழாய்வு, தனது காலக்கணிப்பை கரிப்பகுப்பாய்வு வாயிலாக பொ.ஆ.மு. 8-ம் நூற்றாண்டு என வெளிப்படுத்தியுள்ளது. இவையும், அக்காலத்துக்கு இணையாக பொ.ஆ.மு. 7 – 8-ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றே கொள்ளலாம். பரந்த அளவில் காணப்படும் கட்டடப் பகுதிகளும் தொல்பொருட்களும் மீண்டும் தமிழகத்தில் வைகைக் கரையில் அடையாளம் காணப்பட்ட ஒரு பெரிய வணிக நகரமாகக் கொள்ளலாம். அழகன்குளம் அகழாய்வு தொல்பொருட்களை ஏராளமாகத் தந்தது என்றால், கீழடி அகழாய்வு சங்க காலச் சிறப்பை வெளிப்படுத்தும் கட்டடங்களை நமக்குத் தந்துள்ளது. ஹரப்பா, மொகஞ்சதாரோ என்று ஒப்பிடாமல், தமிழகத்தின் பெருமையை வெளிப்படுத்தும் சான்றுகளையும், தமிழகத்தில் நடைபெற்ற பிற அகழாய்வுகளுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தனிப்பெருமையை 3000 ஆண்டுகளுக்கு முன்பே தன்னிகரில்லா சிறப்பைப் பெற்று விளங்கியுள்ளது என்ற பெருமையை இவ்வகழாய்கள் கொண்டு, தக்க சான்றுகளுடன் எடுத்துக்கூறி, நமது தொன்மையான பண்பாட்டினை நிலைநாட்டலாம்

(நன்றி: The News Minute - கீழடி சில படங்கள்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com