பொங்குக பொங்கல்!

மார்கழி மாதத்தின் கடைசி நாள் தை மாதத்தின் முதல் நாள் இவ்விழாவானது கொண்டாடப்படுகிறது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

உலகெங்கும் மக்கள் பல்வேறு விதமான விழாக்களைக் கொண்டாடி மகிழ்கின்றனர். அதுவும் அறுவடைத் திருவிழாவினை பல நாடுகளில் முக்கிய விழாவாகக் கொண்டாடுகின்றனர். நம் தமிழ்நாட்டில் ஆடிப் பட்டத்தில் விதைத்து அதன் பயனை அறுவடையாகப் பெற்று உலகின் ஒளி மூலமாகத் திகழும் கதிரவனுக்கு நன்றி கூறும் வகையில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

மார்கழி மாதத்தின் கடைசி நாள் தை மாதத்தின் முதல் நாள் இந்த விழாவானது கொண்டாடப்படுகிறது. பெற்றோர்கள் திருமணம் செய்து கொடுத்த தங்கள் மகளுக்கும், சகோதரர்கள் தங்கள் சகோதரிகள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கும் சீர்கொடுப்பதில் இருந்து தொடங்குகிறது.

தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்ற புத்துணர்ச்சியும் நேர்மறை எண்ணங்களும் புதுவாழ்வு மலர்ந்தது என்ற நம்பிக்கையையும் அனைவரின் மனதில் ஏற்படுத்தும் ஒரு நல்ல விழாவாக உள்ளது.

பொங்கல் தினத்திற்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இடி மின்னல் கடவுளான இந்திரனுக்கு ஒரு சில இடங்களில் இரவு பொங்கல் வைத்து படைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. மேலும் தேவையற்ற பழையவற்றை நீக்கி புதுப்பொலிவுடன் தைத்திருநாளை எதிர்நோக்குதலும் அதே போல பழைய தேவையற்ற கசப்பான நிகழ்வுகளை அகற்றி புதிய செயலை நோக்கிய எண்ணமாக பொங்கலை புத்துணர்ச்சியுடன் எதிர்கொள்ளச் செய்வதே போகியின் சிறப்பாகும். புகையற்ற போகியைக் கொண்டாடுவது நம் கடமையாகும்.

ஞாயிறு வழிபாட்டுத் திருநாள் என்கிற பெரும் பொங்கல் விழாவானது வானத்தின் கீழே திறந்த வெளியில் கொண்டாடப்படுகிறது. பெரும் மண்பானை வைத்து பொங்கல் இடுவதால் பெரும் பொங்கல் என்றும் அழைப்பர். பொங்கலன்று புதுப்பானையில் புத்தரிசி கொண்டு பொங்கல் இட்டு புதிதாகக் கிடைக்கும் மஞ்சள் கொத்து, இஞ்சிக்கொத்து, கரும்பு, வாழை போன்ற விளைபொருட்களைக் கொண்டு வந்து வைத்து படையலிட்டு வணங்குகின்றனர். தற்காலத்தில் பானை தவிர பிற உலோக பாத்திரங்களை வைத்து அதே போல பயன்படுத்தினாலும் பொங்கல் பானைக்கு இஞ்சிக்கொத்து, மஞ்சள் கொத்து வைத்துக் கட்டி பானைக்கு சந்தனம், குங்குமம் இட்டு செய்யும் வழக்கமே தொன்மையானது ஆகும். பாலும் நீரும் ஊற்றி பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல், "பொங்கலோ பொங்கல்" என்று மக்கள் மனம் நிறைந்து மகிழ்ந்து கூவி வாழ்த்துவர்.

சூரியனுக்கு நன்றி செலுத்தும் விழா என்பதால் அதிகாலையில் எழுந்து பொங்கலிட்டு சூரியன் உதிக்கும் நேரத்தில் படைக்கும் வழக்கமும் தை மாதம் எப்போது பிறக்கிறதோ அந்த நேரத்தைக் கணித்து அதற்கேற்ப நண்பகல் பிற்பகலிலும் கூட பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளது.

தை மாதம் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் ஆகும். ஒரு நாட்டின் மக்களுக்கு இன்றியமையாத உணவை விளைவிக்கக்கூடிய வேளாண் மக்களுடைய உழவர் திருநாளாகும். பகடு கடந்த கூழ் என்று நாலடியாரும், சிறுபான்மை வணிகருக்கும் பெரும்பான்மை வேளார்க்குமுரித்தாய உழுதற்தொழில் செய்விக்குங்கால் ஏனையோர்க்குமுரித்து இது என்று பரிமேலழகர் தம் உரையில் குறிப்பிடுகிறார். அப்பேற்பட்ட வேளாண் தொழிலை செய்யக்கூடிய உழவர் திருநாளில் உழவுக்கு உறுதுணையாக நிற்கும் கால்நடைகளின் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

அன்று மாடுகளை நீராட்டி பலவிதமான மணிகள், மாலைகள் அணிவித்து கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி பொட்டிட்டு, அவைகளுக்கு பூஜை செய்து பொங்கலிட்டு படைப்பர். அன்று மாலை மாடுகளை மஞ்சுவிரட்டு என தெருவெங்கும் ஊர்வலமாக தாரை, தப்பட்டை முழக்கங்களுடன் அழைத்துச் சென்ற பின்னர்  மந்தையை அடைகின்றன. இந்த இடத்தில் மாடுகளுக்கு காட்சி தரும் வண்ணம் கண்ணபெருமான் எழுந்தருளியிருப்பார்.

அதேபோன்று தென் மாவட்டங்களில் மஞ்சுவிரட்டின்போது காளைகளின் கொம்புகளில் பணமுடிப்பு பட்டு வேட்டி ஆகியவை கட்டப்பட்டிருக்கும். அவை திறந்தவெளியில் அவிழ்த்துவிடப்பெறும். அவற்றை இளைஞர்கள் எதிர்கொள்ளும் வீர விளையாட்டு ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டு என்ற பெயரில் வெகுசிறப்பாக நடைபெறும். குறிப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக அளவில் புகழ்பெற்றது.

அடுத்த நாள் காணும் பொங்கல் அல்லது கன்னிப் பொங்கல் ஆகும். சிறியவர்கள், பெரியவர்களிடம் ஆசி பெறுவதும் நண்பர்களுடன் பேசி சிரித்து மகிழ்ந்தும் இருப்பர். கன்னிப்பெண்கள் தங்களை நன்றாக அலங்காரம் செய்து கொண்டு பூச்சடை பின்னி கும்மி அடித்துக் கொண்டு

கும்மியடிப் பெண்ணே கும்மியடிவளை
குலுங்கக் குலுங்க கும்மியடி
கொஞ்சுத்தமிழ் குணவேழமுகத்தனைக்
கும்பிட்டுத்தொழுது கும்மியடி
நாடு செழிக்கணும் வீடு செழிக்கணும்
ஆடு மாடு கண்ணும்கூட செழிக்கணும்
காடு செழிக்கணும் கழனி செழிக்கணும்
கூடுங்குருவியுங்கூட செழிக்கணும்
பொண்ணும் செழிக்கணும் ஆணும் செழிக்கணும்
புள்ளகுட்டி சொந்தம் கூடி செழிக்கணும்
நல்ல மனமுள்ள நல்லவங்க நாளும்
உள்ளங்குளிர்ந்திட இல்லம் செழிக்கணும்

என்று பாடி தெருவெங்கும் முதல் நாள் பொங்கல் அல்லது அரிசி, வெல்லம், ஏலம், திராட்சை, முந்திரி ஆகியவற்றைத் தெரு மக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு ஆற்றங்கரை ஓரம் அல்லது கோயிலின் முன்புறமாக பொங்கல் செய்து பொங்கி வரும்போது குலவையிட்டு மகிழ்ந்து அனைவருக்கும் தந்து தாங்களும் உண்பர்.

மஞ்சள் நீர் ஊற்றும் விழாவானது பின்னர் ஆரவாரமாக நடைபெறும். முறை ஆண்கள், பெண்கள் மீது மஞ்சள் நீரை விசிறுதலும் பெண்கள், ஆண்கள் மீது மஞ்சள் நீரை ஊற்றுவதும் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெறும். அதனைத்தொடர்ந்து அன்று மாலை வீர விளையாட்டுக்களான வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல் (உறியடி) போன்ற நிகழ்ச்சிகளும் பரிசுகள் பெறுதலும் மிகவும் சிறப்பாக கிராமங்களில் கோலாகலமாக நடைபெறும்.

இந்தப் பெரிய பொங்கல் விழாவானது இல்லத்தில் உள்ளவர்களை உறவுகளை நட்புகளை ஊர் மக்களை சமூகத்தை ஒன்றிணைக்கும் விழாவாக பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் விழா என்பதில் சந்தேகமில்லை. அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

கட்டுரையாளா்: ஆசிரியர் கோ. ஜெயலெட்சுமி, தஞ்சாவூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com