நாகை மாவட்டம், திருமருகல் ஊராட்சியில் பட்டதாரி இளைஞர் ஒருவர் கோழிப் பண்ணை அமைத்து, சுயதொழிலில் சாதனை படைத்து வருகிறார்.
திருமருகல் ஊராட்சி கரையிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் பட்டதாரி இளைஞர் பட்டாபி என்கிற திரவியம். இவர், பட்டப்படிப்பை நிறைவு செய்ததும், அரசு வேலைக்காக காத்திருக்காமல், சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது 5 ஏக்கர் நிலத்தில் சொந்தமாக கே.எஸ்.கே. என்ற பெயரில் நாட்டுக் கோழிப் பண்ணை அமைத்து, கோழிகளை வளர்த்து வருகிறார். இதன் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதாகவும், பலருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார். இந்தக் கோழிப் பண்ணையில் கோழிகளுக்குத் தனி கொட்டகை அமைக்கப்பட்டு, அதில் 500-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். கோழிகளுக்குத் தேவையான தீவனங்களையும் தாவரக் கழிவுகளிலிருந்து அவரே தயாரித்து வருகிறார். நாட்டுக் கோழிகளில் பல வகை இனங்கள் உள்ளன. அதில் முதலிடம் பெறுவது தூய சிறுவிடை கோழிகளாகும். இந்த கோழிகளின் விற்பனை தமிழகம் முழுவதும் அமோகமாக உள்ளது எனத் தெரிவிக்கும் பட்டாபி, தான்நடத்திவரும் கோழிப் பண்ணையில் மேய்ச்சல் முறையில் மட்டுமே கோழிகளை வளர்த்து வருவதாகவும், கோழிகள் விடும் முட்டைகளை இன்குபேட்டர் மூலமாக குஞ்சுகள் பொறிக்கவைத்து, விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார். ஒவ்வொரு கோழியும் ஒன்று முதல் ஒன்றரை கிலோ எடை வரும்போது ரூ. 300 முதல் ரூ. 350 வரை விற்பனை செய்ய முடியும் என்கிறார்.
எம். முருகேசன், திருமருகல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.