இயற்கை விவசாயம்: பொன் விளையும் பூமி!

விவசாயம் லாபகரமான தொழில். ஆனால், விளைபொருள்களை நேரடியாகச் சந்தைப்படுத்தும் அனுபவம், வாய்ப்பு இல்லாததால் விவசாயிகள் தொடர்ந்து இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.
இயற்கை விவசாயம்: பொன் விளையும் பூமி!

விவசாயம் லாபகரமான தொழில். ஆனால், விளைபொருள்களை நேரடியாகச் சந்தைப்படுத்தும் அனுபவம், வாய்ப்பு இல்லாததால் விவசாயிகள் தொடர்ந்து இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.
 புதுச்சேரி வில்லியனூர் அருகேயுள்ள பண்டகசோழநல்லூரைச் சேர்ந்த மென்பொறியாளர் ஜெயப்பிரகாஷ் (38), இயற்கை வேளாண்மையில் மாதம் ரூ.ஒரு லட்சம் சம்பாதித்து வருகிறார்.
 விவசாயம் லாபகரமான தொழில் என்பதை இளைஞர்களிடம் விதைப்பதுதான் எனது முதல் பணியாகச் செய்து வருகிறேன் என்கிறார் ஜெயப்பிரகாஷ்.
 இவரது தந்தை பண்டகசோழகநல்லூரில் 7 ஏக்கரில் ரசாயன முறையில் விவசாயம் செய்து வந்தார். எம்.சி.ஏ. படித்துவிட்டு மென்பொருள் துறையில் பணியாற்றினாலும், விவசாயத்தில்தான் ஜெயப்பிரகாஷுக்கு ஆர்வம்.
 இயற்கை விவசாயம் மீது இருந்த ஆர்வத்தால், மாதம் ரூ.2 லட்சம் ஊதியம் கிடைத்தும் அந்தப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, நாட்டின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள சிக்கிமுக்கு சென்று, அங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட விவசாய முறைகளைக் கற்றுத் தேர்ந்தார்.
 கடந்த 2016 -ஆம் ஆண்டு முதல் பண்டகசோழகநல்லூரில் குடும்ப நிலத்தில் இயற்கை விவசாயத்தைத் தொடங்கினார்.
 இதுகுறித்து அவர் கூறியதாவது:
 ரசாயன உரத்தால் கெட்டுப்போன மண்ணை வளமாக்கி 3 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகிறேன். விவசாயம் லாபகரமான தொழில் இல்லை என்பது பொதுக் கருத்தாக உள்ளது. விவசாயிகளின் வாரிசுகளில் 5 சதவீதத்தினர்கூட விவசாயம் செய்ய முன்வருவதில்லை. இது மிகவும் லாபகரமான தொழில் என்பதை விவசாயிகளில் பலரும் அறியவில்லை.
 வேளாண் பொருள்களை விளைவிப்பதுடன் நிறுத்தி விடாமல், அவற்றை விவசாயிகளே நேரடியாகச் சந்தைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், கண்டிப்பாக இழப்பு ஏற்படும். சந்தைக்கு வரும்போது வாடிக்கையாளர்களின் நம்பகத் தன்மையைப் பெறுவது முக்கிய விஷயம்.
 எங்களது தோட்டத்தில் பப்பாளி, சுரைக்காய், புடலை, நீள பீன்ஸ், பாகற்காய், பீர்க்கங்காய் ஆகிய 6 பயிர்களை மட்டுமே பயிரிட்டு வருகிறேன். விவசாயத்தில் பண்ணை வேலைகளுக்கு ஆள்களை நியமித்திருக்கிறோம். நானும், எனது அப்பாவும் மேற்பார்வைப் பணியை மட்டுமே செய்கிறோம்.
 விளையும் காய்கறிகளை புதுச்சேரி உழவர் சந்தையில் நேரடியாக விற்பனை செய்து வருகிறேன். எங்களது தோட்டத்துக்கு வந்து காய்கறிகளை வாங்கினாலும், உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கினாலும் ஒரே விலைதான். 30 சதவீதம் லாபம் வரும் வகையில் காய்கறிகளை விற்பனை செய்து வருகிறேன். காய்கறிகளைப் பயிரிடும் விவசாயிகள் ஒரு பயிரை 33 சென்ட்களுக்கு மேல் பயிரிடக் கூடாது. ஒரு பயிருக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.ஒரு லட்சம் வருவாய் ஈட்ட முடியும்.
 தொழிலாளர்கள் முதல் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வரை உழவர் சந்தையில் எனது வாடிக்கையாளர்கள். எனது கடைக்கு வரும் எந்த வாடிக்கையாளரும் விலை கேட்பதில்லை. சொன்ன விலைக்கு காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அந்த அளவு பெறுவது அவசியம்.
 சந்தையில் சில நேரம் காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் போது விலை ஏறும். ஆனால், நான் ஒருபோதும் விலையை ஏற்றுவதில்லை. ஓராண்டு முழுவதும் ஒரே விலைதான். அந்த நேரத்தில்கூட வியாபாரிகள் வந்து மொத்தமாக கூடுதல் விலை கொடுத்து காய்கறிகளை வாங்கத் தயாராக இருப்பார்கள். ஆனால், அதுபோன்ற நேரத்தில் வியாபாரிகளுக்கு கொடுக்கமாட்டேன். எனக்கு எப்போதும் தினசரி வாடிக்கையாளர்கள்தான் முக்கியம். வாழ்க்கையில் பணம் பெரிய விஷயம் அல்ல என்பதுதான் எனது எண்ணம்.
 இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். படித்த இளைஞர்கள், புதுச்சேரியில் இருந்து ரூ.15,000 ஊதியத்துக்காக தினமும் சென்னைக்கு சென்று வருகின்றனர். ஆனால், நான் தினமும் ரூ.500 வீதம், மாதம் ரூ.15,000 ஊதியமாக வழங்கத் தயாராக இருந்தாலும் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்ய யாரும் வருவதில்லை. இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. நான் தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து உழவர் சந்தைக்கு காய்கறி விற்பனைக்கு வருவது வழக்கம். தினமும் ஒரு டன் காய்கறிகளை விற்பனை செய்து வருகிறேன். முற்பகல் 11 மணிக்கு வீடு திரும்பியதும் மீண்டும் விவசாய மேற்பார்வைப் பணியை மாலை வரை செய்துவிட்டு, இரவு 10 மணி வரை மறுநாள் விற்பனைக்காக காய்கறிகளைத் தயார் செய்வது வழக்கம்.
 அடுத்தகட்டமாக, இயற்கை விவசாயத்தில் பெரிய அளவில் திட்டம் வைத்திருக்கிறேன். அதைத் தொடங்கும்போதுதான் வெளிப்படுத்துவேன்.
 இயற்கை விவசாயம் தொடர்பாக இலவச ஆலோசனை பெற விரும்பும் இளைஞர்கள், 99620 09030 என்ற எனது செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றார் ஜெயப்பிரகாஷ்.
 - பீ.ஜெபலின் ஜான்
 படம்: கி.ரமேஷ் (எ) ஜெயராமன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com