சாதனை மகளிர் - கை கொடுக்கும் பை!

தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தவிர்க்கும் வகையில், ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டுக்கு அரசு கடந்தாண்டு முதல் தடை விதித்துள்ளது.
சாதனை மகளிர் - கை கொடுக்கும் பை!

தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தவிர்க்கும் வகையில், ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டுக்கு அரசு கடந்தாண்டு முதல் தடை விதித்துள்ளது. மொத்தம் 14 வகையான நெகிழிப் பைகள், பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமான இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், நெகிழிப் பைகள் கலாசாரத்தில் மூழ்கிய மக்களுக்கு, அதற்கு மாற்றான பொருள்களை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
 இதற்கும் தீர்வாக, அரசுத் தரப்பில் மாற்றுப் பொருள்கள் இனம் காணப்பட்டு, அவற்றைத் தயாரிக்க தேவையான உதவிகளையும் வழங்கி வருகிறது.
 அந்த வகையில், நெகிழிப் பைகளுக்கு மாற்றாக, காகிதப் பைகள், சணல் பைகள், நான்ஓவன் பைகள் என நெகிழி அல்லாத பொருள்களில் தயாரிக்கப்பட்ட பைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
 நெகிழிப் பைகளைத் தாராளமாகப் பயன்படுத்தி வந்த வியாபாரிகளும், பொது மக்களும் தற்போது இந்தப் பைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
 இதனால், நெகிழிக்கு மாற்றான பொருள்கள் தயாரிக்கும் தொழில் விறுவிறுப்படைந்துள்ளது. இந்த மாற்றுப் பொருள்கள் தயாரிப்பில், ஏராளமான தொழில்முனைவோர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நல்ல வருவாயும் கிடைக்கப் பெற்று வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தி வருகின்றனர்.
 விழுப்புரம் மாவட்டத்தில் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக இதரப் பொருள்களாலான பைகள் தயாரிக்கும் பரவலாக நடைபெற்று வருகிறது.
 நெகிழி இல்லாத பைகள் தயாரிக்கும் தொழிலில் சாதித்து வருகிறார் விழுப்புரத்தைச் சேர்ந்த எம்சிஏ பட்டதாரிப் பெண்.
 விழுப்புரம் பூந்தோட்டம் நாராயணன் நகரில் இதற்கான தொழில் கூடத்தை அவர் நடத்தி வருகிறார். இங்கு பெண்களை மட்டுமே தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்தி நெகிழியல்லாத பைகளைத் தயாரித்து வருகிறார்.
 இதுகுறித்து தேன்மொழி கூறியதாவது:
 எனது தாய் வாசுகி இந்த மையத்தைத் தொடங்கி, கடந்த 13 ஆண்டுகளாக பைகள் தயாரிக்கும் தொழிலை நடத்தி வருகிறார். எம்சிஏ முடித்த நான், எனது தாயைப் பின்பற்றி இந்தத் தொழில் கூடத்தை நடத்தி வருகிறேன். நெகிழிக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு, எங்களுக்கான வேலை அதிகரித்துள்ளது. இதற்காக, மத்திய அரசு வழங்கிய தொழில் முனைவோர் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றேன்.
 தற்போது, நெகிழி அல்லாத அனைத்து விதமான பைகளையும் தயாரித்து வழங்கி வருகிறோம். திருமணத் தாம்பூலப் பைகள், கட்டைப் பைகள், சணல் பைகள், துணிப் பைகள் ஆகியவற்றைச் செய்து கொடுக்கிறோம். திருமணத் தாம்பூலப் பைகளில் நான்-ஓவன் வகை துணி மூலம் பைகளைத் தயாரித்துக் கொடுக்கிறோம்.
 இதில் பாக்ஸ் டைப் பேக், எல் வடிவ பேக், குடை வடிவ பேக், சதுர வடிவ பேக் என வாடிக்கையாளர்கள் விரும்பும் வடிவம், அளவுகளில் பைகளைத் தயாரிக்கிறோம். இதேபோல, கட்டைப் பைகள் நான்-ஓவன் வகைப் பொருளையும், சணலையும் கொண்டு தயாரித்து ஸ்கிரீன் பிரிண்டிங் செய்து தருகிறோம்.
 துணிக் கடைகள், மளிகைக் கடைகள், விற்பனையகங்களில் இந்த வகை பைகள் அதிகளவில் வரவேற்பை பெற்றுள்ளன. இந்தப் பைகளுக்கு பயன்படுத்தும் மெல்லிய ரக பொருளை வைத்து, அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதேபோல, ஜூட் பேக் எனப்படும் சணல் பை விற்பனையும் தற்போது அதிகரித்துள்ளது.
 இதற்கு செலவினம் அதிகம் என்பதால், விலையும் சற்று கூடுதலாகவே இருக்கும். சணல் பைகளில், விதவிதமான பைகள் தயாரித்து வழங்குகிறோம். உணவுப் பை (லஞ்ச் பேக், துணிக் கடைக்கான கட்டைப் பை (ஜூட் பேக்), தண்ணீர் பாட்டிலுக்கான பைகள், மாணவர்களுக்கான பைகள் என பலவிதங்களில் இவை தயாரிக்கப்படுகின்றன.
 இது மட்டுமன்றி, கடந்த காலங்களில் பயன்படுத்திய துணிப் பைகள் மீண்டும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மொத்த விலையில் சாதாரண துணிகளை வாங்கி வந்து, அதில் வண்ணங்கள், பெயர்கள் அச்சிட்டு துணிப் பைகள் தயாரிக்கப்படுகின்றன. இவை துணிக் கடைகள், மளிகைக் கடைகள் பயன்பாட்டுக்காக வாங்கிச் செல்கின்றனர்.
 சென்னை, புதுச்சேரியிலிருந்து இதற்கான பொருள்களை வாங்கி வந்து, இங்கே ஸ்கீரின் பிரிண்டிங் செய்தும், தையலிட்டும், விதவிதமாக நேர்த்தியான வகையில் பைகளை உருவாக்கப்படுகின்றன.
 தாம்பூலப் பைகள் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும், கட்டைப் பைகள் ரூ.20 முதல் ரூ.35 வரையிலும், சணல் பைகள் ரூ.30 முதல் ரூ.45 வரையிலும் தயாரித்து வழங்குகிறோம். மூலப் பொருள்கள், வடிவமைப்பு, அளவுகளைப் பொருத்து விலை மாறுபடும் என்றார் அவர்.
 -இல. அன்பரசு
 படங்கள்: என்.ராமமூர்த்தி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com