நவரத்தினம்: என்எல்சியின் பசுமை மின் சக்தி

புதுப்பிக்கவல்ல ஆற்றல் எனப்படும் பசுமை மின் சக்தியை உற்பத்தி செய்வதன் மூலம், இயற்கை வளங்களைச் சேமித்து, அதன் மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதைக் குறைக்க வேண்டும் என்ற
நவரத்தினம்: என்எல்சியின் பசுமை மின் சக்தி

புதுப்பிக்கவல்ல ஆற்றல் எனப்படும் பசுமை மின் சக்தியை உற்பத்தி செய்வதன் மூலம், இயற்கை வளங்களைச் சேமித்து, அதன் மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் என்எல்சி இந்தியா நிறுவனம் பசுமை ஆற்றல் வளர்ச்சிக்கான நிகரற்ற பணியை செயல்படுத்தி வருகிறது.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் 1957-ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது நெய்வேலியில் மூன்று சுரங்கங்கள் மூலம் ஆண்டுக்கு 2.85 கோடி டன் பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுத்தும், நான்கு அனல் மின் நிலையங்கள் மூலம் மணிக்கு 28.90 லட்சம் யூனிட் (2890 மெகாவாட்) மின் உற்பத்தி செய்து, தமிழகம் மட்டுமல்லாது கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, புதுவை, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு மின் சக்தியையும் அளித்து வருகிறது.
மேலும், 1001.56 மெகாவாட் அளவிலான சூரியஒளி மின் திட்டத்தையும், 51 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தையும் இந்த நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம், பர்சிங்சரில் ஆண்டுக்கு 21 லட்சம் டன் பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுக்கும் சுரங்கத்தையும், 250 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தையும் செயல்படுத்தி வருகிறது. 62 ஆண்டுகளைக் கடந்து வைர விழா கண்ட என்எல்சி இந்தியா நிறுவனம் ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஓடிஸா, ஜார்க்கண்ட் போன்ற பகுதிகளில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது.
பசுமை ஆற்றல்: மத்திய அரசு 2022-ஆம் ஆண்டுக்குள் மணிக்கு 17.50 கோடி யூனிட் பசுமை ஆற்றலை உற்பத்தி செய்ய நீண்டகாலத் திட்டத்தை வகுத்துள்ளது.
அந்த முயற்சியில் என்எல்சி இந்தியா நிறுவனம் தனது பங்காக 4,251 மெ.வா. பசுமை மின் திட்டங்களை அமைக்க ஏற்பாடு செய்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம், கழுநீர்குளத்தில் 51 மெ.வா. காற்றாலை மின் நிலையம் ரூ.347.14 கோடியில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
நெய்வேலியில் உள்ள அலுவலகக் கட்டடங்களின் மொட்டை மாடிகள் உள்ளிட்ட இடங்களில் ரூ.782.24 கோடியில் மொத்தம் 141 மெ.வா. சூரியஒளி மின் நிலையங்கள், திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.5,343 கோடியில் அமைக்கப்பட்டு வரும் 1,209 மெகாவாட் சூரியஒளி மின் நிலையங்களில், 858 மெ.வா. மின் நிலையங்கள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. மீதமுள்ளவை விரைவில் உற்பத்தியைத் தொடங்க உள்ளன.
தெற்கு அந்தமான் தீவுகளில் மின் சக்தியை சேமிக்கும் வகையில் 8 MWHr பேட்டரி வசதியுடன் 20 மெ.வா. சூரிய ஒளி மின் நிலையத்துக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவற்றில் 2.50 மெ.வா அளவுக்கு மின்னுற்பத்தி தொடங்கியுள்ளது. வடக்கு அந்தமான் தீவுகளில் மின் சக்தியைச் சேமிக்கும் வசதியுடன், புனல் மின் நிலையத்துடன் இணைந்த 30 மெ.வா சூரியஒளி மின் திட்டம் அமைக்கப்பட உள்ளது.
நீர்தேக்கத்தில் மிதக்கும் சூரியஒளி மின் நிலையம்: நெய்வேலி புதிய அனல் மின் நிலையத்தின் நீர்தேக்கத்தில் 200 கி.வா. மிதக்கும் சூரியஒளி மின் நிலையம், நெய்வேலி பணிமனைக் கட்டடங்களின் மொட்டை மாடிகளில் 4 மெ.வா. சூரியஒளி மின் நிலையம் மற்றும் இந்திய நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் 3 ஆயிரம் மெ.வா. சூரியஒளி மின் நிலையம் அமைக்கும் திட்டங்களுக்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நீடித்த வளர்ச்சி என்ற கொள்கையை சிறப்பாகப் பின்பற்றி வரும் என்எல்சி இந்தியா நிறுவனம், இயற்கை வளங்களான பழுப்பு நிலக்கரி, நிலத்தடி நீரை வீணாக்காது, தேவைக்கு மட்டுமே எடுத்து, எஞ்சிய இயற்கை வளங்களை, எதிர்கால சந்ததிகளும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பசுமை ஆற்றல் வளர்ச்சிக்கான நிகரற்ற பணியைச் செயல்படுத்தி வருகிறது.
- ஜீவ.இராம.ஸ்ரீநிவாஸன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com